எனக்கு அருமையான தேவ பிள்ளையே, "உமது கரம் என்னோடிருந்து, தீங்கு என்னைத் துக்கப்படுத்தாதபடிக்கு அதற்கு என்னை விலக்கிக் காத்தருளும்" (1 நாளாகமம் 4:10) என்பதே இன்றைய வாக்குத்தத்தம். யாபேஸ் இஸ்ரவேலின் தேவனை நோக்கி: தேவரீர் என்னை ஆசீர்வதித்து, என் எல்லையைப் பெரிதாக்கி, உமது கரம் என்னோடிருந்து, தீங்கு என்னைத் துக்கப்படுத்தாதபடிக்கு அதற்கு என்னை விலக்கிக் காத்தருளும் என்று வேண்டிக்கொண்டான்; அவன் வேண்டிக்கொண்டதை தேவன் அருளினார் என்று வேதம் கூறுகிறது.
அருமையானவர்களே, இது நேர்த்தியான வசனம். யாபேஸ் தேவனை நோக்கிக் கூப்பிட்டு, தன் வேண்டுதல்களையெல்லாம் அவர் முன்னே வெளியரங்கமாக வைத்தான். அவன், "தகப்பனே, என்னை ஆசீர்வதியும். என் எல்லையை விரிவாக்கும். உம் கரம் என்னோடிருக்கட்டும். எல்லா தீங்குக்கும் என்னை விலக்கிக் காத்தருளும்," என்று கேட்டான். இதுவே அவன் ஜெபக் குறிப்புகளாகும். அவ்வண்ணமே, நீங்களும் உங்கள் இருதயத்தை கர்த்தருக்கு முன்பாக ஊற்றிவிடலாம். நீங்கள் என்னவெல்லாம் சொல்ல விரும்புகிறீர்களோ, அதை ஆண்டவரிடம் பேசலாம்; அவருடன் நடக்கலாம்; நெருங்கிய ஐக்கியம் பாராட்டலாம். யாபேஸ் ஜெபித்தவண்ணம் தேவன் அவனை பரிபூரண ஆசீர்வதித்தார். வேதம், "கர்த்தர் உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்" (சங்கீதம் 121:7) என்று கூறுகிறது. அருமையானவர்களே, இந்த உலகம் தீமையால் நிறைந்திருக்கிறது. இந்த உலகத்தில் இருக்கிறவர்களை எப்போதும் நம்பிவிட முடியாது. மக்கள், உங்களிடம் ஒன்று கூறுவார்கள்; உங்களுக்குப் பின்னே முற்றிலும் வேறொன்றை சொல்லுவார்கள். இது பொல்லாத உலகம். ஆகவே, யாபேஸைப்போல கர்த்தருடன் நெருங்கி சஞ்சரிப்பதற்குக் கற்றுக்கொள்ளுங்கள்.
கர்த்தர்தாமே, நமக்கு எப்படி நாம் ஜெபிக்கவேண்டும்; எப்படி நம் பரம தகப்பனை நோக்கிப் பார்க்கவேண்டும்; எப்படி அவரது ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ளவேண்டும் என்று போதிக்கிறார். அருமையானவர்களே, தேவனுடைய வார்த்தையை வாசிக்கும் பழக்கமும், ஜெபத்தில் தேவனை நோக்கிப் பார்க்கும் பழக்கமும் உங்களுக்கு இருக்கிறதா? இவற்றை நீங்கள் செய்யும்போது, யாபேஸைப்போல் ஆசீர்வதிக்கப்படுவீர்கள். தாவீது, உண்மையாய் கர்த்தரைத் தேடினான். அவன் எப்படி தொடர்ந்து கர்த்தரைத் தேடினான் என்பதை வேதத்தில் வாசிக்கிறோம் (சங்கீதம் 61; 55:17). நானும்கூட, இக்கட்டுகள், பயங்கரங்கள் வழியாக கடந்து செல்ல நேர்ந்தபோது பல வேளைகளில் உண்மையாய் கர்த்தரைத் தேடியிருக்கிறேன். ஆதலால், யாபேஸைப்போல கர்த்தருடன் நெருங்கி சஞ்சரிக்கக் கற்றுக்கொண்டேன். உங்கள் இருதயத்தை அவருக்கு முன்பாக ஊற்றும்போது, உண்மையாய் அவரைத் தேடும்போது, அற்புதவிதமாய் ஆசீர்வதிக்கப்படுவீர்கள்.
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, இன்றைக்கு நீர் அருளியிருக்கும் அற்புதமான பிரசன்னத்திற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். தகப்பனே, இப்போது உம்மை நோக்கிப் பார்க்கும் அனைவரையும், உம் சகல மகத்துவத்தோடும் வந்து ஆசீர்வதிப்பீராக. யாபேஸை நீர் ஆசீர்வதித்ததுபோல, உமக்கு முன்பாக உண்மையாய் ஜெபிக்கும் அனைவரையும் ஆசீர்வதிப்பீராக. அவர்கள் வாழ்விலிருந்து எல்லா பிரச்னைகளையும் எடுத்துப்போடும்; இவர்கள் ஒவ்வொருவர்மேலும் உம் பலத்த கரத்தை வைப்பீராக. எல்லா இக்கட்டிலிருந்தும் பயத்திலிருந்தும் உபத்திரவத்திலிருந்தும் இவர்களை விடுவிப்பீராக. இவர்கள் உம் சமாதானத்தையும் பரிபூரண ஆசீர்வாதங்களையும் அனுபவிக்கட்டும். உம் வார்த்தையை வாசிக்கவும் உண்மையாய் உம்மை தேடவும் அனுதினமும் உம்மோடு சஞ்சரிக்கவும் இவர்களுக்கு உதவி செய்யும். எல்லா தீமையிலிருந்தும் இவர்களைக் காத்து, உம் பரிபூரண சித்தத்தின்படி வழிநடத்தவேண்டுமென்று இயேசுவின் வல்ல நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


