எனக்கு அருமையான தேவ பிள்ளையே, இன்றைய வாக்குத்தத்தமான, "நானோ நீதியில் உம்முடைய முகத்தைத் தரிசிப்பேன்; நான் விழிக்கும்போது உமது சாயலால் திருப்தியாவேன்" (சங்கீதம் 17:15) என்ற வசனத்தைத் தியானிப்போம். நீங்கள் நீதியாய் வாழ்ந்து, தம்முடன் நெருங்கி ஜீவிக்கவேண்டும் என்று ஆண்டவர் விரும்புகிறார். வேதம், "இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்," என்று கூறுகிறது (மத்தேயு 5:8). உங்கள் இருதயத்தைச் சுத்தமாகக் காத்துக்கொண்டு, தேவனுடைய வார்த்தையின்படி செய்தால், வாழ்க்கையில் அவரது சமுகத்தை அனுபவிப்பீர்கள்; எப்போதும் உணருவீர்கள்.
இயேசு, "நானும் என் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம்," என்று கூறியிருக்கிறார். தம் பிதாவுக்கு உண்மையாயிருப்பதாலும் பிதாவின் சமுகத்தில் நேரம் செலவழிப்பதாலும் அவரால் இப்படி கூற முடியும். இயேசு, தம் பிதாவை அதிகாலமே தேடினார் என்றும், இரவு முழுவதும் பிதாவோடு கழித்தார் என்றும் கூறும் வேதம், தேவ பிரசன்னத்தில் நிலைத்திருப்பதன் அவசியத்தையும், அவருடன் ஐக்கியம் பேணுவதன் முக்கியத்துவத்தையும் கூறுகிறது (மாற்கு 1:35; லூக்கா 6:12; யோவான் 14:23). இயேசுவின் மாதிரியை நாம் பின்பற்றி, தேவனோடு அனுதினமும் நேரம் செலவிடவேண்டும்.
தாவீதும் உண்மையாய் கர்த்தரை தேடினான். வேதம், அவன் அதிகாலையிலேயே தேவனை உண்மையாய் தேடினான் என்றும், அந்தி, சந்தி, மத்தியான வேளைகளில் வேண்டுதல் செய்தான் என்றும் கூறுகிறது (சங்கீதம் 63:1; 55:17). ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்த இளைஞனான தாவீதை, தேவன் பரிபூரணமாக ஆசீர்வதித்தார்; தம் தீர்க்கதரிசியாக எழுப்பினார். கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலைக் குறித்து தீர்க்கதரிசனம் உரைக்கச் செய்தார் (அப்போஸ்தலர் 2:30,31). ஜெபத்தினால் தாவீது, தேவனுடன் நெருங்கிய ஐக்கியம் பாராட்டினான்; கர்த்தர் அவனை வல்லமையாக பயன்படுத்தினார். அவ்வண்ணமே, நாம் தொடர்ந்து ஜெபித்து, காலையிலிருந்து இரவு வரை தேவனுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கவேண்டும்.
நாம் இயேசுவின் பாதைகளையும், தாவீதின் பாதைகளையும் பின்பற்றும்போது, நம் வாழ்க்கையும் செய்கைகளும் கிறிஸ்துவின் குணாதிசயத்தை காட்டும். முழு மனதோடு தேவனைப் பற்றிக்கொண்டு, அவரது வழிகளில் உண்மையாய் நடப்பதற்கான கிருபையை அளிக்கும்படி கேட்போம். கர்த்தரால், தாவீதைப்போல நம்மையும் எழுப்பி, தம் மகிமைக்கென பயன்படுத்த முடியும். நம் வாழ்க்கையை, "தேவனுடன் தினமும் காலை, பகல், மாலை வேளைகளில் நேரம் செலவிடுகிறோமா? அவரது பிரசன்னத்தைக் குறித்த வாஞ்சை நமக்கு உள்ளதா?" என்று ஆராய்ந்து பார்ப்போம். நாம், நீதியாக வாழ்ந்து, அவரைக் கிட்டிச்சேர்ந்து, அனுதினமும் அவரது சமுகத்தை அனுபவிக்கும் கிருபையை பெற்றுக்கொள்வோம்.
ஜெபம்:
அன்புள்ள பரம தகப்பனே, நீதியில் நடந்து உம்மோடு நெருங்கியிருப்பதற்கு சுத்த இருதயத்தை எனக்கு அருளும். உம் சமுகத்தின்மேல் ஆழமான வாஞ்சையை எனக்குத் தாரும். இயேசுவையும் தாவீதையும்போல தினமும் காலை, மாலை, மதிய நேரங்களில் உம்மை தேடுவதற்கு எனக்கு உதவும். உம் வசனத்தின்படி உண்மையாய் நடக்கவும், அவற்றை என் செயல்களில் காட்டவும் எனக்குக் கற்றுக்கொடுத்தருளும். நாள் முழுவதும் உம் சமுகத்தை அனுபவிக்கும்படி செய்தருளும். தாவீதைப்போல என்னை எழுப்பி, உம் மகிமைக்கென்று பயன்படுத்தும். தொடர்ந்து ஜெபிக்கும் வாழ்க்கையை எனக்கு அருளி, இறுதிவரை உண்மையாயிருப்பதற்கான கிருபையை தந்தருளவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


