அன்பானவர்களே, சங்கீதக்காரன், "என் புலம்பலை ஆனந்தக் களிப்பாக மாறப்பண்ணினீர்;...நீர் என் இரட்டைக் களைந்துபோட்டு, மகிழ்ச்சியென்னும் கட்டினால் என்னை இடைகட்டினீர்" (சங்கீதம் 30:11) என்று கூறுகிறான். இரட்டு என்பது நெருக்கத்தை, துக்கத்தை, துயரத்தை குறிக்கிற முரடான ஆடையாகும். இந்தத் துக்கத்தின் ஆடைக்குப் பதிலாக ஆண்டவர் நமக்கு களிப்பின் புதிய ஆடையை அளிக்கிறார். நம் தேவன் மறுரூபமாக்குவதில் தேர்ந்தவர். அவர், நீங்கள் இழந்த எல்லாவற்றையும் திரும்ப அளிப்பார்.

யோபின் சிறையிருப்பை மாற்றிய கர்த்தர், அவனை முன்பிருந்ததற்கு இருமடங்காய் ஆசீர்வதித்தார். யோபு, தன் ஆஸ்தியை, பிள்ளைகளை, உடல் சுகத்தை இழந்து மிகுந்த நெருக்கத்தின் வழியாக, பாடுகளின் வழியாக கடந்து சென்றான். அவனது உபத்திரவங்களின் முடிவில் கர்த்தர் அவனுக்கு எல்லாவற்றையும் திரும்ப கொடுத்து, பரிபூரணமாக ஆசீர்வதித்தார். ஆகவே, நீங்கள் பாடுபடும்போது தேவன் உபத்திரவங்களின் வாயிலாகவும் ஆசீர்வாதங்களைக் கொண்டு வருவார் என்பதை மறந்துபோகாதிருங்கள். யோபு, "கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எடுத்தார்; கர்த்தருடைய நாமத்துக்கு ஸ்தோத்திரம்," என்று கூறினான் (யோபு 1:21). தன் பாடுகளின் நடுவிலும் அவன் கர்த்தரின் நாமத்தை கனப்படுத்தினான். ஆகவேதான் இயேசு, "இப்பொழுது அழுகிற நீங்கள் பாக்கியவான்கள்; இனி நகைப்பீர்கள்" (லூக்கா 6:21) என்று கூறுகிறார். அன்பானவர்களே, இன்று நீங்கள் அழுதுகொண்டிருக்கலாம். ஆனால், உங்கள் துக்கம் நீடித்திருக்காது. ஆண்டவர் உங்களைச் சீர்ப்படுத்துவார்; உங்கள் வாயை நகைப்பினால் நிரப்புவார்; உங்கள் துக்கத்தை ஆனந்தக் களிப்பாக மாற்றுவார். அவர் யோபின் துக்கத்தை முழுவதுமாக மாற்றி மகிழ்ச்சியாக்கினார்.

கர்த்தர், இஸ்ரவேல் மக்களை அடிமைத்தனத்திலிருந்து விடுவித்தபோது இதேபோன்ற மறுரூபமாக்குதலை காண்கிறோம். வேதம், "சீயோனின் சிறையிருப்பைக் கர்த்தர் திருப்பும்போது, சொப்பனம் காண்கிறவர்கள்போல் இருந்தோம்" என்று கூறுகிறது (சங்கீதம் 126:1). கர்த்தர் நல்வாழ்வை திரும்ப கொடுத்தபோது, நடப்பதை அவர்களால் நம்ப இயலவில்லை. அவர்களைச் சுற்றிலுமிருந்த மக்கள், கர்த்தர் இவர்களுக்குப் பெரிய காரியங்களைச் செய்தார் என்று மகிழ்ந்தார்கள் (சங்கீதம் 126:2,3).

அன்பானவர்களே, அக்டோபர் 6ம் தேதி நடந்த ஒரு சம்பவத்தை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். உபவாச ஜெபம் ஒன்றில் நான் செய்தியளித்தபோது, நமக்கு எல்லாவற்றையும் திரும்ப கொடுக்கும் கர்த்தரின் வல்லமையைக் குறித்துப் பேசினேன். செய்தியளித்த பிறகு, நான் மக்களுக்காக ஜெபித்தேன். கூட்டம் முடிந்த பிறகு, ஒரு சகோதரி என்னிடம் வந்து மிகவும் அழுதார்கள். அவர்கள், "எனக்கு ஏகப்பட்ட கடன் இருக்கிறது. என்ன செய்வதென்று தெரியவில்லை," என்று கூறினார்கள். தன் சூழ்நிலையை எண்ணி திகைத்து, தரையில் விழுந்து அழுதார்கள். அங்கிருந்தவர்கள் அவர்களைப் பிடித்துக்கொள்ள முயன்றார்கள். நான், அவர்களை தனியே விட்டுவிடும்படியும், அவர்கள் ஆண்டவருக்கு முன்பாக தன் இருதயத்தை ஊற்றிவிடட்டும் என்றும் கூறினேன். அவர்கள், தொடர்ந்து அழுது, தேவ சமுகத்தில் தன் இருதயத்தை ஊற்றிவிட்டார்கள். அதன் பிறகு நான் என் கரங்களை அவர்கள்மேல் வைத்து அவர்களுக்காக ஜெபித்தேன். அன்று, கர்த்தர் நமக்காக யாவற்றையும் செய்து முடிப்பார் என்று செய்தி கொடுத்திருந்தேன். அந்த சகோதரிக்கும் கர்த்தர் யாவற்றையும் பூரணமாக செய்து முடித்திருப்பார் என்று இருதயத்தில் விசுவாசிக்கிறேன். எங்கள் ஊழியர்களை சீஷாவின் வாயிலாக அவர்களுக்கு உதவும்படி கேட்டுக்கொண்டிருக்கிறேன். ஆனால், ஆண்டவர் அவர்களுக்கு உதவி, அவர்களுக்காக யாவற்றையும் செய்து முடிப்பார் என்று அறிந்திருக்கிறேன்.

அன்பானவர்களே, உள்ளமுடைந்தோரை சீர்ப்படுத்திய, நெருக்கத்திலிருப்போரை விடுவித்த அதே தேவன் உங்கள் துக்கத்தையும் சந்தோஷமாக மாற்றுவார். கர்த்தர் உங்கள் இரட்டைக் களைந்து, களிப்பின் புது வஸ்திரத்தை உங்களுக்கு அணிவிப்பார். அன்பானோரை இழக்கக்கொடுத்ததால் அழுதுகொண்டிருக்கிறீர்களா? சொத்துகளை, செல்வத்தை, வாழ்வாதாரத்தை இழக்கக்கொடுத்தால் உங்கள் இருதயம் பாரப்பட்டிருக்கிறதா? கடனால், வேலையின்மையால் தத்தளித்துக்கொண்டிருக்கிறீர்களா? வாழ்க்கைத் துணைக்காக அல்லது குழந்தைக்காக ஏங்குகிறீர்களா? மனந்தளர்ந்து போகாதிருங்கள். உங்கள் பாரங்கள் எல்லாவற்றையும் ஆண்டவரிடம் கொண்டு வாருங்கள். அவரே உங்களை தேற்றுவதற்கு, பெலப்படுத்துவதற்கு, வாழ்க்கையை சீர்ப்படுத்துவதற்கு முடியும். உங்களை வழிநடத்தி, தம் பரிபூரண சித்தத்தின்படி உங்கள் தேவைகளை அருளிச்செய்வார் என்று நம்புங்கள். யோவின் வாழ்க்கை சீர்ப்படுத்திய தேவன் உங்கள் வாழ்விலும் புதிய தொடக்கத்தை அருளுவார்.

ஜெபம்:
அன்பின் பரம தகப்பனே, உம் பலத்த கரம் உம் பிள்ளைகள்மேல் அமர்ந்து அவர்களைத் தேற்றுவதாக. அவர்களது புலம்பலும் அழுகையும் முடிவுக்கு வருவதாக. அவர்களின் துக்கத்தின் இரட்டை எடுத்துப்போடுவீராக. அவர்கள் உள்ளங்களை உம் தெய்வீக சந்தோஷத்தால் நிரப்பும். தங்களுக்கு அன்பானோரை இழக்கக்கொடுத்ததினால் துக்கிக்கும் ஒவ்வொருவரையும் தேற்றுவீராக. பாடுபடும் அனைவரையும் பெலப்படுத்துவீராக. தகப்பனே, அவர்கள் இழந்தவற்றை உம் பரிபூரண சித்தத்தின்படி திரும்ப கொடுப்பீராக. வேலையில்லாதோருக்கு வேலையையும், கடனில் இருப்போருக்கு பொருளாதாரத்தையும், வியாபாரத்தை எதிர்நோக்குவோருக்கு புதிய வாய்ப்புகளையும், காத்திருப்போருக்கு வாழ்க்கைத் துணையையும், வாஞ்சிப்போருக்கு குழந்தை பாக்கியத்தையும் அருளிச் செய்தருளும். உம் பரிபூரண ஆசீர்வாதம் அவர்கள் வாழ்வில் நிரம்பி வழிவதாக. எல்லா குறைவுகளையும் அகற்றி, அவர்கள் வாய்களை நகைப்பினாலும் ஸ்தோத்திரத்தினாலும் நிரப்பும். உச்சிதமான ஆசீர்வாதங்களுக்காக உம்மை ஸ்தோத்திரித்து இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.