அன்பானவர்களே, தேவனுடைய கிரியைகளையும் சாட்சிகளையும் நாம் தியானித்தால், எல்லாவற்றையும் ஆழமாக பார்த்து வெற்றி காண முடியும். வேதம், "உம்முடைய சாட்சிகள் என் தியானமாயிருக்கிறபடியால், எனக்குப் போதித்தவர்களெல்லாரிலும் அறிவுள்ளவனாயிருக்கிறேன்." (சங்கீதம் 119:99) என்று கூறுகிறது. ஒரு தேசத்தின் ராஜாத்தி, ஒருமுறை தானியேலைக் குறித்து, "உம்முடைய ராஜ்யத்திலே ஒரு புருஷன் இருக்கிறான், அவனுக்குள் பரிசுத்த தேவர்களுடைய ஆவி இருக்கிறது. உம்முடைய ராஜ்யத்திலே ஒரு புருஷன் இருக்கிறான், அவனுக்குள் பரிசுத்த தேவர்களுடைய ஆவி இருக்கிறது; உம்முடைய பிதாவின் நாட்களில் வெளிச்சமும் விவேகமும் தேவர்களின் ஞானத்துக்கு ஒத்த ஞானமும் அவனிடத்தில் காணப்பட்டது," (தானியேல் 5:11) என்று கூறினாள். தெய்வீக வெளிச்சத்தை, விவேகத்தை, ஞானத்தை உங்களுக்குக் கொடுப்பதற்கு தேவன் விரும்புகிறார்.வேதம், 'ஆவியினாலேயே அறிவை உணர்த்தும் வசனம்' என்று கூறுகிறபடி, பரிசுத்த ஆவியின் வரங்கள் மூலமாக அது கிடைக்கிறது (1 கொரிந்தியர் 12:8). இயேசுவின் ஆவியாகிய பரிசுத்த ஆவியானவர் உங்கள்மேல் வரும்போது, தேவ ஞானம் உங்களுக்குள் இறங்கும். அதன் பிறகு நீங்கள் பிரச்னைகளை பார்க்கும்போது அவற்றுக்கான காரணங்களை புரிந்துகொள்ளவும், தேவனிடமிருந்து தீர்வினை பெற்றுக்கொள்ளவும் முடியும்.

இயேசுதாமே, தம் ஊழியத்தில் இந்த ஞானத்தையும் விவேகத்தையும் வெளிப்படுத்தினார். கிணற்றண்டையில் சமாரிய பெண்ணைக் கண்டபோது, அவர், "பெண்ணே, நீ ஐந்து புருஷருடன் வாழ்ந்தாய். இப்போது உன்னுடன் இருப்பவனும் உனக்கு புருஷன் அல்ல," என்று கூறினார். அவள் ஆச்சரியப்பட்டு, "ஆண்டவரே, நீர்  தீர்க்கதரிசி," என்றாள். அவள் எதுவும் கூறாமலே இயேசுவால் அவள் வாழ்க்கையை பார்க்கவும், அவள் திருமணத்தில் காணப்படும் பிரச்னைகளை வெளிப்படுத்தவும் முடிந்தது. பிறகு அவர் தேவனிடமிருந்து வரும் ஜீவத்தண்ணீராகிய நதிகளை அவளுக்குக் கொடுத்தார். அதேபோல பொல்லாத மக்கள் இயேசுவை சூழ்ந்துகொண்டபோது, "இயேசு அவர்கள் நினைவுகளை அறிந்து: நீங்கள் உங்கள் இருதயங்களில் பொல்லாதவைகளைச் சிந்திக்கிறதென்ன?" (மத்தேயு 9:4) என்று கேட்டதாக வேதம் கூறுகிறது.அவர்கள் யோசனைகளை, அவர் தேவனிடமிருந்து வந்த ஞானம் நிரம்பிய பதிலால் மேற்கொண்டார். பரிசுத்த ஆவி கொடுக்கும் விவேகத்தாலும் ஞானத்தாலும் உங்களாலும் எல்லா பொல்லங்கையும் மேற்கொள்ள முடியும்.
சாலொமோன், "நான் இந்த ஜனத்திற்கு முன்பாகப் போக்கும் வரத்துமாயிருக்கத்தக்க ஞானத்தையும் அறிவையும் எனக்குத் தந்தருளும்" (2 நாளாகமம் 1:10) என்று ஜெபித்தான். தேவன் அவனுக்கு எல்லாவற்றிலும் ஞானத்தையும் அறிவையும் விவேகத்தையும் கொடுத்தார்.எல்லாவற்றையும் அவனால் புரிந்துகொள்ள முடிந்தது. அதன் பலனாக, ஐசுவரியமும் செல்வமும் கனமும் அவனை தேடி வந்தன. தேவன் இன்று அவற்றை உங்களுக்கும் கொடுக்க விரும்புகிறார். "ஆண்டவரே, என்னை உம் பரிசுத்த ஆவியினால் நிரப்பும். எனக்கு ஞானம் வேண்டும்; நான் செழிக்கவேண்டும். மற்றவர்கள், தங்கள் வாழ்க்கையை சீர்தூக்கிப் பார்த்து, தீர்வை காண நான் உதவவேண்டும். இந்த உலகின் துன்மார்க்கமான மக்களை மேற்கொள்வதற்கு விவேகமும் ஞானமும் எனக்கு வேண்டும்," என்று கேளுங்கள்.இப்படி நீங்கள் ஜெபிக்கும்போது, தேவன் தம் ஆவியினாலும் தெய்வீக ஞானத்தினாலும் உங்களை நிரப்புவார்.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, எல்லா ஞானத்துக்கும் புத்திக்கும் உறைவிடமாக இருப்பதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். ஆண்டவரே, தயவாய் உம்முடைய பரிசுத்த ஆவியால் என்னை நிறைத்து, உம் ஞானம் என் வழியாக பாய்ந்து செல்லும்படி பண்ணும்.முகங்களை தாண்டி, உம் சத்தியங்களை புரிந்துகொள்ளுமளவுக்கு ஆழமான தெய்வீக பார்வையை எனக்கு அருளிச்செய்வீராக. உம்முடைய வசனத்தை தியானித்து, உம் கற்பனைகளில் நடப்பதற்கு எனக்குக் கற்பித்தருளும். ஆராய்ந்து பார்த்து, பிரச்னைகளுக்கு தீர்வு கண்டுபிடிப்பதற்கான கிருபையை எனக்கு அருளிச்செய்யும்.என் வார்த்தைகள், செயல்கள், தீர்மானங்களை உம் ஞானம் ஒவ்வொரு நாளும் வழிநடத்துவதாக என்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.