அன்பானவர்களே, நீதிமானுக்குக் கிடைக்கும் பலன் குறித்து தியானிக்க விரும்புகிறேன். வேதத்தில், "கர்த்தாவே, நீர் நீதிமானை ஆசீர்வதித்து, காருணியம் என்னுங் கேடகத்தினால் அவனைச் சூழ்ந்துகொள்வீர்" (சங்கீதம் 5:12) என்று எழுதப்பட்டுள்ளது. தேவன், நீதியுள்ள மக்களை ஆசீர்வதிக்கிறார்; அவர் நீதிமான்களை தம் பாதுகாப்பு சூழ்ந்துகொள்ளச் செய்கிறார். நீதி எவ்வளவு முக்கியமானது! பயப்படாதிருங்கள். தேவன் உங்களை நீதிமானாக்குவார் / நீதியுள்ள பெண்ணாக்குவார். உங்கள் ஆத்துமாவுக்கு, உங்கள் கண்களுக்கு நீங்கள் நீதியானவராக தோன்றலாம். உங்கள் உள்ளம் உங்களை நீதிமான் / நீதியுள்ள பெண் என்று கூறலாம். நீங்கள் நீதியுள்ளவர் என்று உங்கள் குடும்பத்தினரும் கூறலாம்; உலகத்தின் மக்களும் உங்களை நீதியுள்ளவர் என்று கூறலாம். தேவன், "நீ நீதியுள்ளவன்(ள்)" என்று கூறுகிறார். உங்களுக்கான கிரயத்தைச் செலுத்துவதற்காக அவர் சிலுவையில் தம் இரத்தத்தைச் சிந்தினார். அவருடைய இரத்தத்தினாலே நீங்கள் நீதிமானாகிறீர்கள். ஆகவே, அவர் உங்களையும் உங்கள் ஆத்துமாவையும் பெறுமதியாக கருதுகிறார். உங்கள் சரீரத்துக்குள் அவர் வாசம்பண்ணுகிறார். நீங்கள் அவருடைய நீதியுள்ள குமாரனாகவும் குமாரத்தியாகவும் இருப்பதை எண்ணி பெருமிதமடைகிறார். தேவனால் நீதிமான் என்று அழைக்கப்படவேண்டுமென்று நீங்கள் ஏங்கிக்கொண்டிருப்பதை அறிவேன். இந்தக் கிருபை இப்போதே உங்கள்மேல் வருவதாக.
வேதாகமத்தில், தேவனோடு நடந்த நீதிமான்களை நீங்கள் பார்க்கலாம் அல்லது அவர்கள் நீதிமான்களாயிருந்தபடியினால் தேவன் அவர்களோடு உலாவினார். நோவா, நீதிமானாய் இருந்தான் என்று வாசிக்கிறோம் (ஆதியாகமம் 6:9). நீதிமானாகிய நோவா, அவன் காலத்தில் வாழ்ந்தவர்களுள் உத்தமனாயிருந்தான். அவன் தேவனுடன் உண்மையாய் உலாவினான். இது நீதியின் கிரியையாயிருக்கிறது. துன்மார்க்கரிடையே அவன் உத்தமன் என்று அழைக்கப்பட்டான். ஆம், இயேசு, பொந்தியு பிலாத்துவுக்கு முன் நின்றபோது, அவன், "இந்த மனுஷனிடத்தில் ஒரு குற்றத்தையும் காணேன்," என்றான். சிலுவையில் வைத்து ரோம சேவகன், "மெய்யாகவே இந்த மனுஷன் நீதிமானாயிருக்கிறான்," என்று கூறினான். தேவனுடன் உண்மையாய் நடப்பது என்றால் என்ன? தேவன், உங்களைச் செய்யும்படி கூறும் எல்லா காரியங்களையும் செய்வதாகும். இன்று, நீங்கள் தேவனை முகமுகமாய் காணாமல் அல்லது அவர் குரலைக் கேளாமல் இருக்கலாம். ஆனால், தேவன் தம் வார்த்தையின் வாயிலாகவும் பரிசுத்த ஆவியானவர் வாயிலாகவும் உங்கள் இருதயத்திற்குள் பேசுகிறார். தேவன் உங்களைச் செய்யும்படி கூறுகிறவற்றை செய்திடுங்கள். அப்போது தண்ணீர் ருசியான திராட்சரசமாக மாறிடும். நீங்கள் உங்கள் குடும்பத்தினருக்கு தண்ணீரை மட்டுமே கொடுக்கலாம்; ஆனால், அவர்கள் அதைப் பெற்றுக்கொள்ளும்போது, அது ருசியானதாகவும் பாக்கியமானதாகவும் இருக்கும். நீங்கள் செய்கிற காரியங்கள் யாவும் வியப்பானவையாயிருக்கும். உங்கள் குடும்பத்தினர் உங்கள்பேரில் களிகூருவார்கள். உங்கள் வேலை ஆசீர்வாதமாயிருக்கும். உங்கள் அதிகாரிகள், உங்களைச் சுற்றிலுமிருக்கிறவர்கள் அனைவரும் உங்கள்பேரில் களிகூருவார்கள். தம்மோடு உண்மையாய் நடப்பதற்கு தேவன் உங்களுக்கு இந்தக் கிருபையை வழங்குகிறார். நீங்கள் உத்தமராய் இருக்கலாம்; தேவனோடு உலாவலாம்; நீதிமானுக்குரிய ஆசீர்வாதங்கள் உங்கள்மேல் இருக்கும்.
இரண்டாவதாக, நீங்கள் எப்படி நீதிமானாக முடியும்? நீங்கள் கர்த்தரை விசுவாசிக்கும்போது நீதிமானாகலாம். வேதம், ஆபிரகாம் தேவனை விசுவாசித்தது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது; அவன் நூறு வயதாயிருந்தபோதும் வாக்குத்தத்தத்தை பெற்றுக்கொண்டான் என்று கூறுகிறது (ஆதியாகமம் 15:6). நீதி, தேவனுடைய வாக்குத்தத்தங்கள் உங்கள் வாழ்க்கையில் நிறைவேறும்படி செய்கிறது.
மூன்றாவதாக, நீங்கள் எளியோருக்கு நீதி செய்யும்போது, தேவனுக்கு முன்பான நீதிமானாயிருப்பீர்கள் (1 சாமுவேல் 26:23). நான்காவதாக, தேவனுடைய எல்லா நன்மைக்காகவும் அவரை ஸ்தோத்திரிக்கும்போது, நீங்கள் நீதிமானாவீர்கள் (சங்கீதம் 7:17). ஐந்தாவதாக, உங்கள் ஆத்துமா, தேவனிடம் மீட்கப்படும்போது நீதிமானாயிருப்பீர்கள் (சங்கீதம் 23:3). நீதி, மக்களை உயர்த்தும் (நீதிமொழிகள் 14:34). நீங்கள் ஏழைகளை, பசியாயிருப்போரை, ஆடையில்லாமல் இருப்போரை பராமரிக்கும்போது நீதி உங்களுக்கு முன்பாகச் செல்லும் (ஏசாயா 58:7,8). இறுதியாக, இயேசுவுக்காக நீங்கள் துன்புறுத்தப்படும்போது நீதிமானாகிறீர்கள் (மத்தேயு 5:10). இயேசுவின் நாமத்திற்காக துன்புறுத்தப்படுகிறீர்களா? தேவன், உங்களை நீதிமான் என்கிறார். தேவன் உங்களோடு உலாவி, எல்லா பாக்கியங்களையும் அருளிச்செய்வார்.
ஜெபம்:
பரம தகப்பனே, உம் காருணியம் என்னை கேடகமாக சூழ்ந்துகொள்வதற்காக ஸ்தோத்திரிக்கிறேன். உம் பார்வையில் என்னை நீதிமானாக்குவீராக; என் இருதயம் உம் சித்தத்திற்கு இசைவாய் இருப்பதாக. உம் தயவு எனக்கு முன்னாகச் சென்று, கோணலான பாதைகளைச் செவ்வையாக்குவதாக. என் மனதை பயத்துக்கும் சந்தேகத்திற்கும் விலக்கிக் காத்தருளும். காணப்படுகிறதும் காணப்படாததுமான தருணங்களிலெல்லாம் என்னை மூடி காப்பீராக. உம் சமுகமே எனக்கு திடநம்பிக்கையாயிருப்பதாக. ஒரு மனுஷனும் பூட்டக்கூடாதபடி வாசல்களை திறந்து, உம் தெய்வீக நோக்கத்திற்குள் என்னை நடத்துவீராக. உம் ஆசீர்வாதம் என் வாழ்வில் தங்குவதோடு மற்றவர்களுக்கும் நிரம்பி வழிவதாக. அனுதினமும் நீதியில் நடக்கும்படி என் நடையை ஸ்திரப்படுத்துவீராக. உம் பாதுகாப்பையும், காருணியத்தையும் நம்பி, இயேசுவின் வல்ல நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


