அன்பானவர்களே, "நம்முடைய பிதாவாகிய தேவனாலும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும், உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக" (எபேசியர் 1:2) என்ற வாக்குத்தத்தத்தின்படி தேவன் உங்களுக்குக் கிருபையையும் சமாதானத்தையும் அருளுவார். ஆம், கிருபை நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவினிடமிருந்து வருகிறது என்று இந்த வசனம் கூறுகிறது. தேவன், உன்னதமான ஸ்தலங்களில் சமாதானத்தை உண்டாக்குகிறார்; ஆகவே, கிருபையும் சமாதானமும் உங்களுக்கு அருளப்படும் என்று வேதம் கூறுகிறது (யோபு 25:2). கிருபை எப்படி, எங்கிருந்து வருகிறது? "பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்" (ரோமர் 6:23) என்று வேதம் கூறுகிறது. கிருபை நம் பாவங்களை மன்னிக்கிறது; இயேசு கிறிஸ்துவின் மூலம் நித்திய ஜீவனை அளிக்கிறது.

இரண்டாவதாக, கிருபை பெலவீனத்தில் நமக்கு உதவுகிறது. மாம்சத்தில் உண்டாகும் பெலவீனத்தைக் குறித்து, முள்ளாகக் குத்துகிறது என்று நாம் முறையிடும்போது, தேவன் தம் கிருபையை அனுப்புகிறார் (2 கொரிந்தியர் 12:9).  கிருபை நம்மை பெலப்படுத்துகிறது; அது ஆவிக்குரியதும், பாவ இச்சைகளினால் உண்டானதும், வியாதியினால் உண்டானதும், போதுமான பொருளாதாரம் இல்லாததால் உண்டானதுமான மனரீதியான பெலவீனமாகவோ இருக்கலாம். அந்தப் பெலவீனத்திலிருந்து நம்மை விடுவிக்கும்படி அவரது வல்லமையை நமக்குள் கொண்டு வருகிறது. ஆனால், கிருபை வந்து நம்மை பெலப்படுத்துகிறது. அது இயேசுவிடமிருந்து வருகிறது. இயேசுதாமே நமக்காக பெலவீனத்தின் வழியாக கடந்து சென்றார். ஆகவே, பயப்படாதிருங்கள்.

மூன்றாவதாக, இயேசுவின் பரிபூரணத்தினால் நம் தேவைகளையெல்லாம் பெற்றுக்கொள்ளும்படி கிருபையின்மேல் கிருபையை பெறுகிறோம் என்று வேதம் கூறுகிறது (யோவான் 1:16). கிருபையுடன் சமாதானமும் வருகிறது. இயேசுவின் சமாதானம் இன்று உங்களிடத்தில் வருகிறது (யோவான் 14:27). அந்தச் சமாதானம் எல்லா துக்கத்தையும் உடைத்து, தேவனின் சமாதானத்தினால் உங்களை நிரப்பும். நீங்கள் ஜெபத்தில் கேட்கிறவை அனைத்துக்கும் பதில் கிடைக்கும். இந்தச் சமாதானம் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்திலிருந்து வருகிறது (கொலோசெயர் 1:20). அவரது இரத்தம் நன்மையானவற்றை பேசும்; உங்கள் தேவை எவையானாலும் கொடுக்கப்படும்; உங்கள் வாழ்க்கை சமாதானத்தினால் நிரப்பப்படும் (எபிரெயர் 12:24). தேவன்தாமே இந்தக் கிருபையையையும் சமாதானத்தையும் தருவாராக. இயேசுவிடம் இவை இரண்டும் உள்ளன. ஆகவே, இப்போது அவரை ஏற்றுக்கொள்ளுங்கள்.

ஜெபம்:
ஆண்டவரே, பெலவீனத்தோடும், தேவையோடும் இன்று உம்மிடம் வருகிறேன். ஆண்டவரே, என் பாவங்களையெல்லாம் மன்னித்துவிட்ட கிருபையென்னும் ஈவுக்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். உதவியற்றவனா(ளா)க நான் உணரும்போது அந்தக் கிருபை என்னை பெலப்படுத்துவதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். ஆண்டவரே, இப்போதும் என் சரீரம், மனம், ஆவியில் நான் பெலவீனமாக உணர்கின்ற ஒவ்வொரு பகுதியிலும் உம் பெலனை ஊற்றவேண்டுமென்று ஜெபிக்கிறேன். என் வாழ்க்கையில் எல்லா பகுதியினுள்ளும் கிருபையின்மேல் கிருபை புகுந்து செல்வதாக; உம் பரிபூரண சமாதானம் என் வாழ்விலுள்ள எல்லா துக்கத்தையும் முறித்துப்போடட்டும். உம் இரத்தம், இன்று என் வாழ்வில் நன்மையானவற்றை பேசட்டும். ஆண்டவரே, உம் கிருபையையும் சமாதானத்தையும் இப்போது பெற்றுக்கொள்கிறேன், ஆமென்.