அன்பானவர்களே, இன்றைக்கு, "கர்த்தாவே, எங்களுக்குச் சமாதானத்தைக் கட்டளையிடுவீர்; எங்கள் கிரியைகளையெல்லாம் எங்களுக்காக நடத்திவருகிறவர் நீரே" (ஏசாயா 26:12) என்ற வசனத்தை தியானிப்போம். இந்த வசனம், தேவ ஜனங்கள், "கர்த்தர்தாமே எங்களுக்கு சமாதானத்தை அருளினார்," என்று எல்லா நன்றியையும் அவருக்குச் செலுத்தும் அருமையான பாடலாகும். முந்தைய வசனத்தில், அவர்கள், "கர்த்தாவே, உமது கை ஓங்கியிருக்கிறது, அவர்கள் அதைக் காணாதிருக்கிறார்கள்; ஆனாலும் உமது ஜனத்துக்காக நீர் கொண்ட வைராக்கியத்தைக்கண்டு வெட்கப்படுவார்கள்; அக்கினி உம்முடைய சத்துருக்களைப் பட்சிக்கும்" என்று பாடுகிறார்கள். இதை, தேவன் செய்த எல்லா அற்புதங்களையும் கண்ட பின்னரும் அவரிடம் திரும்பாத சத்துருக்களைப் பார்த்து பாடினர். ஆனாலும், தேவன் தம் ஜனங்களுக்காக சகல யுத்தங்களையும் செய்து, அவர்களுக்கு சமாதானத்தை அருளினார். ஆம், ஒவ்வொரு முறை நாம் யுத்தத்திற்குச் செல்லும்போதும், தேவனே நமக்காக யுத்தம் செய்யப்போகிறார் என்பதை விசுவாசிக்கவேண்டும். "தேவனே, எனக்காக நீரே வழக்காடும்," என்று எல்லாவற்றையும் அவரிடம் ஒப்படைத்து விட வேண்டும். அப்போது, அவர் நமக்காக எல்லாவற்றையும் செய்வார்.
கர்த்தர், எப்படி யுத்தம் செய்யவேண்டும் என்பதை அறிவார். ஆகவேதான் தாவீது, "எனக்காக யாவையும் செய்து முடிக்கப்போகிற தேவனாகிய உன்னதமான தேவனை நோக்கிக் கூப்பிடுவேன்," (சங்கீதம் 57:2) என்று கூறுகிறான். அன்பானவர்களே, அவர் மாத்திரமே உங்களுக்காக வழக்காடுகிறவர். நீங்கள் உங்கள் யுத்தங்களை நடப்பிக்கவேண்டாம். தாவீதைப்போல, தேவனை ஸ்தோத்திரித்து, கர்த்தாவே, நீரே எனக்காக எல்லாவற்றையும் செய்யப்போகிறீர் என்று கூறுங்கள். மரியாளும் மார்த்தாளும் தங்கள் சகோதரன் லாசருவுக்காக அழுதபோது இயேசு அவர்களிடம் வந்தார். அவர்களுடன் அமர்ந்து அழுதார்; பின்பு கல்லறைக்குச் சென்று, லாசருவை உயிரோடு எழுப்பினார். சத்துரு, அவர்கள் வாழ்வில் இருளை, துக்கத்தை, அழிவை கொண்டு வரவும், இயேசுவை நசுக்கவும் விரும்பினான். ஆனால், இயேசு இடைப்பட்டார். அவர், அவர்களோடு அழுதாலும், அவனை உயிர்த்தெழப்பண்ணி, ஜெயம் பெறச் செய்தார்; நிறைவாக, சமாதானம் அவர்கள் உள்ளங்களை நிரப்பியது.
அன்பானவர்களே, நீங்களும் மரியாளையும் மார்த்தாளையும்போல துயரத்தின் வழியாக கடந்து சென்று கொண்டிருக்கலாம். ஆனால், இயேசு இடைப்படுவார். அவர் உங்களுக்கு ஆறுதல் அளித்து, உங்களுக்காக வழக்காடுவார். நானும் துக்கத்தினூடாக கடந்துசென்றேன்; என் குடும்பத்தில் அன்பானவர்களை இழந்தேன். ஆனாலும், ஆண்டவர் தம் ஆவியினால் என்னை நிறைத்தார்; இன்று என்னை பயன்படுத்தி அநேகரின் கண்ணீரைத் துடைக்கிறார். அவர் என் வாழ்க்கையை கட்டி, இரட்டிப்பான பங்கை அளித்து என்னை ஆசீர்வதித்தார். அவ்வாறே, ஆண்டவர் உங்களுக்காக யாவற்றையும் செய்துமுடிப்பார். உங்கள் வாழ்க்கையில் சகலமும் நன்மைக்கேதுவாகவே நடக்கும். ஒருவேளை, இன்று நீங்கள் அழுதுகொண்டிருக்கலாம்; ஆனாலும் தேற்றப்படுவீர்கள். துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள். குடும்பத்தில் சண்டைகள், பிரிவினைகள், சரியாக புரிந்துகொள்ளாமை ஆகியவை சமாதானத்தைக் குலைத்துப்போடலாம். ஆனால், இன்று ஆண்டவர் சமாதானத்தை அருளுகிறார். ஒவ்வொரு வீட்டிலும் நான் சமாதானத்தை உரைக்கிறேன். பிரிவினைகள், துக்கம் இனி இல்லை. கர்த்தர் உங்களுக்காக வழக்காடுவார்; உங்கள் சத்துருக்களுக்கு விரோதமாக தம் கரத்தை உயர்த்துவார்; சமாதானத்தை அருளுவார். கர்த்தர் எனக்காக யாவற்றையும் செய்து முடித்தார் என்று நீங்கள் அறிக்கைபண்ணுவீர்கள்.
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, நீரே எனக்காக யுத்தஞ்செய்து, என் வாழ்வில் சமாதானத்தை அருளுகிறீர். எல்லா யுத்தத்தையும், எல்லா பாரத்தையும், எல்லா துக்கத்தையும் உம் கரங்களில் ஒப்படைக்கிறேன். தேவனே, எனக்காக வழக்காடும்; யாவற்றையும் எனக்காகச் செய்து முடித்தருளும். நான் பெலவீனப்படும்போது, எனக்குப் பெலனாய் இருப்பீராக; நான் உபத்திரவப்படும்போது, எனக்கு சமாதானமாய் இருந்தருளும். என் வாழ்விலும் குடும்பத்திலும் இருந்து எல்லா பிரிவினை, வேதனையையும் இளைப்பாறுதலின்மையும் அகற்றிப்போடும். என்னை உம் ஆறுதலினால் நிறைத்து, நீரே ஆளுகை செய்கிறீர் என்ற நிச்சயத்தை தந்தருளும். எனக்காக யாவற்றையும் நீர் செய்து முடித்ததற்கு சாட்சியாக என் வாழ்க்கை விளங்கவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


