எனக்கு அருமையான தேவ பிள்ளையே, நம் ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன். இன்றைக்கு, "அவர்களுக்கு நன்மை செய்யும்படி அவர்கள்மேல் சந்தோஷமாயிருந்து, என் முழு இருதயத்தோடும் என் முழு ஆத்துமாவோடும் அவர்களை இந்த தேசத்திலே நிச்சயமாய் நாட்டுவேன்" (எரேமியா 32:41) என்ற வாக்குத்தத்தம் நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. இப்படி வாக்குக்கொடுக்கும் நம் ஆண்டவர், நிச்சயமாகவே தம் வாக்குத்தத்தங்கள் எல்லாவற்றையும் நிறைவேற்றுவார். வேதம், "கர்த்தர் நன்மையானதைத் தருவார்," என்றும், "கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையுங் குறைவுபடாது." என்றும் கூறுகிறது (சங்கீதம் 85:12; 34:10). ஆம், அன்பான தேவ பிள்ளையே, உங்கள் முழு இருதயத்தோடும் ஆண்டவரை தேட வேண்டும்.

ஆம், அவரை நாம் எப்போதும் தேடவேண்டும். தாவீது, கர்த்தரை உண்மையாய் தேடிய தேவ மனுஷனாக இருந்தான். அதிகாலையில், மத்தியானத்தில், இரவில் அவன் தேடினான். அவன் எப்போதும் தேவனை இறுகப்பற்றிக்கொண்டிருந்தான். அவன் வாழ்க்கை முழுவதும் கர்த்தர் அவனோடிருந்தார். சாதாரண மேய்ப்பனாக இருந்த அவனை, தேவன் பரிபூரணமாக ஆசீர்வதித்தார்; ராஜாவாக உயர்த்தினார். அன்பான தேவ பிள்ளையே, நம் தேவன் எவ்வளவு மகத்தானவர். "கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்; நான் தாழ்ச்சியடையேன்," என்று அவன் கூறுகிறான் (சங்கீதம் 23:1). "இந்த ஏழை கூப்பிட்டான், கர்த்தர் கேட்டு, அவனை அவன் இடுக்கண்களுக்கெல்லாம் நீங்கலாக்கி இரட்சித்தார்," என்றும் வேதத்தில் வாசிக்கிறோம் (சங்கீதம் 34:6).

அன்பான தேவ பிள்ளையே, இந்த உலகத்தில் பல்வேறு உபத்திரவங்கள் நம்மை நெருக்குகின்றன. ஆகவே, நாம் அவரை நோக்கிப் பார்க்கவேண்டும். தாவீது செய்ததுபோல, அவரை இறுகப் பற்றிக்கொள்ளவேண்டும். உங்கள் உபத்திரவம் எதுவாக இருந்தாலும், உங்களை விட்டு அது நீங்கிப்போகும். வேதம், "எங்கள் தேவனுடைய கரம் தம்மைத் தேடுகிறவர்கள் எல்லார்மேலும் அவர்களுக்கு நன்மையாக இருக்கிறதென்றும்... சொல்லியிருந்தோம்" என்று கூறுகிறது (எஸ்றா 8:22). நம் வாழ்க்கையைச் சீர்தூக்கிப் பார்ப்போம். நம் முழு உள்ளத்தோடு அவரைத் தேடுகிறோமா? தேவனுடைய வார்த்தையை வாசிப்பதற்கு, அவர் சமுகத்தில் இருப்பதற்கு, நம் எல்லா தேவைகளுக்காகவும் அவரிடம் விண்ணப்பம் செய்ய எவ்வளவு நேரத்தை செலவிடுகிறோம்? எந்த மனுஷனிடமோ, மனுஷியிடமோ செல்லாதீர்கள். எப்போதும் தேவனிடமே செல்லுங்கள். கர்த்தர் எல்லாவற்றையும் உங்களுக்கு நேர்த்தியாகச் செய்வார். அப்படி உங்கள் வாழ்க்கையை அவருக்கு அர்ப்பணிப்பீர்களா?

ஜெபம்:
அன்பின் தகப்பனே, எனக்கு நன்மை செய்வதாக நீர் அளித்திருக்கும் வாக்குத்தத்தத்திற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். எல்லா தருணங்களிலும் உம்மையே தேடுவதற்கு எனக்குக் கற்றுத்தாரும். தாவீதைப்போல உம்மையே பற்றிக்கொள்ள உதவும். உம்மிடமிருந்து என்னை விலகச்செய்யும் எல்லா காரியங்களையும் அகற்றியருளும். உம் பிரசன்னத்தின் தாகத்தால் என் உள்ளத்தை நிரப்பியருளும். நான் உம்மை தேடுவதால் எந்த நன்மையிலும் குறைவுபடாதிருப்பேனாக. என் மேய்ப்பராக இருந்து எப்போதும் என்னை வழிநடத்தும். என் வாழ்க்கையை முழுவதும் உம் கரங்களில் ஒப்படைத்து இயேசுவின் விலையேறப்பெற்ற நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.