இன்றைய வாக்குத்தத்தம், "மனுஷருக்கென்று ஊழியஞ்செய்யாமல், கர்த்தருக்கென்றே நல்மனதோடே ஊழியஞ்செய்யுங்கள்" (எபேசியர் 6:8) என்று கூறுகிறது. கர்த்தர் நம் ஒவ்வொருவரையும் தமக்கு ஊழியம் செய்யும்படியாய் அழைத்திருக்கிறார். இது மிகப்பெரிய கிருபையாயிருக்கிறது. நமக்கு உலக வேலையும், குடும்பத்தின் பொறுப்புகளும் இருந்தபோதிலும், அவற்றுடன் தமக்கும் ஊழியஞ்செய்யும்படி கர்த்தர் நம்மை அழைக்கிறார். அறுப்பு மிகுதியாயிருக்கிறது; ஆனால், வேலைக்காரர் கொஞ்சமாயிருக்கிறார்கள். மக்களுக்கு ஜீவனை அருளும்படி இயேசு தம் ஜீவனைக் கொடுத்தார். மூன்றாம் நாளில் எழுந்திருந்தார். மக்களுக்கு தம் தழும்புகளின் வழியாக ஆசீர்வாதத்தை அளிக்க விரும்பி அவற்றை வைத்துக்கொண்டார். அவர், "எனக்கு நீ வேண்டும்," என்று கூறுகிறார். இயேசுவின் அன்பை பற்றியும், தேவையோடு இருப்பவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும்படிக்கும் நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம்.

இயேசுவின் அன்பைக் குறித்து மக்களுக்குக் கூறுவதே ஆண்டவருக்கு ஊழியம் செய்தல் என்பதன் அர்த்தமாயிருக்கிறது. தத்தளிப்பவர்களிடம் இயேசு அவர்களை நேசிக்கிறார் என்றும் அவர்கள் தற்கொலை செய்துகொள்ளவேண்டிய அவசியம் இல்லையென்றும் சொல்லலாம். அவர்கள், ஆண்டவரிடம் கேட்கும்போது, அவர் உதவி செய்வார். வீட்டை விட்டு ஓடும்படியாய் சோதிக்கப்படுகிறவர்களையும், தங்கள் கணவரை விட்டுவிடுகிறவர்களையும், பயந்து வாழாமல், 'வருத்தப்பட்டு பாரஞ்சுமக்கிறவர்களே நீங்கள் யாவரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் அளிப்பேன்,' என்று அழைக்கும் இயேசுவிடம் வரும்படி ஊக்கப்படுத்தலாம்.

பங்காளர்களாக நாம் இணைந்து, பிறருக்கு கர்த்தரைப் பற்றி கூறி, ஊழியம் செய்து கர்த்தரின் பிள்ளைகளாகலாம். உபத்திரவப்படுவோர், குழந்தைகளில்லாதோர், முதுமையில் கைவிடப்பட்டவர்கள் என்று உதவி தேவைப்படும் அநேகர் உள்ளார்கள். நாம் அவர்களிடம் சென்று, உதவி செய்து, இயேசுவின் அன்பைக் குறித்துக் கூறி, நம்பிக்கையளிக்கலாம். அவர்களை நேசிக்கிறவர் ஒருவர் இருக்கிறார் என்பதைக் காட்டி, அவர்களுக்கும் நம்பிக்கை உண்டு என்று கூறலாம். மக்கள்பேரில் அன்புகாட்டி, ஆண்டவரண்டை நடத்துவதற்கு இயேசு அழைக்கிறார் ஊழியமும் உள்ளது.

பிறருக்குச் சேவை செய்வதற்கு நம் நேரத்தைக் கொடுத்து, அவர்களுக்கு ஆசீர்வாதத்தை அளிக்கும்போது, ஆண்டவர்தாமே நம் வாழ்க்கையின் காரியங்களைப் பார்த்துக்கொள்வார். இயேசுவின் நாமத்தில் நாம் மற்றவர்களுக்குச் சேவையும் உதவியும் செய்யும்போது, கர்த்தர் நம் சேவைக்கு பலன் அளிக்கிறார். "தேவன் அவனவனுடைய கிரியைகளுக்குத்தக்கதாய் அவனவனுக்குப் பலனளிப்பார்" என்றும், "நீங்கள் கர்த்தராகிய கிறிஸ்துவைச் சேவிக்கிறதினாலே, சுதந்தரமாகிய பலனைக் கர்த்தராலே பெறுவீர்களென்று அறிந்து, எதைச் செய்தாலும், அதை மனுஷர்களுக்கென்று செய்யாமல், கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாய்ச் செய்யுங்கள்" என்றும் வேதம் கூறுகிறது (ரோமர் 2:6; கொலோசெயர் 3:23,24)

இரண்டாவதாக, கர்த்தர், நம்மை ஜீவகிரீடத்தைப் பெற்றுக்கொள்ளச் செய்கிறார். சோதனையை சகிக்கிறவன் உத்தமனென்று விளங்கிய பிறகு தம்பேரில் அன்புகூருகிறவர்களுக்குக் கர்த்தர் வாக்குப்பண்ணியுள்ள ஜீவகிரீடத்தைப் பெறுவான் (யாக்கோபு 1:12). கர்த்தருக்கு ஊழியம் செய்வது சாதாரண காரியமல்ல. ஜனங்களுக்கு தொடர்ந்து ஊழியம் செய்வதோடு உபத்திரவங்களையும் இக்கட்டுகளையும் மீண்டும் மீண்டும் மேற்கொள்ள வேண்டும். இந்த இக்கட்டுகளையெல்லாம் மேற்கொண்டு நாம் உண்மையாய் கர்த்தருக்கு ஊழியம் செய்யும்போது அவர் நமக்கு ஜீவகிரீடத்தைத் தருவார்.
மூன்றாவதாக, செல்வம், மகிமை, ஜீவன் நமக்கு அருளப்பட்டிருக்கிறது. தேவ பயத்துடன் நாம் பரிசுத்தமாக வாழும்போது, நம் வாழ்க்கையைப் பார்த்து மக்கள் நாம் சேவிக்கும் கர்த்தரை பின்பற்றுவார்கள். "தாழ்மைக்கும் கர்த்தருக்குப் பயப்படுதலுக்கும் வரும் பலன் ஐசுவரியமும் மகிமையும் ஜீவனுமாம்," என்று வேதம் கூறுகிறது (நீதிமொழிகள் 22:4).

நான்காவதாக, ஆண்டவருடைய சேவைக்கென்று, அவரது நாம மகிமைக்கென்று கொடுப்பது, இயேசுவின் நாமத்தில் தேவ ஊழியர்களை ஆதரிப்பது, ஏழைகளின்பேரில் கரிசனை காட்டுவது, பிறருக்கு உதவி செய்யும்படி நம் பணத்தையும் நேரத்தையும் செலவழிப்பது, ஆண்டவருக்குப் பிரியமாய் வாழ்வதற்கு அவர்களை வழிநடத்தி, தேவனுடைய பிள்ளைகளாகும்படி செய்வது எல்லாம் கர்த்தருக்குச் செய்யும் சேவையாகும். நாம் கொடுக்கும்போது, நமக்கும் கொடுக்கப்படும் (லூக்கா 6:38). மக்கள் அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி அளந்து உங்கள் மடியில் போடுவார்கள் என்று ஆண்டவர் கூறுகிறார். அவர் அப்படிச் செய்வார். அமுக்கிக் குலுக்கப்பட்டு, நிரம்பி வழியும் ஆசீர்வாதம் கிடைக்கும்.

தமக்கு உண்மையாய் ஊழியம் செய்கிறவர்களுக்கு இந்த ஆசீர்வாதங்களை பொழிந்தருள ஆண்டவரால் முடியும். அவரால் செழிப்பை, மகிமையை, கனத்தை, தெய்வீக பிரசன்னத்தை, பெருக்கத்தை அளிக்க முடியும். பரலோகத்தை அடைந்து ஜீவ கிரீடத்தைப் பெற்றுக்கொள்ளும்படி உபத்திரவங்களைக் கடப்பதற்கு அவர் நம்மை பெலப்படுத்துகிறார். நம் வாழ்க்கையின் வாயிலாக பரிசுத்தத்தைக் காட்டி, சாட்சியாக விளங்கும்படி பரிசுத்தமாய் வாழும் கிருபையை அவர் அருளுகிறார். ஆகவே, விருப்பத்துடன் ஆண்டவருக்கு ஊழியம் செய்யவேண்டும். நம் ஊழியத்திற்கு கர்த்தர் பலன் அருளுவதுடன், மகிமையான பரலோக பலன்களையும் அளிப்பதோடு, உண்மையாய் தமக்கு ஊழியம் பண்ணுகிற அனைவரையும் ஆசீர்வதிக்கவும் செய்கிறார்.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, உமக்கு ஊழியம் செய்யும்படி என்னை அழைக்கிறதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். மக்களுக்கு மனம் உவந்து, மனதுருக்கத்துடனும் சேவை செய்து உம் அன்பை பகிர்ந்துகொள்ளும் இருதயத்தை எனக்குத் தந்தருளும். உபத்திரவப்படுவோரை, குழந்தை பாக்கியம் இல்லாதோரை, கைவிடப்பட்டோரை, நம்பிக்கையற்றிருப்போரை ஊக்குவிக்க எனக்கு உதவும். இக்கட்டான சூழ்நிலையில் இருப்போருக்கு நம்பிக்கையளிப்பதற்கு என்னை பயன்படுத்தும். பிறருக்காக ஜெபிக்கவும் உம் ஊழியத்தை ஆதரிக்கவும் எனக்கு கிருபை அளித்திடும். எல்லா உபத்திரவத்தையும் மேற்கொள்ளும்படியும், உமக்குச் சாட்சியாக பரிசுத்தமாக வாழும்படியும் என்னை பெலப்படுத்தும். வாழ்க்கையில், படிப்பில், வேலையில் சரியான முடிவுகளை எடுப்பதற்கு எனக்கு ஞானத்தையும் அறிவையும் புத்தியையும் அருளிச்செய்தருளும். என் ஊழியத்தை ஆசீர்வதித்து, நீர் வாக்குப்பண்ணியுள்ள பலனை பெறும்படி செய்தருளும். உம் மகிமைக்காக என்னை பயன்படுத்தவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.