அன்பானவர்களே, தேவன் தம் ஞானத்தை உங்களுக்கு ஈந்து உங்களை ஆசீர்வதிக்க விரும்புகிறார். மனுஷீக ஞானத்திற்கும் தேவ ஞானத்திற்கும் வேறுபாடு உண்டு. மனுஷீக ஞானம், இம்மைக்காக மாத்திரம் செயல்படுகிறது; தேவ ஞானமோ இம்மைக்காகவும் எதிர்காலத்திற்காகவும் செயல்படுகிறது. வேதம், "என்னைச் சிநேகிக்கிறவர்களை நான் சிநேகிக்கிறேன்; அதிகாலையில் என்னைத் தேடுகிறவர்கள் என்னைக் கண்டடைவார்கள்," (நீதிமொழிகள் 8:17) என்று கூறுகிறது. நீங்கள் ஞானத்தை நேசிக்கவேண்டும்; அதைத் தேட வேண்டும். அப்போது, தேவ ஞானத்தைப் பெறுவீர்கள். இயேசுவே தேவ ஞானமாயிருக்கிறார். நீங்கள் அவரை நேசித்தீர்களானால், அவரைத் தேடினீர்களானால், அவரையும், அவரது ஞானத்தையும் கண்டடைவீர்கள். அப்போது நீங்கள் இப்போது மட்டுமல்ல; எதிர்காலத்திலும் வாழ்ந்திருப்பீர்கள்; உங்கள் வாழ்க்கை பாதுகாப்பாக இருக்கும். தேவ ஞானமாகிய இயேசு உங்களுக்குள் வரும்போது, நீங்கள் நல்ல வாழ்க்கையைப் பெறுவீர்கள். ஞானம் உங்களை ஞானவாக்கி, நல்ல வாழ்க்கையை அனுபவிக்கும்படி செய்யும் என்ற வேதம் கூறுகிறது (யாக்கோபு 3:13). எல்லோருமே நல்ல வாழ்க்கையை விரும்புகிறார்கள்; தேவன், இயேசுவின் வாயிலாக உங்களுக்கு அருளிச்செய்யும் ஞானத்தால் நீங்கள் நல்ல வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முடியும்.
இரண்டாவதாக, ஞானம் பரிபூரணத்தை அளிக்கிறது. "அதை விடாதே, அது உன்னைத் தற்காக்கும்; அதின்மேல் பிரியமாயிரு, அது உன்னைக் காத்துக்கொள்ளும். ஞானமே முக்கியம், ஞானத்தைச் சம்பாதி; என்னத்தைச் சம்பாதித்தாலும் புத்தியைச் சம்பாதித்துக்கொள்" (நீதிமொழிகள் 4:6,7) என்று வேதம் கூறுகிறது. நீங்கள் தேவனை ஞானத்தைக் கொண்டிருக்கும்போது, எந்த மனுஷனின் கேடான சிந்தையையும், செயலையும், பிசாசின் கேட்டுக்கான தாக்குதல்களையும் உங்களால் மேற்கொள்ள முடியும். எல்லா சோதனைகளிலிருந்து தப்பித்துக்கொள்வதற்கான போக்கையும், தேவ ஞானத்தினால் தப்பித்துக்கொள்வதற்கான அறிவையும் தேவன் உண்டாக்குவார் (1 கொரிந்தியர் 10:13).
மூன்றாவதாக, நீங்கள் ஞானத்தைப் பெற்றிருக்கும்போது, தேவனுக்கு பிரியமானவர்களாகவும் இருப்பீர்கள். "தேவன் தமது பார்வைக்கு நல்லவனாயிருக்கிறவனுக்கு ஞானத்தையும் அறிவையும் இன்பத்தையும் அளிக்கிறார்," (பிரசங்கி 2:26) என்று வேதம் கூறுகிறது. தேவ ஞானம் உங்களுக்குள் வரும்போது, உங்களால் தேவனுக்குப் பிரியமானவர்களாக முடியும்; நீங்கள் தேவனைப் பிரியப்படுத்தும்போது, ஞானத்தை, அறிவை, மகிழ்ச்சியைப் பெற்றுக்கொள்வீர்கள்.
நான்காவதாக, ஞானம், வாழ்க்கையை சுத்தமாக்குகிறது. பரத்திலிருந்து வருகிற ஞானம் எல்லாவற்றிலும் சுத்தமானதாக இருக்கிறது என்று வேதம் கூறுகிறது (யாக்கோபு 3:17). நாம் அனைவரும் சுத்தமானவர், நீதிமான், பரிபூரணமானவர் என்று அழைக்கப்பட விரும்புகிறோம். நம் சொந்த ஆவியே, "நீ ஒரு பரிபூரணமான மனுஷன் / மனுஷி" என்று கூறுவதற்கு விரும்பும். இதற்கு தேவ ஞானம் தேவையாயிருக்கிறது. நீங்கள் கிறிஸ்து இயேசுவுக்குள் இருந்தால், தேவ ஞானத்தை பெற்றுக்கொள்வீர்கள் என்று வேதம் கூறுகிறது (1 கொரிந்தியர் 1:31). அவரே உங்களுக்கு நீதியாவார்; உங்களுக்கு பரிசுத்தமாவார்; உங்களுக்கு மீட்புமாவார். இயேசுவினால், ஞானம் உங்களைச் சுத்தமாகக் காத்துக்கொள்ளும்.
ஐந்தாவதாக, ஞானம், உங்களை சாந்தமானவராகவும் சமாதானமுள்ளவராகவும் காத்துக்கொள்ளும். மூடன் தன் உள்ளத்தையெல்லாம் வெளிப்படுத்துகிறான்; ஆனால், ஞானியோ உள்ளத்தை அடக்கிவைக்கிறான் என்ற வேதம் கூறுகிறது (நீதிமொழிகள் 29:11). எல்லோரும் சமாதானத்தையும் சாந்தத்தையும் விரும்புவார்கள்; நல்ல கனம் வந்து சேரும்.
ஆறாவதாக, ஞானம், வீட்டைக் கட்டுகிறது (நீதிமொழிகள் 24:3). தேவன் உங்களுக்கு அருளும் ஞானத்தினால் உங்கள் வீடு கட்டப்படும். நிறைவாக, ஞானம், ஐசுவரியத்தை அருளும். சாலொமோன், ஞானத்தைப்போல ஐசுவரியத்திலும் சிறந்திருந்தான் என்று வேதம் கூறுகிறது (1 இராஜாக்கள் 10:23). தம் ஞானத்தினால் செல்வத்தை சேர்க்கும் வல்லமையை தேவன் தருகிறார். தேவ ஞானம், இந்த எல்லா ஆசீர்வாதங்களுடனும் ஒருவருக்குள் வரும்போது, அப்படி ஞானத்தினால் நிறைந்தவரை, சாலொமோனைப்போல உலகத்தினர் பார்க்க வருவார்கள் (1 இராஜாக்கள் 10:24). இப்படியே உங்களுக்கும் நடக்கும். தாம் உங்களுக்கு ஞானத்தை அருளி, உங்களை இப்படி பெரியவராக்க தேவன் விரும்புகிறார். ஞானத்தை நேசியுங்கள்; அதைத் தேடுங்கள். இயேசு கிறிஸ்துவே அந்த ஞானமாயிருக்கிறார்.
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, இன்றைக்கு நான் எல்லாவற்றிற்கும் மேலாக உம் ஞானத்தைத் தேடுகிறேன். இயேசுவிடமிருந்து வரும் ஞானத்தினால் என் இருதயத்தை நிரப்பும். இப்போதைக்கும் எதிர்காலத்திற்குமான முடிவுகளை எடுப்பதற்கு எனக்கு வழிகாட்டும். உம் ஞானம், தவறான பாதையில் நான் சென்றுவிடாமல் காப்பதாக. என் பாதை, சுத்தமானதாகவும், சமாதானம் உள்ளதாகவும் உமக்குப் பிரியமானதாகவும் இருக்கும்படி செய்திடும். என் வீட்டைக் கட்டி, என் கைகளின் பிரயாசங்களை நிலைப்படுத்துவீராக. உம் வழிகளில் நடப்பதற்கான அறிவை எனக்கு தந்தருளும். உம் தெய்வீக ஆசீர்வாதங்களுக்குள், கிருபைக்குள் என்னை வழிநடத்தும். உம் தெய்வீக ஞானத்தால் என் எதிர்காலத்தை பாதுகாத்திட வேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


