அன்பானவர்களே, இன்று அதிகமான விசுவாசத்துடன் உங்களை வாழ்த்துகிறதில் மகிழ்ச்சியடைகிறேன். தேவன் எப்போதுமே சிறந்தவற்றை, எந்தத் தகப்பனாலும் கொடுக்கக்கூடாத அளவு சிறந்தவற்றை தருகிறவராயிருக்கிறார். இன்று அவரிடமிருந்து சிறந்த ஈவைப் பெற்றுக்கொள்ளுங்கள். வேதம், "கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்..." (மத்தேயு 7:7) என்று கூறுகிறது. ஆண்டவர் இவ்வாறு நம்மிடம் கூறுகிறார். 'பர்கர்' என்ற உணவு என் நண்பனுக்கு மிகவும் பிடிக்கும். எப்பொழுதெல்லாம் நாங்கள் வெளியே செல்கிறோமோ அப்பொழுதெல்லாம் அவன் பர்கரை சாப்பிட்டுவிட்டு, "ஓ... இது நன்றாக இல்லை. இதில் இது இல்லை. அது இல்லை," என்று சொல்லுவான். நாங்கள் மூன்று, நான்கு கடைகளில் முயற்சி செய்தோம். அவன் திருப்தியாகவேயில்லை. ஆகவே அவன், "நான் சிறந்த பர்கரை கண்டுபிடிக்கும்வரை கடை கடையாய் செல்ல போகிறேன்," என்றான்.
அவனிடம் பேசி பல மாதங்கள் கடந்தன. திடீரென ஒருநாள், "ஹா... நான் சிறந்த பர்கரை கண்டுபிடித்துவிட்டேன். இது மிகவும் நன்றாக இருக்கிறது; பூரணமாக இருக்கிறது. அது எங்கே கிடைக்கிறது என்று நான் சொல்லமாட்டேன். நீயே கண்டுபிடித்துக்கொள்," என்று கூறினான். கடைசியாக பர்கரை கண்டுபிடித்துவிட்டதால் அவன் அதிக மகிழ்ச்சியாய் இருந்தான். ஒருவர், தன் இருதயத்திற்கு பிடித்தமான பர்கருக்காய் இவ்வளவு அதிகமாய் தேடினால், நாம் எவ்வளவு அதிகமாய் ஆண்டவர் இயேசுவிடம் கேட்கவேண்டும்; நாம் விரும்புகிறவற்றுக்காக ஜெபிக்கவேண்டும். அவர் எப்போதும் சிறந்தவற்றையே நமக்குக் தருவார். ஒருவர், பர்கருக்காக ஒவ்வோரிடமாய் தேடிச் சென்றால், நாம் ஜெபத்தில் காத்திருந்து தினமும் நமக்கு வேண்டியவற்றை ஆண்டவரிடம் கேட்க முடியாதா?
ஆண்டவர் நமக்குத் தருவார். அவர், "கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்" என்று கூறியிருக்கிறார். தேவ பிள்ளைகளாகிய நாம் அவரையே சார்ந்திருக்கவேண்டும். ஆண்டவர் மாத்திரமே அதிசயங்களைச் செய்து நமக்கு வேண்டியவற்றை அருளிச்செய்வார். ஆகவே, நல்ல பலன்களைப் பெறுவதற்காக கடுமையான உழைப்பை மாத்திரமே சார்ந்திருக்காதீர்கள். ஊழியத்தில், உங்கள் பேச்சுத் திறமையை சார்ந்திருக்காதீர்கள். உங்கள் தாலந்து மாத்திரமே பெரிய வெற்றியை கொண்டு வரும் என்று நினைக்காதீர்கள். தேவ பிள்ளைகளுக்கு, அவரது ஆசீர்வாதம் மாத்திரமே, அவர் திறக்கும் வாசல் மாத்திரமே, அவரது அற்புதங்கள் மாத்திரமே சிறந்தவற்றை அளிக்கும். அன்பானவர்களே, ஆண்டவரையே சார்ந்து, அவரிடமே ஊக்கமாய் ஜெபித்திடுங்கள். இப்போது அவரிடம் கேட்பீர்களா?
ஜெபம்:
அன்பு தகப்பனே, உம்மையே பின்பற்ற விரும்பும் இருதயத்துடன் வருகிறேன். ஆண்டவரே, உம்மிடம் கேட்பதற்கு, உம்மை தேடுவதற்கு, முழுவதும் உம்மை நம்புவதற்கு எனக்குக் கற்பித்தருளும். என் சுயபெலத்தை சார்ந்துகொள்ளச் செய்கின்ற எல்லா சந்தேகத்தையும் அகற்றும். நீர் எப்போதும் சிறந்ததையே தருவீர் என்று நம்புவதற்கு உதவி செய்யும். காத்திருப்பதற்கான பொறுமையையும் தொடர்ந்து ஜெபிப்பதற்கான விசுவாசத்தையும் தந்தருளும். என் வாழ்க்கையில் நீர் மாத்திரமே திறக்கக்கூடிய ஏற்ற வாசல்களை திறந்திடுவீராக. உம் ஆசீர்வாதங்களும் அற்புதங்களும் என் பாதையை வழிநடத்துவதாக. உம்மை முற்றிலுமாக சார்ந்திருக்கப்போகிறேன் என்று அறிக்கையிட்டு இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


