எனக்கு அருமையான தேவ பிள்ளையே, நம் ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் இணையற்ற நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன். "நான் உனக்கு ஆரோக்கியம் வரப்பண்ணி, உன் காயங்களை ஆற்றுவேன்" (எரேமியா 30:17) என்பதே இன்றைய வாக்குத்தத்தம். இது வெறுமனே ஆறுதல் அளிக்கும் வசனம் மட்டுமல்ல; புண்பட்ட எல்லா இருதயத்துக்கும் தேவன் தனிப்பட்ட முறையில் தரும் வாக்குத்தத்தமாகும்.

ஒருவேளை நீங்கள் இன்று, "என்னிடம் பணமே இல்லை. என் ஆரோக்கியத்தை இழந்துவிட்டேன். சாகப்போவதுபோல் இருக்கிறது. எல்லோரும் என்னை விட்டுச் சென்றுவிட்டார்கள். எனக்கு உதவி செய்வதற்கு யாருமேயில்லை. நான் என்ன செய்வது?" என்று கூறிக்கொண்டிருக்கலாம். ஆண்டவர், அன்புடன், "நான் உனக்கு ஆரோக்கியம் வரப்பண்ணுவேன்," என்று பதில் கூறுகிறார். தம்மை நோக்கிப்பார்க்குமாறும், உங்கள் முழு உள்ளத்தோடும் அவரைத் தேடும்படியும் கூறுகிறார். அவரை நீங்கள் உண்மையாய் தேடும்போது, உங்களுக்குத் தேவையான யாவற்றையும் அவர் அற்புதமானவிதத்தில் அருளிச் செய்வார்.
கர்த்தர், இதை நிச்சயப்படுத்தும்விதத்தில்,  தாம் சவுக்கியத்தை ஆரோக்கியத்தையும் சமாதானத்தையும் கொண்டு வருவதாக கூறுகிறார் (எரேமியா 33:6). வேதாகமம் முழுவதும் தேவன் தம் வார்த்தைகளை தம் பிள்ளைகளுக்கு அருமையான வாக்குத்தத்தங்களால் நிரப்பியுள்ளார். வேதத்தை வாசிக்கும் பழக்கம் நமக்கு இருக்கிறதா என்பதே கேள்வி. வேதத்தில் கூறப்பட்டு ஒவ்வொரு வாக்குத்தத்தமும் நம் நன்மைக்காகவே கர்த்தரால் உரைக்கப்பட்டிருக்கிறது. இந்த வாக்குத்தத்தங்களை நாம் தனிப்பட்டவிதத்தில் ஏற்றுக்கொண்டு, அவை நமக்குச் சொந்தமானவை என்று விசுவாசிக்கவேண்டும்.
இயேசு, "நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய்" (யோவான் 11:40) என்று கூறியுள்ளார். தேவன் அற்புதமாக இடைப்படுவதற்கான வாசலை விசுவாசம் திறக்கிறது. சூழ்நிலை கூடாது என்று காணப்பட்டாலும் அவரது வாக்குத்தத்தத்தை விசுவாசித்திடுங்கள்; உங்கள் வாழ்வில் மகிமை வெளிப்பட இடங்கொடுங்கள்.

கர்த்தர், "என் நாமத்துக்குப் பயந்திருக்கிற உங்கள்மேல் நீதியின் சூரியன் உதிக்கும்; அதின் செட்டைகளின்கீழ் ஆரோக்கியம் இருக்கும்" (மல்கியா 4:2) என்று கூறுகிறார். ஆகவே, ஆண்டவருடன் நெருங்கிய ஐக்கியம் கொண்டிருங்கள். ஜெபத்தின் வாயிலாக அவருடன் தினமும் பேசுங்கள். அவரது வார்த்தையை வாசிப்பதன் வாயிலாக அவரது சத்தத்திற்குச் செவிகொடுங்கள். அவருக்கு முன்பாக பரிசுத்தமாக, பயபக்தியுடன் வாழுங்கள். அப்படிச் செய்யும்போது, ஆண்டவர் உங்களைக் குறித்துக் கொடுத்த எல்லா வாக்குத்தத்தத்தையும் நிறைவேற்றுவார்.

"நான் உனக்கு ஆரோக்கியம் வரப்பண்ணி, உன் காயங்களை ஆற்றுவேன்" என்று அவர் தரும் நிச்சயத்தை இன்று பெற்றுக்கொள்ளுங்கள். சரீரபிரகாரமான, உணர்ச்சிப்பூர்வமான, பொருளாதாரம் தொடர்பான, ஆவிக்குரிய என்று எவ்வித காயமானாலும் ஆண்டவரால், வாழ்க்கையில் உடைந்துபோயிருக்கும் எல்லாவற்றையும் சீர்ப்படுத்த முடியும். அவரை நம்புங்கள்; அவரது வார்த்தையை விசுவாசியுங்கள்; அற்புதமான சீர்ப்படுத்தலை அனுபவியுங்கள்.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, என் காயங்கள் எல்லாவற்றையும் ஆற்றி, ஆரோக்கியத்தை திரும்ப தருவதாக வாக்குப்பண்ணுவதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். முழு இருதயத்தோடு உம்மை தேடவும், மாறாத உம் வாக்கின்மேல் நம்பிக்கை வைக்கவும் எனக்கு உதவும். எல்லா சூழ்நிலையிலும் உம் மகிமையைக் காணும்படி என் விசுவாசத்தைப் பெலப்படுத்தும். எல்லா வியாதியையும் வேதனையையும் பயத்தையும் தனிமையுணர்வையும் ஏமாற்றத்தையும் பாரத்தையும் என்னை விட்டு அகற்றியருளும். உம் தெய்வீக சமாதானத்தினால், சந்தோஷத்தினால், பெலத்தினால் என்னை நிரப்பிடும். நான், ஜெபத்தினாலும் அனுதினமும் உம் வார்த்தையை தியானித்தும் உம்மோடு நெருங்கி நடந்திடவும், உமக்குப் பிரியமானபடி பரிசுத்தமாக வாழ்ந்திடவும் பண்ணும். என் வாழ்வில் இடிந்துபோயிருக்கிறவை எல்லாவற்றையும் சீர்ப்படுத்தும்; என் தேவைகள் எல்லாவற்றையும் அற்புதமான வழியில் அருளிச்செய்திடும். என் குடும்பத்தை ஆசீர்வதித்திடும்; எங்களை உம் சமுகம் சூழ்ந்துகொள்ளட்டும்; எங்கள் வாழ்வின் எப்பக்கமும் சுகமளிக்கும் உம் வல்லமை பாய்ந்து செல்லட்டும் என்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.