அன்பானவர்களே, இன்றைக்கான வாக்குத்தத்த வசனம், "நீ வலதுபுறத்திலும் இடதுபுறத்திலும் இடங்கொண்டு பெருகுவாய்" (ஏசாயா 54:3) என்பதாகும். கர்த்தர், நீங்கள் பெருகுவீர்கள்; விரிவடைவீர்கள் என்றும் வாழ்வின் எல்லாப் பக்கங்களிலும் ஆசீர்வாதங்களை சுதந்தரிப்பீர்கள் என்று வாக்குப்பண்ணுகிறார். சங்கீதக்காரன், "கர்த்தர் கபடற்றவர்களைக் காக்கிறார்; நான் மெலிந்துபோனேன், அவர் என்னை இரட்சித்தார்" (சங்கீதம் 116:16) என்று அறிக்கையிடுகிறான். பாவத்தின், வியாதியின், பிசாசின் பிடியின், துன்மார்க்கரின், இழப்புகளின், தோல்விகளின், பலவீனங்களின் கட்டுகள், நாம் உயரே எழுந்துவிடாமல் நம்மை தடுக்கின்றன. ஆனாலும், தேவன், "நீ என் தாசன். கட்டுகளிலிருந்து நான் உன்னை விடுவிப்பேன்," என்று அறிவிக்கிறார். அவருடைய கரம் உங்கள்மேல் வரும்போது, கட்டுகள் எல்லாம் அகன்று போகும்; ஆசீர்வாதத்தின் கதவு திறக்கப்படும்.
மேலும் கர்த்தர், "கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் யாக்கோபுடைய கூடாரங்களின் சிறையிருப்பைத் திருப்பி, அவன் வாசஸ்தலங்களுக்கு இரக்கஞ்செய்வேன்; நகரம் தன் மண்மேட்டின்மேல் கட்டப்பட்டு, அரமனை முன்போல நிலைப்படும். அவைகளிலிருந்து ஸ்தோத்திரமும் ஆடல்பாடலின் சத்தமும் புறப்படும்; அவர்களை வர்த்திக்கப்பண்ணுவேன், அவர்கள் குறுகிப்போவதில்லை, அவர்களை மகிமைப்படுத்துவேன், அவர்கள் சிறுமைப்படுவதில்லை. அவர்கள் பிள்ளைகள் முன்போலிருப்பார்கள்; அவர்கள் சபை எனக்கு முன்பாகத் திடப்படும்; அவர்களை ஒடுக்கின யாவரையும் தண்டிப்பேன்" (எரேமியா 30:18-20) என்று உறுதியளிக்கிறார்.
எவ்வளவு மகிமையான வாக்குத்தத்தம்! தேவன், உங்களை அரண்மனையைப்போல மறுபடியும் கட்டுவதாக, பெருகப்பண்ணுவதாக, சந்தோஷத்தாலும் கொண்டாட்டத்தாலும் நிரப்புவதாக கூறுகிறார். அவர் உங்கள் வீட்டை நிலைப்படுத்துவார்; ஒடுக்குகிறவர்களை தண்டிப்பார்; உங்கள் பிள்ளைகளைக் கூட்டிச் சேர்ப்பார். நம் அன்பு தகப்பனுடைய இருதயம் இதுவாகும். அவர் தம் பிள்ளைகளை வர்த்திக்கப்பண்ண விரும்புகிறார். உன்மேல் அன்பு வைத்து, உன்னை ஆசீர்வதித்து, உனக்குக் கொடுப்பேன் என்று உன் பிதாக்களுக்கு ஆணையிட்டுக் கொடுத்த தேசத்தில் உன்னைப் பெருகப்பண்ணுவேன் (உபாகமம் 7:13) என்று கர்த்தர் கூறுகிறார். நீங்கள் அவரை நேசிப்பதால், அவரை நாமத்தை கனப்படுத்துவதால், அவர் உங்களை எல்லா தடைகளுக்கும் மேலாக உயர்த்துவார்.
ஆகவே பிரியமானவர்களே, நீங்கள் இன்றைக்குக் காண்பதைக் குறித்து அதைரியப்படாதீர்கள். தேவன் சீர்ப்படுத்துகிறவராக, பெருகப்பண்ணுகிறவராக, விரிவடையச் செய்கிறவராக இருக்கிறார். அவர் வலப்புறமும் இடப்புறமும் உங்களை விரிவடையச் செய்வார். உங்கள் குடும்பத்தில், வேலையில், ஊழியத்தில், ஆவிக்குரிய வாழ்வில் உங்களை கட்டி வைத்திருக்கும் எல்லாச் சங்கிலிகளையும் அவர் உடைப்பார். தம் வாக்குத்தத்தங்களை நிறைவேற்ற தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறபடியால் அவரது வார்த்தையை நம்புங்கள்; விசுவாசத்தோடு ஜெபியுங்கள்.
ஜெபம்:
பரம தகப்பனே, என்னை ஆசீர்வதித்து பெருகப்பண்ணுவதாக நீர் வாக்குக்கொடுப்பதற்காக ஸ்தோத்திரிக்கிறேன். என்னை கட்டி வைத்திருக்கிற எல்லாச் சங்கிலியையும் உடைத்து என்னை விடுவியும். உம்முடைய தயவினால் என்னை வலப்புறமும் இடப்புறமும் பெருகப்பண்ணும். என் வாழ்க்கையை, என் குடும்பத்தை, என் எதிர்காலத்தை அரண்மனையைப்போல சீர்ப்படுத்தும். உம்முடைய அன்பில் என்னை நிலைப்படுத்தி, ஸ்தோத்திர பாடல்கள் என் வீட்டை நிரப்பும்படி செய்யவேண்டுமென இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.