பிரியமானவர்களே, உங்களுக்கு ஐசுவரியத்தையும் மகிமையையும் தருவதற்கு கர்த்தர் விரும்புகிறார். உங்களை ஆசீர்வதிப்பதற்கு அவர் பிரியமாயிருக்கிறார். ஆகவே, பயப்படாதிருங்கள். வறுமையில் நாட்களை கழித்துவிட்டோமே என்று கலங்காதிருங்கள். இப்போது இருக்கிறதைக் காட்டிலும் ஆயிரமடங்கு உங்களைப் பெருகப்பண்ணுவதற்கு ஆண்டவரால் கூடும். இஸ்ரவேல் மக்களுக்கு அவர் இதைச் சொன்னார்; அதை நிறைவேற்றினார். அளவுக்கு அதிகமாக அவர்கள் உயர்த்தப்பட்டனர்; பெருக்கமடைந்தனர். அதேபோன்று, ஆண்டவர் உங்களையும் தூக்குவார்; உயர்த்துவார். உங்கள் பிள்ளைகளையும் அவர் ஆசீர்வதித்து உயர்த்துவார். "நீ கேளாத ஐசுவரியத்தையும் மகிமையையும் உனக்குத் தந்தேன்" (1 இராஜாக்கள் 3:13) என்று கர்த்தர் சாலொமோனிடம் கூறினார். கர்த்தர் அந்த ஆசீர்வாதத்தை இன்று உங்களுக்குத் தருவாராக.
இந்த ஐசுவரியமும் கனமும் எப்படி வருகின்றன? வேதம், "கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்; அதனோடே அவர் வேதனையைக் கூட்டார்" (நீதிமொழிகள் 10:22) என்று கூறுகிறது. ஆண்டவர் உங்களை ஆசீர்வதிக்கும்போது, நீங்கள் நூறுமடங்கு அறுவடையை பெறுவீர்கள் (ஆதியாகமம் 26:12,13). அவர் ஐசுவரியத்தை சம்பாதிப்பதற்கான பெலத்தை தருவதாக வேதம் கூறுகிறது (உபாகமம் 8:18). இன்று அந்த ஆசீர்வாதம் உங்கள்மேல் வருகிறது. தேவன், சாலொமோனுக்கு ஞானத்தைக் கொடுத்ததுடன், அவன் மிகவும் செழிப்பதற்கும் உதவினார். அவ்வண்ணமே, உங்களுக்கும் ஞானத்தையும், பெலனையும் கொடுப்பதற்கும், வாசல்களை திறந்து, நீங்கள் செழிக்கும்படி சரியான பாதையில் நடத்தவும் அவர் வல்லவராயிருக்கிறார். இதனுடன் கனமும் மகிமையும் வந்து சேரும்.
இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்வது எப்படி?
ஆண்டவர், "உன் பொருளாலும், உன் எல்லா விளைவின் முதற்பலனாலும் கர்த்தரைக் கனம்பண்ணு" (நீதிமொழிகள் 3:9) என்று கூறுகிறார். உங்களுக்கு இருக்கிறவற்றின் முதற்பலனை ஆண்டவருக்குக் கொடுத்திடுங்கள். உங்கள் விளைவின் முதற்கனிகளை, வருமானத்தின் முதற்பகுதியை அவருக்குக் கொடுத்திடுங்கள். ஆண்டவருடைய பணிக்கென அதைக் கொடுங்கள். பிறகு, நீங்கள் கனப்படுத்தப்படுவீர்கள்; உங்கள் களஞ்சியங்கள் நிரம்பும். உங்கள் ஆலைகளில் புது திராட்சரசம் நிரம்பி வழியும். பெரிய சந்தோஷம் வரும்; உங்கள் குடும்பத்திலும் வாழ்விலும் தேவனுடைய ஆசீர்வாதம் பூரணமாக விளங்கும். வேதத்தில், "உங்கள் பொக்கிஷம் எங்கேயிருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும்" (மத்தேயு 6:21) என்று வாசிக்கிறோம். ஆகவே, ஆண்டவருக்குக் கொடுத்திடுங்கள். நாம் முதலாவது ஆண்டவரின் பணிக்காகக் கொடுப்போம். வேதம் கூறுகிறபடி, நம் காணிக்கைகளை ஊழியத்திற்காகக் கொடுப்போம்; கர்த்தரை அறிந்திடாதவர்கள் அவரை அறிந்துகொண்டு அவர் வீட்டின் பங்காக மாறுவதற்கு உதவுவோம் (மல்கியா 3:10). அப்போது ஆண்டவர் உங்களுக்கு பரிபூரணத்தை, செழிப்பை, நிறைவை, சந்தோஷத்தை அளித்திடுவார்.
இரண்டாவதாக, வேதம் கூறுகிறபடி நாம் ஏழைகளுக்கு கரிசனை காட்டவேண்டும் (ஏசாயா 58:7,8). தேவையுடன் இருப்போருக்கு நாம் நம்பிக்கை அளிக்கவேண்டும். உடைகள் இல்லாதிருப்போருக்கு ஆடைகளையும், உறைவிடம் அற்றவர்களுக்கு வீடுகளையும், அடிப்படை தேவைகள் சந்திக்கப்படாதவர்களுக்கு உதவியும் செய்யலாம். ஏழைகள்மேல் அக்கறை கொண்டவர்களாய், தேவையோடு இருக்கும் குழந்தைகளை நோக்கிப் பார்த்தால், நம் சுகவாழ்வு சீக்கிரம் துளிர்க்கும். நம் வெளிச்சம் மத்தியானத்தைப் போல பிரகாசிக்கும். நீதி நமக்கு முன்பாகப் போகும். எல்லாமும் வெளிச்சமாகும்; பரிபூரணம் பெருகும்.
மூன்றாவதாக, தேவ ஊழியர்களின் தனிப்பட்ட தேவைகள் சந்திக்கப்படும்படி நாம் காணிக்கைகளை கொடுக்கவேண்டும் வேதம், "தேவரீர், என் ஆண்டவராயிருக்கிறீர், என் செல்வம் உமக்கு வேண்டியதாயிராமல், பூமியிலுள்ள பரிசுத்தவான்களுக்கும், நான் என் முழுப் பிரியத்தையும் வைத்திருக்கிற மகாத்துமாக்களுக்கும், அது வேண்டியதாயிருக்கிறது" (சங்கீதம் 16:2,3) என்று கூறுகிறது. நாம் அவர்களுக்குக் கொடுக்கவேண்டும். தீர்க்கதரிசிகளையும் ஊழியர்களையும் நாம் ஆதரிக்கவேண்டும். இவ்விதம் தொடர்ந்து செய்யும்போது, ஆண்டவர் நம்மை பரிபூரணமாக ஆசீர்வதிப்பார். ஆண்டவர்தாமே உங்களுக்கு இந்தக் கிருபையையும் அருளுவாராக.
நான்காவதாக, உங்கள் நேரத்தையும் ஊழியத்தின் பலனையும் ஆண்டவருக்கு அர்ப்பணியுங்கள்; அப்போது அவருக்கு தனிப்பட்டவிதத்தில் ஊழியம் செய்வதாகும் (ஏசாயா 30:20,21). கர்த்தர்தாமே உங்களுக்கு இந்தக் கிருபையை தந்தருளுவாராக. அப்போது நீங்கள் நடக்கவேண்டிய பாதையைக் குறித்து போதிக்கப்படுவீர்கள்; வழிநடத்தப்படுவீர்கள்; போகும்போது பாதுகாக்கப்படுவீர்கள். எங்கள் வீட்டிலும் குடும்பத்திலும் இயேசு அழைக்கிறார் ஊழியம் மற்றும் காருண்யா வாயிலாக, இந்த ஆசீர்வாதத்தை நாங்கள் அனுபவிக்கிறோம். ஆண்டவர் எனக்குத் தோன்றி, இயேசு அழைக்கிறார் ஊழியத்துக்கு வருகிற காணிக்கையில் பத்தில் ஒரு பங்கை மற்ற ஊழியங்களுக்கு, சபைகளைக் கட்டுவதற்கும், ஊழியர்களை தாங்கவும் கொடுக்கும்படி கூறினார். குறிப்பாக, என் தந்தை ஆண்டவரோடு இருக்கும்படி எடுத்துக்கொள்ளப்பட்ட பிறகு, இதை முழு மனதுடன் செய்ய தொடங்கினோம். சீஷாவையும் தொடங்கி, ஏழைகளை பராமரிக்க ஆரம்பித்தோம். தேவ கிருபையினால் எங்கள் தேவைகள் எல்லாம் சந்திக்கப்படுகின்றன. ஆண்டவர் அநேகருக்கு இப்போது பெருக்கத்தையும் ஆசீர்வாதத்தையும் அருளிச்செய்துள்ளார். இந்த ஊழியங்கள் எல்லாம் இந்தியாவிலுள்ள மக்கள் கொடுக்கும் காணிக்கையினால் செய்யப்படுகின்றன. இந்த வேலையை தாங்கும்படி ஆண்டவர் எல்லா சமுதாய மக்களின் இருதயங்களையும் திறந்துள்ளார்; அவர்கள் கொடுப்பதை ஆசீர்வதித்துள்ளார். பத்து சதவீதம் அநேக ஊழியர்களுக்கும் அநேக ஊழியங்களுக்கும் கொடுக்கப்படுகின்றன. அவர்கள் எங்களுக்காக ஜெபிக்கிறார்கள்; அதன் பலனாக, எங்கள் தேவைகள் எல்லாம் சந்திக்கப்படுகின்றன. அநேகருக்கு நாங்கள் ஆசீர்வாதமாக இருக்கும்படி ஆண்டவர் பெருகச் செய்துள்ளார். இதே ஆசீர்வாதத்தையும் பலனையும் ஆண்டவர் உங்களுக்கு தருவார்.
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, பிறரை ஆசீர்வதிப்பதற்கான அதிகாரத்தை எங்களுக்குக் கொடுப்பதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். மற்றவர்களுக்குக் கொடுப்பதற்கும் அவர்களை ஆசீர்வதிப்பதற்கும் எனக்கு உதாரத்துவமான உள்ளத்தைக் கொடுத்தருளும். நான் கொடுக்கும் காணிக்கைகள் பெருகி, அநேகருக்கு ஆசீர்வாதமாவதாக. "கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து, உங்கள் மடியிலே போடுவார்கள்," என்று நீர் கொடுத்த வாக்குத்தத்தம் என் வாழ்வில் நிறைவேறுவதாக. என் பிள்ளைகளை ஆசீர்வதித்து, உம் பரிபூரண ஆசீர்வாதங்களை அவர்கள் அனுபவிக்கும்படி செய்யும். எல்லா குறைவுகளிலுமிருந்து என் குடும்பத்தை பாதுகாப்பீராக. கொடுக்கும் உள்ளங்களையும் கரங்களையும் ஆசீர்வதித்தருளும்; அவர்கள் உம் ராஜ்யத்திற்கென்று விதைக்கிறவற்றை பெருகப்பண்ணும். உம் கிருபையும் மகிமையும் என் குடும்பத்தின்மீது தங்கி, எங்களை அநேகருக்கு ஆசீர்வாதமாக மாற்றுவதாக என்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


