அன்பானவர்களே, வேதம், "நீர் என் உத்தமத்திலே என்னைத்தாங்கி, என்றென்றைக்கும் உம்முடைய சமுகத்தில் என்னை நிலைநிறுத்துவீர்" (சங்கீதம் 41:12) என்று கூறுகிறது. உத்தமம், தேவனுக்குரிய சுபாவமாயிருக்கிறது. அதற்கு சத்தியத்துடன் இருப்பது, நேர்மையாயிருப்பது, தேவனுக்கும் மனுஷருக்கும் முன்பாக உண்மையாயிருப்பது என்று அர்த்தம். நாம் உத்தமமாய் நடந்தால் ஆண்டவர், தம் கரத்தினால் நம்மை பிடித்து தமது சமுகத்திற்கு நெருக்கமாக வைத்துக்கொள்கிறார். உத்தமம், இருண்ட உலகத்தில் வெளிச்சமாக பிரகாசிப்பதால் மற்றவர்கள் நம் வாழ்க்கை வாயிலாக தேவ சமுகத்தை உணர முடியும். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து பரிபூரண உத்தமமுள்ளவராக வாழ்ந்தார். அவர் சத்தியத்தை பேசினார்; அன்பிலே நடந்தார்; பிதாவின் வாக்குத்தத்தம் ஒவ்வொன்றையும் காத்துக்கொண்டார். அதே பாதையில் நாம் நடந்தால், தேவன் நம்மை பாதுகாக்கிறவராக, வழிகாட்டுகிறவராக இருப்பார். உத்தமம், வெறுமனே நல்ல நடத்தை அல்ல; நமக்குள் இருக்கும் தேவ நீதியின் வெளிப்பாடு ஆகும்.
வேதம், "நீதிமான் தன் உத்தமத்திலே நடக்கிறான்; அவனுக்குப்பிறகு அவன் பிள்ளைகளும் பாக்கியவான்களாயிருப்பார்கள்" (நீதிமொழிகள் 20:7) என்று கூறுகிறது. உத்தமம் நமக்கு மட்டுமானதல்ல; எதிர்கால தலைமுறையினருக்குமானது என்று இந்த வசனம் கூறுகிறது. தகப்பனோ, தாயோ சத்தியத்தில், பரிசுத்தத்தில் நடக்கும்போது, அந்த உத்தமத்தின் ஆசீர்வாதங்கள் அவர்கள் பிள்ளைகள்மேலும் பாய்ந்து செல்லும். தங்கள் வார்த்தையை காத்துக்கொள்கிறவர்கள்மேல், யாரும் பார்க்காவிட்டாலும் நேர்மையாக நடப்பவர்கள்மேல் தேவன் அன்பாயிருக்கிறார். கர்த்தர்தாமே உத்தமத்தின் தேவனாயிருக்கிறார். அவர் ஒருபோதும் தம் வார்த்தையை மாற்றுவதில்லை; வாக்குத்தத்தத்தை மாற்றுவதில்லை. நாம் அவரை விட்டுவிட்டாலும் அவர் நம்மை நேசிக்கிறார்; நாம் கூப்பிடும்போது நமக்கு உதவி செய்ய உண்மையுள்ளவராயிருக்கிறார். இதை நம் வாழ்வில் நாம் கடைப்பிடிக்கும்போது, நாம் 'ஆம்' என்று கூறுவது 'ஆம்' ஆகவும், 'இல்லை' என்று கூறுவது 'இல்லை' ஆகவும் இருக்கும். நாம் செல்லுமிடமெங்கும் கிறிஸ்துவின் நற்கந்தத்தை சுமந்து செல்வோம்.
அன்பானவரே, உத்தமத்தினால் வரும் ஆசீர்வாதம் வல்லமையுள்ளதாயிருக்கிறது. வேதம், "உத்தம மார்க்கத்தாரோ அவருக்குப் பிரியமானவர்கள்" (நீதிமொழிகள் 11:3) என்று கூறுகிறது. நாம் நேர்மையாக நடக்கும்போது, தேவன்தாமே நம் தீர்மானங்களை வழிநடத்துவார்; தீங்கிலிருந்து நம்மை பாதுகாப்பார். நல்ல மனச்சாட்சியுடன் நடக்கிறவர்கள் கனப்படுத்தப்படுவார்கள்; அவர்களை பொய்யாய்க் குற்றஞ்சாட்டுகிறவர்கள் வெட்கமடைவார்கள் (1 பேதுரு 3:16). யூதாஸ், இயேசுவை மறுதலித்தபோது, உத்தமத்தில் அவனிடத்தில் காணப்பட்ட குறைபாடு மிகுந்த வெட்கத்தை அளித்தது. ஆனால், உத்தமமாய் நடக்கிறவர்கள் திடமாக நிற்பார்கள். அப்படிப்பட்டவர்கள் உண்மையுள்ளவைகளை, ஒழுக்கமுள்ளவைகளை, நீதியுள்ளவைகளை, அன்புள்ளவைகளை, நற்கீர்த்தியுள்ளவைகளையே எண்ணிக்கொண்டிருப்பார்கள் (பிலிப்பியர் 4:8). நாமும் இவ்வாறான உன்னத சிந்தையை, தெளிந்த மனச்சாட்சியை கொண்டவர்களாக சத்தியத்தினாலும் பரிசுத்தத்தினாலும் பிரகாசிக்கிறவர்களாயிருக்கவேண்டும் என்று தேவன் விரும்புகிறார். நம் எதிர்காலம் ஆசீர்வாதத்தினால் நிரம்பியிருக்கும்படி நம் வீட்டை, பிள்ளைகளை தம் உத்தமத்தினால் நிறைக்கும்படி தேவனிடம் கேட்போம்.
ஜெபம்:
அன்புள்ள பரம தகப்பனே, பரிபூரண உத்தமம் கொண்ட தேவனாய் நீர் இருக்கிறபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். ஆண்டவரே, உமக்கும் மனுஷருக்கும் முன்பாக நேர்மையாக நடப்பதற்கு எனக்கு உதவி செய்யும். என் வார்த்தைகள் உண்மையானவையாகவும், செயல்கள் தூய்மையானவையாகவும், என் உள்ளம் மாயமற்றதாயும் இருப்பதாக. என் வாழ்க்கையிலிருந்து எல்லா மாயத்தையும், பெருமையையும், வஞ்சகத்தையும் அகற்றும். உம் ஆவியானவர் என்னை நீதியின் பாதையில் வழிநடத்துவாராக. என் குடும்பத்தினருக்கும் பிள்ளைகளுக்கும் உத்தமத்தின் பலனை கொடுத்து ஆசீர்வதித்தருளும். எங்களை வெட்கமடையாமல் காத்து, எல்லோருக்கும் முன்பாகவும் கனத்துடன் வாழ்வதற்கு உதவி செய்யும். அனுதினமும் எங்கள் வாழ்வு கிறிஸ்துவின் சத்தியத்தையும் அன்பையும் வெளிக்காட்டுவதாக. நாங்கள் எப்போதும் உம்முடைய சமுகத்தால் வழிநடத்தப்பட்டு, தாங்கப்பட்டு, ஆசீர்வதிக்கப்படுவோமாக என்று இயேசுவின் வல்லமையான நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


