அன்பானவர்களே, பூமியின் உயர்ந்த இடங்களில் உன்னை ஏறியிருக்கும்படி பண்ணுவதால் கர்த்தரில் மனமகிழ்ச்சியாயிருப்பீர்கள் என்று தேவன் வாக்குக்கொடுக்கிறார் (ஏசாயா 58:14). ஆம், நீங்கள் எல்லாவற்றிலும் ஜெயம்பெறுவீர்கள். ஆகவே, பயப்படாதிருங்கள். உங்கள் வாழ்க்கையில் சந்தோஷம் நிரம்பியிருக்கும். உங்கள் வாழ்க்கை கெம்பீரமான, உச்சிதமான ஆசீர்வாதங்கள் கொண்டதாக இருக்கும். இயேசுவின் நாமத்தில் இந்த ஆசீர்வாதத்தை உங்கள்மேல் உரைக்கிறேன்.

கர்த்தருக்குள்ளான இந்த சந்தோஷத்தை எப்படி பெற்றுக்கொள்வது? நீங்கள் பாவத்தை விட்டு இயேசுவிடம் மனந்திரும்பும்போது, பரலோகத்தில் சந்தோஷம் உண்டாயிருக்கும் என்று வேதம் சொல்லுகிறது (லூக்கா 15:7,10). அந்த சந்தோஷம் உங்கள் இருதயத்தை நிரப்பும். இன்றைக்கு. இயேசுவுக்கும் உங்களுக்கும் இடையேயான உறவில் தடை ஏதும் காணப்பட்டால் அதை மன்னிக்கும்படி அவரிடம் கேளுங்கள். குடும்பத்தில் அல்லது யாருடனாவது பிரிவினை காணப்பட்டால் ஒப்புரவாகி, மன்னியுங்கள். யாராவது உங்கள் ஆஸ்திகளை அநியாயமாய் பறித்துக்கொண்டால் அதைக் கொடுத்துவிடுங்கள் என்று இயேசு கூறியிருக்கிறார். தேவன் அதை உங்களுக்கு இரட்டிப்பாய் திரும்ப கொடுப்பார். மக்கள் உங்களிடமிருந்து எவற்றையெல்லாம் பறித்துக்கொண்டார்களோ, அவற்றை மறுபடியும் ஆரம்பியுங்கள். தேவன் உங்களை வர்த்திக்கப்பண்ணுவார்.

தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றை நடத்திக்கொண்டிருந்த ஒருவரை ஒரு மனிதர் ஏமாற்றினார். அவர், "நான் தற்கொலை செய்துகொள்ளவேண்டும். வேறு வழியில்லை," என்று கூறினார். அப்படிப்பட்ட சூழலில், ஒருவர் அவரை என் தந்தை டி.ஜி.எஸ். தினகரனிடம் அழைத்து வந்தார். என் தந்தை அவருக்காக ஜெபித்தார். ஆண்டவர், "எதையெல்லாம் இழந்தாரோ அதை விட்டுவிடும்படி கூறு. இன்னொரு தொலைக்காட்சி நிறுவனத்தை ஆரம்பிக்கும்படி சொல். நான் அவரை இரட்டிப்பாக ஆசீர்வதிப்பேன்," என்று சொன்னார். அவர் கிறிஸ்தவரல்ல. ஆனாலும், ஆண்டவர் இயேசு என் தந்தை மூலம் கூறிய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்து புதிதாக ஒரு தொலைக்காட்சியை ஆரம்பித்தார். தேவன் அதை எட்டு மடங்காக ஆசீர்வதித்தார். அவர் மிகவும் செழித்தார். அவர் ஒரு வங்கியின் இயக்குநரானார். காருண்யா கல்வி நிறுவனத்தைக் கட்டுவதற்கு அவர்தான் முதல் கடன் வழங்கி என் தந்தைக்கு உதவினார். தேவன் உங்களுக்கும் உதவுவார். தமக்குள் களிகூரும் அனுபவத்தை தருவார். நீங்கள் மனந்திரும்பும்போது, பூமியின் உயர்ந்த இடங்களில் ஏறியிருக்கும் கிருபையையும், தேவனுடைய வார்த்தைக்குச் செவிகொடுத்து, அவர் செய்ய விரும்புகிறவற்றை செய்யும்படியும் நடத்துவார். இந்த ஆசீர்வாதம் உங்கள்மேல் வரவேண்டும் என்றும், தேவன், எல்லா இழப்புகளையும் மேற்கொண்டு, பெரிய வெற்றி பெறச் செய்யும்படியும் ஜெபிக்கிறேன்.

ஜெபம்:
அன்பின் பரம தகப்பனே, உம்மில் என்னை பூரண சந்தோஷம் அனுபவிக்க செய்வீர் என்றும், பூமியின் உயர்ந்த இடங்களில் ஏறியிருக்கப்பண்ணுவீர் என்றும் வாக்குக்கொடுத்ததற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். இப்போதும் ஆண்டவரே, மனந்திரும்பிய இருதயத்துடன் உம்மிடம் வந்து, எல்லா பாவத்தையும் மன்னிக்கும்படியும், உமக்கும் எனக்கும் இடையே இருக்கிற எல்லா தடையையும் அகற்றவேண்டும் என்றும் கேட்கிறேன். பரலோக சந்தோஷத்தால் என் இருதயத்தை நிரப்பும். என் வாழ்க்கையில் ஏற்பட்ட இழப்புகள் எல்லாவற்றையும் திரும்ப தாரும். வேதனை இருக்கிற இடத்தில் சுகத்தையும், பயம் இருக்கிற இடத்தில் தைரியத்தையும் அளித்தருளும். என் வாழ்க்கை, தெய்வீக சந்தோஷத்தாலும் ஜெயத்தாலும் பரிபூரண ஆசீர்வாதத்தாலும் நிறைந்திருக்க வேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.