அன்பானவர்களே, இன்று ஆண்டவர் பெரிய வெற்றியை நமக்குத் தருவார். "அவர் தம்முடைய ஜனங்களுக்கும் தம்முடைய பரிசுத்தவான்களுக்கும் சமாதானம் கூறுவார்" (சங்கீதம் 85:8) என்று வேதத்தில் வாசிக்கிறோம். இந்த வசனம் தம்முடைய பரிசுத்தவான்களுக்கு என்று கூறுகிறது. அது அவருக்கு ஊழியம் செய்கிறவர்களைக் குறிக்கிறது. ஆம், நமக்கு தேவன், பிரச்னைகளின் நடுவில் சமாதானத்தையும் தெளிவையும் அருளுகிறார். அவரது சமாதானத்தின் நினைவுகள் நமக்கு வருகின்றன. அப்படியில்லாவிட்டால், நம் முடிவு அந்தோ என்று அங்கலாய்க்கக்கூடியதாக இருக்கும். பிரச்னைகளிலிருந்து வெளியே வருவதற்கு நாம் மனுஷீக வழிகளை நோக்குகிறோம். தவறான வழிகளைக்கூட தேடுகிறோம்; பதறியபடி காரியங்களைச் செய்வதால் பெருங்குழப்பத்தில் சிக்கிக்கொள்கிறோம். நம் முயற்சி அப்படி முடிந்துபோவதை ஆண்டவர் விரும்பவில்லை. அவர் தம் திட்டத்தின்படி மாத்திரமே நாம் தெளிவுடன் தொடரவேண்டும் என்று விரும்புகிறார். ஆகவே, நமக்கு தம் சமாதானத்தை தருகிறார்; அந்த சமாதானத்திலிருந்து அவரது ஞானத்தையும் தருகிறார்.

காருண்யாவில் எங்களுக்கு இப்படியே நடந்தது. அங்கீகாரத்திற்குரிய தரத்தை அளிப்பதற்காக ஓர் ஆணையத்தை அவர்கள் அனுப்பினார்கள். அந்தக் குழுவினர் வந்தபோது, அவர்கள் மிகவும் ஆக்ரோஷமாக, காருண்யாவில் என்ன இருக்கிறது? இது என்ன? உங்களிடம் என்ன இருக்கிறது? என்றெல்லாம் கேட்டார்கள். உண்மையிலேயே நம்மிடம் தரம் இருக்கிறதா என்பதை காண அவர்கள் எல்லா பகுதிகளிலும் நெருக்கினர். அவர்கள் அதட்டுவதுபோல கேட்டாலும், நம் குழுவினர் பொறுமையாக காருண்யாவைக் குறித்த உண்மைகளை காட்டினர். இறுதியாக வளாகத்தை அவர்கள் பார்த்தபோது, அங்கிருக்கும் தரத்தையும் அதன் வாயிலாக கிடைத்திருக்கும் முடிவுகளையும் பார்த்து ஆச்சரியமடைந்தனர். மிகவும் உயர்வாகப் பேசினர். நாங்கள் உயர்ந்த தர நிலையை எதிர்பார்த்திருந்தோம். ஆனால், அவர்கள் இன்னொரு ஆணைய குழுவை அனுப்புவதாகக் கூறினார்கள். ஒரு சிலருக்கே அப்படிப்பட்ட அனுபவம் இருக்கும். அவர்கள், நடைமுறை முதல்முறை சரியாக பின்பற்றப்பட்டுள்ளது. நீங்கள் இன்னும் அநேக மாதங்கள் காத்திருக்கவேண்டும். இன்னொரு குழு வரும் என்று தெரிவித்தார்கள். என்னுடைய பொறுமையில் உங்களைக் காத்துக்கொள்ளுங்கள்; என்னுடைய சமாதானத்தில் ஜெபியுங்கள் என்று ஆண்டவர் கூறினார். ஆகவே நாங்கள் குழுவாக உபவாசித்து ஜெபித்தோம். ஆண்டவர் காருண்யாவின் எதிர்காலத்தைக் குறித்து தாம் வைத்திருக்கும் திட்டங்களைக் குறித்துத் தம் வார்த்தைகள் வாயிலாக சுத்தமாக, நேரடியாக எங்களுடன் பேசினார். நாங்கள் எப்படி இருக்கவேண்டும் என்றும் கூறினார். அதைக் கேட்டு களிகூர்ந்து, அதற்காக ஜெபித்தோம். மிகப்பெரிய சமாதானம் எங்களை நிறைத்தது.

என்ன நடந்தது? இரண்டாவது ஆணைய குழுவும் வந்து, எங்களை நெருக்கியது. ஆனால் எங்கள் குழுவினர் இன்னும் பொறுமையாக அதைக் கையாண்டனர்; அவர்களை அக்கறையுடன் பராமரித்தனர். எல்லா உண்மைகளையும் காட்டினர். அங்கீகாரத்தில் A++ தர நிலை கிடைத்தது. நாட்டிலேயே மிக உயர்ந்த தர நிலை அதுவாகும். தேவன், எங்கள் உள்ளங்களையும் எங்கள் வார்த்தைகளையும் தம் சமாதானத்தோடு, ஒரு வார்த்தையும் அவர்களுக்கு எதிராக நாங்கள் பேசிவிடாதபடி  காத்துக்கொண்டார். தேசத்தின் எல்லா தரப்பிலும் எங்களை தேவன் கனப்படுத்தினார்.

இன்று நீங்கள் எந்தச் சவாலை சந்திக்க நேர்ந்தாலும் பயப்படாதீர்கள்; கோபங்கொள்ளாதீர்கள்; ஏமாற்றம் உங்கள் உள்ளத்தை பிடித்துக்கொள்ளாதபடி கட்டுப்படுத்துங்கள். தேவ சமாதானத்தில் நிலைத்திருங்கள். அவரை நம்பி, அவரது ஞானத்தில் நடந்திடுங்கள். அவர் உங்களை ஜெயத்துக்குள் நடத்துவார். நிச்சயமில்லாத நிலையை கடந்து வரும்படி நம்மை நடத்திய அதே தேவன், ஏற்ற நேரத்தில் உங்களுக்காகக் கிரியை செய்து உங்களைக் கனப்படுத்துவார். அவரது சமாதானத்தைக் காத்துக்கொள்ளுங்கள். அவரது கரம் நியாயத்தைச் செய்து, கிருபையை, மாற்றத்தை உங்கள் வாழ்வில் ஏற்படுத்துவதை காண்பீர்கள்.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, உண்மையுள்ள உம் ஊழியர்களுக்கு சமாதானத்தை வாக்குப்பண்ணுவதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். எல்லா சோதனை, ஏமாற்றம், தாமதம் எதிர்ப்பினை நான் சந்திக்கும்போதும், உம் தெய்வீக சமாதானத்தால் என் உள்ளத்தை நிறைத்திடும். பயத்தாலோ, பதற்றத்தாலோ, சலிப்பினாலோ நான் எதிர்வினை செய்யாமல் உம் வேளையை நம்புவதற்கு உதவி செய்யும். சரியான முடிவுகளை எடுக்கவும் உம் வேளைக்காகப் பொறுமையாக காத்திருக்கவும் எனக்கு ஞானத்தை அருளும். என் வார்த்தைகள், எண்ணங்கள், செயல்கள் எல்லா சூழ்நிலையிலும் உமக்கு கனத்தைக் கொண்டுவருவதாக இருக்கும்படி காத்துக்கொள்ளும். உம் சமாதானம் எல்லா பாரங்களையும் அகற்றட்டும்; எனக்குள்ளான எல்லா காயங்களையும் குணப்படுத்தட்டும். குடும்பத்தில், ஊழியத்தில், வேலையில், எதிர்காலத்தில் என்னை ஜெயத்துக்குள் நடத்தும். உம் கிருபை என்னைச் சூழ்ந்துகொள்ளட்டும்; உம் நியாயம் என் வாழ்வில் நிலைக்கட்டும் என்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.