அன்பானவர்களே, ஆண்டவரிடமிருந்து ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளும்படி இன்று அவரோடு இருப்பது இன்பமாயிருக்கிறது. வேதம், "உமது வசனத்தைத் தியானிக்கும்படி, குறித்த ஜாமங்களுக்கு முன்னே என் கண்கள் விழித்துக்கொள்ளும்" (சங்கீதம் 119:148) என்று கூறுகிறது. தேவனுடைய வாக்குத்தத்தங்களை தியானிப்பதற்கு விழிப்புடன் காத்திருக்கும் சங்கீதக்காரனின் வாஞ்சையை பாருங்கள். தேவனுடைய வாக்குத்தத்தங்கள் அருமையானவை; அவற்றுக்காக காத்திருக்க பெறுமதியுள்ளவை. ஒரு குடும்பத்தில், பெற்றோர் திடீரென்று, தங்கள் பிள்ளைகளை விட்டுவிட்டு பயணம் செய்ய நேரிட்டது. பிள்ளைகள், "அம்மா, அப்பா, நாங்களும் உங்களுடன் வருவோம். உங்களை விடமாட்டோம்," என்று சொன்னார்கள். ஆனால் பெற்றோர், "உங்களுக்கு தேர்வுகள் இருக்கின்றன. ஆகவே, நீங்கள் நம் சொந்தக்காரர்களோடு இருந்து தேர்வுகளை எழுதுங்கள்," என்று கூறினார்கள். பிள்ளைகள், "ஆனால் வரும்போது நீங்கள் பொம்மைகளையும் வெகுமதிகளையும் வாங்கி வரவேண்டும்," என்றார்கள். பெற்றோர், "சரி" என்று ஒத்துக்கொண்டதும், பிள்ளைகள், "உண்மையாக வாங்கி வரவேண்டும்," என்றார்கள். "உண்மையாக வாங்கி வருவோம். கவலைப்படாமல் போய் படியுங்கள்," என்று சொன்னார்கள்.
பெற்றோர் திரும்பியபோது, அவர்களைப் பார்த்த பிள்ளைகள், ஓட்டமாய் ஓடி, தங்களுக்காய் அவர்கள் கொண்டு வந்திருக்கும் வெகுமதிகளை பார்க்க சென்றார்கள். தங்கள் வாக்கை அவர்கள் காப்பாற்றி, கொண்டு வந்த வெகுமதிகளையெல்லாம் காட்டினார்கள். வெவ்வேறு ஆடைகள், வித்தியாசமான சாக்லேட்கள், பிஸ்கட்டுகள், பொம்மைகள் - என ஒரு வெகுமதியை அல்ல; பலவற்றைக் காட்டினார்கள். இவ்வாறே ஆண்டவர் நமக்குக் கொடுத்திருக்கிற வாக்குத்தத்தத்தை கனப்படுத்துகிறார். அவர் பூரணமாக, தம் வாக்கை நிறைவேற்றுகிறார். என் தாத்தாவை ஆண்டவர் முழு நேர ஊழியத்திற்கு அழைத்ததை நான் நினைவுகூருகிறேன். அவர் வங்கியில் வேலை பார்த்துக்கொண்டே மாலை வேளைகளில் ஊழியம் செய்து வந்தார். ஆண்டவர் அவரை அழைத்தபோது தன் வங்கி வேலையை விட்டு விட்டு முழு நேர ஊழியத்திற்கு வர தயங்கினார்.
அந்தத் தருணத்தில் ஆண்டவர் அவருக்கு ஒரு தெய்வீக அனுபவத்தைக் கொடுத்து, "நீ செல்லுமிடத்திற்கெல்லாம் நான் வர ஒப்புக்கொண்டால் நீ எனக்கு ஊழியம் செய்ய ஒப்புக்கொள்வாயா?" என்று முகமுகமாய் கேட்டார். என் தாத்தா, "சரி ஆண்டவரே," என்று கூறினார். ஆண்டவர் ஒரு சுருளில், "இயேசுவாகிய நான், தினகரன் செல்லுமிடங்களுக்கெல்லாம் உடன் செல்ல வாக்குக்கொடுக்கிறேன்," என்று எழுதி கையெழுத்திட்டார். இன்றும் தலைமுறை தலைமுறையாய் அந்த வாக்குத்தத்தத்தை நிறைவேற்றி வருகிறார். ஊழியத்தில் காரியங்கள் எப்படி நடக்கின்றன என்பதற்கு இதுதான் காரணம். அவர் எங்களை தமக்கு நெருக்கமாக வைத்து, ஊழியத்திற்கு வாசல்களை திறந்தார். நாங்கள் செல்லும்போதெல்லாம் இயேசு, தம்மை ஜனங்களுக்குக் காட்டினார். அவர் வேதத்திலிருந்து காட்டும் வாக்குத்தத்தங்களை அனுதினமும் நிறைவேற்றுவார். தேவனுடைய வாக்குத்தத்தங்களை வாஞ்சிக்கும் ஓர் இதயத்தை அவரிடம் கேட்போமா?
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, நீர் வாக்குத்தத்தத்தை காக்கிற கர்த்தராயிருக்கிறீர். உம் வாக்குத்தத்தங்கள் வல்லமையுள்ளவை. ஒவ்வொன்றுக்கும் என் வாழ்க்கையை மாற்றுவதற்கான வல்லமை உண்டு. நான் நினைத்துப்பார்ப்பதற்கும் மேலாய் என்னை பூரணமாக ஆசீர்வதித்தருளும். உம்முடைய வாக்குத்தத்தங்களுக்குச் செவிகொடுப்பதற்கும், அனுதினமும் உம் வார்த்தையை வாசிப்பதற்கும், நீர் எனக்கு வைத்திருக்கும் செய்தியைப் பெற்றுக்கொள்வதற்குமான இருதயத்தை தயவாய் எனக்குத் தந்தருளும். ஆண்டவரே, வாசிப்பதற்காக உம் முன்னே நான் அமரும்போது என் கண்களையும் காதுகளையும் திறந்தருளும். உம் வாக்குத்தத்தத்திலுள்ள இரகசியங்களை எனக்கு வெளிப்படுத்தும். தனிப்பட்டவிதத்தில் என்னோடு பேசும். உம் வசனம் என்னை வழிநடத்தும்போது உம் சமுகத்தை நான் உணரட்டும். என் வாழ்க்கையை குறித்து நீர் உரைத்திருக்கும் எல்லா வாக்குத்தத்தமும் உண்மையாகட்டும். நாள்தோறும் நம்பிக்கையோடும் எதிர்பார்ப்போடும் உம் வாக்குத்தத்தங்களை பார்க்கிறேன். இன்று வாஞ்சையுள்ள இருதயத்தை பெற்றுக்கொள்கிறேன். உண்மையுள்ளவராக இருப்பதற்கு உம்மை ஸ்தோத்திரித்து விலையேறப்பெற்ற இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


