அருமையானவரே, உங்கள் கண்களின் வாயிலாக உங்களைப் பெலப்படுத்த தேவன் விரும்புகிறார். உங்கள் கண்களுக்கு வல்லமையுண்டு. வேதம், "உங்கள் கண்கள் காண்கிறதினாலும், உங்கள் காதுகள் கேட்கிறதினாலும், அவைகள் பாக்கியமுள்ளவைகள்" (மத்தேயு 13:16) என்று கூறுகிறது. உங்கள் கண்கள் காணத்தொடங்கும்போது, அவை பாக்கியம் பெறுகின்றன. மாம்சத்தில் நீங்கள் காண்பதோடு மட்டுமல்லாமல், ஆவியிலும் காணத் தொடங்கும்போது, தேவன் உங்களுக்கென ஆயத்தம்பண்ணியுள்ள எல்லா ஆசீர்வாதங்களையும் பெற்றுக்கொள்வீர்கள்.
உங்கள் கண்கள் முழு உடலுக்கும் விளக்காயிருக்கின்றன. வேதம், "கண்ணானது சரீரத்தின் விளக்காயிருக்கிறது; உன் கண் தெளிவாயிருந்தால், உன் சரீரம் முழுவதும் வெளிச்சமாயிருக்கும்," (மத்தேயு 6:22) என்று கூறுகிறது. உங்கள் கண்கள் தொடர்ந்து தீமையான காரியங்களை, இச்சைக்குரிய படங்களை, உலகப்பிரகாரமாக கவனத்தைச் சிதறப்பண்ணக்கூடியவற்றை போனிலோ, வேறு எதிலுமோ பார்த்துக்கொண்டிருந்தால் உங்கள் வாழ்க்கையினுள் இருள் புகுந்துவிடும். அதை யோபு, "என் கண்களோடே உடன்படிக்கைபண்ணின நான் ஒரு கன்னிகையின்மேல் நினைப்பாயிருப்பதெப்படி?" (யோபு 31:1) என்று விவரிக்கிறான். இன்று உங்கள் கண்களை இயேசுவுக்கு அர்ப்பணித்து, அவற்றை பாதுகாத்துக்கொள்ளும்படி அவரிடம் கேளுங்கள். அவரது வெளிச்சத்தை, சத்தியத்தை, ஜீவனை உடலுக்கு கொண்டுவருகிறவற்றை மட்டுமே உங்கள் கண்கள் காணட்டும். உங்கள் உடல் இருள் வாசம்பண்ணும் இடமாக இல்லாமல், பரிசுத்த ஆவியானவரின் ஆலயமாகவே இருக்கட்டும்.
இரண்டாவதாக, உங்கள் கண்கள் தேவனால் திறக்கப்பட்டால் நீங்கள் இரட்சிப்பை அனுபவிப்பீர்கள். இருளைவிட்டு ஒளியினிடத்திற்கும், சாத்தானுடைய அதிகாரத்தைவிட்டு தேவனிடத்திற்கும் திரும்பும்படிக்கு நீ அவர்களுடைய கண்களைத் திறக்கும்பொருட்டு, இப்பொழுது உன்னை அவர்களிடத்திற்கு அனுப்புகிறேன் என்று வேதம் கூறுகிறது (அப்போஸ்தலர் 26:18). சிமியோன், குழந்தையாயிருந்த இயேசுவை தன் கைகளில் ஏந்திக்கொண்டு, "உம்முடைய இரட்சணியத்தை என் கண்கள் கண்டது" என்று கூறினான் (லூக்கா 2:32). உங்கள் கண்கள் தேவனுடைய இரட்சிப்பின்மேல் வைக்கப்பட்டிருந்தால், உங்களுக்கு அழிவு வராது; தேவ சித்தத்தில் தொடர்ந்து நடப்பீர்கள்.
மூன்றாவதாக, தேவன் தம் பாதுகாப்பை காணும்படி உங்கள் கண்களைத் திறக்கிறார். எதிரி நாட்டு ராஜா, எலிசாவைப் பிடிக்க பெரிய சேனையை அனுப்பினான். தீர்க்கதரிசியோ சமாதானமாக இருந்தான். அவன் ஊழியக்காரன் மிகவும் பயந்தான். ஆனால் எலிசா, "கர்த்தாவே இவன் கண்களைத் திறந்தருளும்," என்று ஜெபித்தான். உடன்தானே வேலைக்காரன், அக்கினிமயமான இரதங்கள் எலிசாவையும் மலையையும் சுற்றியிருப்பதைக் கண்டான். தேவ பாதுகாப்பு முன்பே இருந்தது; ஆனால் அவனால் அதை இப்போதுதான் பார்க்க முடிந்தது. பின்பு எலிசா, எதிரி நாட்டு போர்ச்சேவகர்களுக்கெல்லாம் கண்மயக்கம் உண்டாக வேண்டுமென ஜெபித்தான். அவர்கள் கண்கள் மீண்டும் திறந்தபோது, அவர்கள் போய்விட்டனர்; திரும்பவேயில்லை (2 இராஜாக்கள் 6:17). இராஜா, ஞானத்தைத் தேடி எலிசாவிடம் வந்தான். அவ்வண்ணமே, தேவன் உங்களைச் சுற்றிலுமுள்ள தம் தெய்வீக பாதுகாப்பை காணும்வண்ணம் உங்கள் கண்களைத் திறப்பார். தேவன் உங்களுக்கென்று வைத்துள்ள நோக்கத்தை எந்த விரோதியும், எந்தப் பொல்லாத மனுஷனும், உலகத்தின் எந்த அதிகாரமும் தடுக்க முடியாது.
நிறைவாக, உங்கள் கண்கள் திறக்கப்படும்போது, தேவனுடைய அழைப்பைப் புரிந்துகொள்வீர்கள். சவுலின் கண்கள் திறக்கப்பட்டபோது, அவன் தேவனுடைய சிறந்த அப்போஸ்தலர்களுள் ஒருவனாய் விளங்கிய பவுலாய் மறுரூபமாக்கப்பட்டான் (அப்போஸ்தலர் 9:18). தேவன் தம் அழைப்பை, நோக்கத்தை, உங்கள் வாழ்வின் முடிவையும் வெளிப்படுத்துவார். உங்கள் ஆவிக்குரிய கண்கள் திறக்கப்படும்போது, நீங்கள் அவருடைய எண்ணத்தில் நடப்பீர்கள்; திடநம்பிக்கையோடும் வல்லமையோடும் அவரது சித்தத்தைச் செய்வீர்கள்.
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, ஆவிக்குரிய பார்வையின் வரத்துக்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். உம் வெளிச்சத்தையும், இரட்சிப்பையும், பாதுகாப்பையும், என் வாழ்க்கையில் நீர் வைத்திருக்கும் அழைப்பையும் காணும்படி என் கண்களைத் திறந்தருளும். இருளைக் கொண்டு வரும் எல்லா காரியங்களிலிருந்தும் என் கண்களைக் காத்தருளும். உம்மை கனப்படுத்தும் காரியங்கள்மேலேயே கவனம் வைக்க எனக்கு உதவும். என் உடல் உம் வெளிச்சத்தால் நிரம்பியதாக, பரிசுத்த ஆவியின் ஆலயமாகவே இருக்கட்டும். உம் சமுகத்தை உணர்ந்துகொள்ளவும், உம் பாதுகாப்பை நம்பவும், உம் எண்ணத்தில் உண்மையாய் நடக்கவும் ஏதுவாக என் அறிவுக்கண்களைத் திறந்தருளும். எல்லா இருளையும், பயத்தையும், குழப்பத்தையும் அகற்றும். உம் வல்லமையினால் என்னை மறுரூபமாக்கி, உம் பரிபூரண சித்தத்தை நிறைவேற்ற உதவவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


