எனக்கு அன்பானவர்களே, ஆண்டவர் உங்களை மீட்டுக்கொண்டு, தம் சொந்த ஜனங்களாக வைக்கிறார். பிசாசின் கையிலிருந்து, பாவத்திலிருந்து, துன்மார்க்கரும் வஞ்சகருமான மக்களிடமிருந்து அவர் உங்களை மீட்டுக்கொண்டுள்ளார். இன்றைய வாக்குத்தத்த வசனம், "பயப்படாதே; உன்னை மீட்டுக்கொண்டேன்; உன்னைப் பேர்சொல்லி அழைத்தேன்; நீ என்னுடையவன்" (ஏசாயா 43:1) என்று கூறுகிறது. எவ்வளவு பெரிய ஆசீர்வாதம்! உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக. கர்த்தர், "நீ என் பிள்ளை. நான் உன்னை மீட்டுக்கொண்டேன். நீ எனக்குச் சொந்தமானவன்(ள்). உன்னை நான் யாருடைய கையிலும், எந்தப் பிரச்னையின் பிடியிலும் விடமாட்டேன். பேர்சொல்லி உன்னை அழைத்திருக்கிறேன்; எனக்குச் சொந்தமாக வைத்திருக்கிறேன்; உன்மேல் அக்கறையாயிருப்பேன்," என்று கூறுகிறார்.

இன்று ஆண்டவர் இந்த ஆசீர்வாதத்தை உங்களுக்குக் கொடுக்கிறார். அதை விசுவாசித்து, அவரை ஸ்தோத்திரியுங்கள்; இந்த ஆசீர்வாதத்தை அனுபவித்திடுங்கள். ஆண்டவரால் மீட்கப்படுவது என்பதன் அர்த்தம் என்ன? வேதம், "அவருடைய கிருபையின் ஐசுவரியத்தின்படியே இவருடைய இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது" (எபேசியர் 1:7) என்று கூறுகிறது. நாம் பாவத்தில் வாழ்வோமானால், பிசாசின் கீழ் இருப்போம். ஆனால், ஆண்டவர் நம்மை பாவத்திலிருந்து மீட்டுக்கொண்டு, அவருடைய பிள்ளைகளாக மறுரூபப்படுத்துகிறார். பாவமறியாத இயேசு, நமக்காக தம்மையே சிலுவையில் கொடுத்தார். அவருடைய விலையேறப்பெற்ற இரத்தம் நம்மை சகல பாவங்களும் நீங்கும்படி சுத்திகரிக்கிறது.
இயேசுவிடம் நம்மை அர்ப்பணித்து, "ஆண்டவரே, உம் இரத்தத்தால் என் பாவங்களைக் கழுவிடும். என் எண்ணங்களையும் செயல்களையும் சுத்திகரித்திடும். என் பாவ பழக்கங்களையெல்லாம் எடுத்துப்போடும்," என்று ஜெபிக்கும்போது, அவர் நம்மை கழுவி, மறுரூபமாக்குகிறார். பாவ சுபாவம் காணாமற்போகிறது; இயேசுவின் சாயல், சுபாவம், பரிசுத்தம் நம் வாழ்வை நிரப்ப தொடங்குகிறது. நம் சரீரம் அவரது ஆலயமாகிறது; நம் வாழ்க்கை மறுரூபமாக்கப்படுகிறது. உங்கள் வாயை திறந்து, "ஆண்டவரே, என்னை மீட்டுக்கொள்ளும்; உம் பிள்ளையாக என்னை மீட்டுக்கொள்ளும். என்னை உமக்குச் சொந்தமானவனா(ளா)க மீட்டுக்கொள்ளும்," என்று கூறுங்கள். கேட்கிறவன் எவனும் பெற்றுக்கொள்கிறான். இயேசுவின் நாமத்தில் கேளுங்கள். அவர் உங்களை மீட்டுக்கொண்டு தம் பிள்ளையாக மறுரூபப்படுத்துவார்.

மீட்பின் ஆசீர்வாதங்கள்
முதலாவது
நீங்கள் சாபத்திலிருந்து மீட்கப்படுகிறீர்கள். பிசாசு, பாவம் இவற்றின் கீழ் நாம் வாழ்வது சாபத்தைக் கொண்டு வருகிறது. பணம், ஆசைகள், இச்சை, ஏனைய பிற பாவ காரியங்கள் சாபங்களாகின்றன. ஆனால், ஆண்டவர் தம் பிள்ளைகளை சாபத்திலிருந்து மீட்டுக்கொள்கிறார் (கலாத்தியர் 3:13).

இரண்டாவதாக, ஆண்டவர் உங்களுக்கு ஞானத்தை, நீதியை, பரிசுத்தத்தை அளிக்கிறார். கிறிஸ்துவே நம் ஞானமாக, நீதியாக, பரிசுத்தமாக, மீட்பாக மாறுகிறார் (1 கொரிந்தியர் 1:30,31).  மரணத்திற்கு செல்லும் வழிகளுக்கு மாறாக, நாம் ஆண்டவரின் மீட்பை ஞானத்தை, நீதியை, பரிசுத்தத்தை, நம்பிக்கையை பெற்றுக்கொள்கிறோம்.

மூன்றாவது, ஆண்டவர் உங்களை பாடுகளிலிருந்தும் துக்கத்திலிருந்தும் மீட்கிறார். கர்த்தர், தன்னை வாழ்வின் எல்லா இக்கட்டுகளிலிருந்தும் எப்படி மீட்டுக்கொண்டார் என்று தாவீது கூறுகிறான் (1 இராஜாக்கள் 1:29,30). அவ்வண்ணமே, கர்த்தரால் உங்களையும் இக்கட்டுக்கு விலக்கிக் காக்கவும், மீட்டுக்கொள்ளவும் முடியும். உங்களுக்கு விரோதமாக தவறான அல்லது குற்றச்செயல்கள் இழைக்கப்பட்டாலும் அவரால் உங்களைக் காப்பாற்றி பாதுகாப்பதற்கு முடியும்.

நான்காவதாக, நீங்கள் பரலோகத்தை அடையும்படி அவர் உங்களை தம் மீட்கப்பட்ட பிள்ளையாக வைத்துக்கொள்கிறார். யோபு, "என் மீட்பர் உயிரோடிருக்கிறார்...அந்நிய கண்கள் அல்ல, என் கண்களே அவரைக் காணும்" என்று கூறுகிறான் (யோபு 19:25-27).

ஆண்டவர்தாமே இந்தக் கிருபையை உங்களுக்கு அருளிச்செய்து, நீங்கள் பரலோகத்தை அடையும்வரை மீட்கப்பட்ட தம் பிள்ளையாகக் காத்துக்கொள்வாராக. ஆகவே, இயேசுவின் பிள்ளையாக சந்தோஷத்துடன் வாழுங்கள். பரிசுத்தத்தில் வாழுங்கள்; ஞானத்தினாலும் மகிமையாலும் நிரப்பப்பட்டிருங்கள்; சாபத்திலிருந்து விடுதலையை அனுபவியுங்கள்; பரலோக நம்பிக்கையுடன் வாழுங்கள். ஆண்டவரின் மீட்பின் ஆசீர்வாதம் உங்கள்மேல் இறங்குவதாக. உங்கள் வாழ்வை அவர் கரங்களில் ஒப்படையுங்கள்; அவரது பாக்கியத்தை அனுபவித்திடுங்கள்.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, விலையேறப்பெற்ற உம் இரத்தத்தால் என்னை மீட்கிறதற்காகவும், உம் பிள்ளையென்று பேர்சொல்லி அழைக்கிறதற்காகவும் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். பாவத்திலிருந்து, சாபத்திலிருந்து, பாவ பழக்கவழக்கங்களிலிருந்து, இச்சையிலிருந்து, தவறான உறவுகளிலிருந்து, பாடுகளிலிருந்து, எல்லாவித துக்கத்திலிருந்தும் என்னை மீட்டுக்கொள்ளும். என் எண்ணங்களையும் செயல்களையும் சுத்திகரித்தருளும்; என்னை பரிசுத்தப்படுத்தும்; என்னை உம் பரிசுத்த ஆலயமாக மறுரூபப்படுத்திடும். ஞானத்தினாலும் நீதியினாலும் பரிசுத்தத்தினாலும் பரலோக நம்பிக்கையாலும் என்னை நிரப்பிடும். தீங்கானதும் தவறானதுமான செயல்களிலிருந்து என்னை பாதுகாத்துக்கொள்ளும். என் குடும்பத்தை மீட்டுக்கொண்டு, உம் மகிமைக்காக எங்களைச் செழிப்பாக்கும். மீட்கப்பட்ட உம் பிள்ளையாக வாழ்ந்து பரலோகத்தை வந்தடைய உதவும். உம் ஆசீர்வாதம், தயை, பரிபூரணம், கிருபை இன்று எங்கள்மேல் தங்கவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.