அன்பானவர்களே, இன்றைய வாக்குத்தத்தம், "நீங்களும் உங்கள் இரட்சிப்பின் சுவிசேஷமாகிய சத்திய வசனத்தைக் கேட்டு, விசுவாசிகளானபோது, வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட பரிசுத்த ஆவியால் அவருக்குள் முத்திரைபோடப்பட்டீர்கள்" (எபேசியர் 1:13) என்று கூறுகிறது. கர்த்தரில் நீங்கள் விசுவாசம் வைக்கும்போது, அவரை பின்பற்றத் தொடங்கும்போது, அவரை நம்பும்போது, தாம் வாக்குப்பண்ணியபடியே பரிசுத்த ஆவியை உங்களுக்குள் முத்திரையாக வைக்கிறார். ஆண்டவர்தாமே இந்தக் கிருபையை இன்று உங்களுக்குத் தந்தருளுவாராக. எல்லா ஜனங்களுக்கும் முன்பாக, பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டிருக்கும் தம் ஆலயமாக, நீங்கள் காணப்படும்படி தம் முத்திரையை கர்த்தர் உங்கள்மேல் போடுகிறார். ஆகவே, தைரியமாயிருங்கள்!
அன்பானவர்களே, ஆண்டவர், யார் தமக்குச் சொந்தமானவர்கள் என்றும், யாரை தம் பரிசுத்த ஆவியால் முத்திரையிட்டிருக்கிறார் என்றும் அறிந்திருக்கிறார். வேதத்தில், "கர்த்தர் தம்முடையவர்களை அறிவாரென்பதும், கிறிஸ்துவின் நாமத்தைச் சொல்லுகிற எவனும் அநியாயத்தைவிட்டு விலகக்கடவனென்பதும், அதற்கு முத்திரையாயிருக்கிறது" (2 தீமோத்தேயு 2:19) என்று வாசிக்கிறோம். இந்த முத்திரை எதைக் குறிக்கிறது? பொல்லாங்கையும் அநியாயத்தை விட்டு திரும்பிய, பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்ட வாழ்க்கையைக் குறிக்கிறது. ஆண்டவரின் நாமத்தை தரித்திருக்கும் மனுஷனோ, மனுஷியோ பொல்லாங்கை விட்டு திரும்பும்படி அவர் அழைக்கிறார். நாம் அநியாயமாய் நடக்கவோ, நம் வாழ்வை அது ஆளுகை செய்யவோ இடங்கொடுக்கக்கூடாது. ஆண்டவர் இந்தக் கிருபையை இன்று நமக்கு அருளுவாராக. பரிசுத்த ஆவியின் முத்திரை அதையே குறிக்கிறது. அதற்காகவே அவர் பரிசுத்த ஆவியை நமக்கு ஈவாகக் கொடுத்திருக்கிறார். இறுதியாக நம் பரம வீட்டை அடையும்வரை ஆண்டவரே நம்மை முத்திரையிட்டு பாதுகாக்கிறார். வேதம், "நீங்கள் மீட்கப்படும்நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்தஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள்," என்று கூறுகிறது (எபேசியர் 4:30). நீங்கள் பரலோகத்தை அடையும் கடைசி தருணம் வரைக்கும் ஆண்டவர் உங்களைப் பத்திரப்படுத்தி, தம் சமுகத்தால் பாதுகாக்கிறார். தம் பரிபூரண சித்தத்தை நிறைவேற்றும்படி அவர் உங்களைக் காப்பதோடு, தம் சித்தப்படி அனுதினமும் வாழ்வதற்கான பெலனையும் கிருபையையும் அருளுகிறார்.
அவரை துக்கப்படுத்தாதவண்ணம் வாழ்வதற்கான கிருபையை உங்களுக்குத் தருகிறார். அனுதினமும் இந்தக் கிருபையை பெறும்வண்ணம், நாம் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருக்கவேண்டும். பரிசுத்த ஆவியானவர் நம் பலவீனங்களில் நமக்கு உதவுவார் என்று வேதம் கூறுகிறது (ரோமர் 8:26). தேவ சித்தம் நம் வாழ்வில் நிறைவேறும்படி அவர் வாக்குக்கடங்காத பெருமூச்சோடு நமக்காக வேண்டுதல் செய்கிறார். நாம் தவறு செய்யும்போது, குறைகளைச் சந்திக்கும்போது, களைப்படையும்போது, கேள்விகளால் உபத்திரப்பட்டு தத்தளிக்கும்போது, பரிசுத்த ஆவியானவர் நமக்குள்ளாக கிரியை செய்து, நமக்காக வேண்டுதல் செய்கிறார். பிறகு கர்த்தரின் முத்திரை நம் வாழ்வில் காணத்தக்க ஆதாரமாக மாறுகிறது. பரிசுத்த ஆவியானவரின் முத்திரை நம்மை தேவனுக்குச் சொந்தமானவர்களாக குறிப்பதோடு, அவரது ஆலயமாக பாதுகாக்கவும் செய்கிறது. ஒருநாள் பரலோக வீட்டை அடைகிறவர்களாக, பரலோகத்திற்குச் சொந்தமானவர்களாக நாம் வாழ்வோம்.
வேதத்தில், "உங்களோடேகூட எங்களையும் கிறிஸ்துவுக்குள் ஸ்திரப்படுத்தி, நம்மை அபிஷேகம்பண்ணினவர் தேவனே" (2 கொரிந்தியர் 1:21) என்று எழுதியிருக்கிறபடி, கர்த்தர் கிறிஸ்துவுக்குள் நம்மை நிலைநிறுத்தி, இந்த உலகில் தம் நோக்கத்தை நிறைவேற்றுகிறவர்களாக வைக்கிறார். இந்தக் கிருபையை உங்களுக்கு அருளுவாராக. வேதம் கூறுகிறபடி, நம்மை முத்திரித்து, நம்முடைய இருதயங்களில் ஆவியென்னும் அச்சாரத்தையும் கொடுப்பார் (2 கொரிந்தியர் 1:22). தம் சொந்தப் பிள்ளையைப்போல் உங்களை வழிநடத்துவார். வேதம், "எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள்" என்று கூறுகிறது (ரோமர் 8:14).
ஆம், நீங்கள் தேவ பிள்ளையாயிருக்கிறீர்கள். ஆண்டவர்தாமே உங்களை தம் சொந்தப் பிள்ளையாக பாதுகாத்து வைத்துக்கொள்வாராக. நீங்கள் அவரை துக்கப்படுத்தாதபடி, இறுதி வரைக்கும், பரலோகத்தை அடையும் வரைக்கும் ஆண்டவர்தாமே உங்களை முத்திரையிட்டு, வழிநடத்துவாராக. அவரே உங்களைப் பரலோகத்திற்குச் சொந்தமானவராகக் காத்து, தொடர்ந்து தம் ஆவியால் நிரப்பி, உங்களுக்காக வேண்டுதல் செய்து, தம் வழிகளில் நடத்தி, பெலப்படுத்தி, பாதுகாப்பாராக.
ஜெபம்:
தகப்பனே, உம்முடைய பரிசுத்த ஆவியால் முத்திரையிடப்படும் கிருபையை எனக்கு அருளுவீராக. இந்தக் கிருபையின் நதிகள் என் வாழ்வில் பெருகுவதாக. கிறிஸ்துவுக்குள் உம் பிள்ளையாக வாழும்படியும் உம் சித்தத்தை நிறைவேற்றும்படியும், பரிசுத்த ஆவியால் முத்திரையிடப்பட்டு வழிநடத்தப்படும் கிருபையை எனக்கு அருளிச்செய்து என் பரலோக வீட்டை அடைய உதவவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


