அன்பானவர்களே, இன்று சர்வதேச சமாதான நாளாகும். எல்லாப் புத்திக்கும் மேலான தேவ சமாதானம் ஆண்டவரிடமிருந்து நமக்கு வருகிறது. இன்று நாம் தேவ வார்த்தையை வாசிக்கும்போதும் அவரது சமாதானம் உங்கள்மேல் வரும். "எங்கள் தேவனாகிய ஆண்டவரின் பிரியம் எங்கள்மேல் இருப்பதாக; எங்கள் கைகளின் கிரியையை எங்களிடத்தில் உறுதிப்படுத்தும்" (சங்கீதம் 90:17) என்று வேதம் கூறுகிறவண்ணம், நீங்கள் புதிதாக ஒன்றை, ஒரு முயற்சியை, வேலையை, வியாபாரத்தை, திட்டத்தை அல்லது ஆராய்ச்சியை தொடங்கியிருக்கலாம். அது வெற்றிகரமாக முடியுமா அல்லது நீங்கள் அம்முயற்சியில் ஜெயிப்பீர்களா என்று தெரியாமலிருக்கலாம். "ஆண்டவரே, நான் இதில் வெற்றிபெறுவேனா?" என்று நீங்கள் திகைத்துக்கொண்டிருக்கலாம். இன்று, இந்த சங்கீதத்திலுள்ள வேண்டுதலின்படி, கர்த்தருடைய பிரியம் உங்கள்மேல் தங்குவதாக. உங்கள் கைகளின் கிரியையை உங்களுக்காக அவரே உறுதிப்படுத்துவார்.

என் தந்தைக்கும், எங்கள் ஊழியத்துக்கும் இதே அனுபவம் டெல்லியில் கிடைத்தது. நாங்கள் டெல்லியில் ஜெப கோபுரத்தை ஸ்தாபித்தபோது, ஆண்டவர் என் தந்தையிடம், "இந்த ஜெப கோபுரத்திலிருந்து தேசத்துக்காக ஜெபிக்கவேண்டும் என்று நான் உன்னிடம் கூறவில்லையா? நீ ஏன் அதைச் செய்யவில்லை?" என்று கேட்டார். பிறகு, "இதுவே அதற்கான நேரம்," என்றும் கூறினார். ஆண்டவர், அவரிடம் ஜெப கோபுரத்தை தேசத்தின் அதிகார மையத்திற்கு, நாடாளுமன்றத்துக்கு அருகில், பிரதமரின் இல்லத்தின் அருகே மாற்றுமாறு கூறினார். அவரே சரியான இடத்தையும் கூறினார். அதன்பிறகு, நாங்கள் எங்களால் வாங்குவதற்கோ, வாடகை கொடுப்பதற்கோ இயன்ற சரியான அமைவிடத்தை கண்டுபிடிக்கவேண்டியதாயிருந்தது.

தேசத்துக்காக பிரார்த்தனை ஏறெடுக்கும் ஜெப கோபுரத்தை நாம் எப்படி ஸ்தாபிக்கப் போகிறோம் என்று யோசித்துக்கொண்டிருந்தோம். அது புதிதான ஓர் எண்ணமாகும். மக்களை எங்கிருந்து கண்டுபிடிப்பது? எங்கிருந்து பொருளாதாரம் கிடைக்கும் என்றெல்லாம் திகைத்தோம். ஆனால் என் தந்தை எங்கள் குழுவினருடன் சென்றார். அற்புதவிதமாக பரிசுத்த ஆவியானவர் அந்த இடத்துக்கு எங்களைக் கொண்டு சேர்த்தார். அந்தக் கட்டடத்தின் 21வது மாடியை கட்டிக்கொண்டிருந்தார்கள். தேவன் என் தந்தைக்கு கொடுத்த குறிப்புகளுக்கு ஏற்றதாய், முக்கோண வடிவில், மூன்று பிரிவுகளைக் கொண்டதாய் அந்தக் கட்டடம் இருந்தது. அதிகார மையத்தின் அருகே அமைந்திருந்த அந்த இடத்திலிருந்து நாம் நாடாளுமன்றத்தை பார்க்க முடியும். நாங்கள், "ஆண்டவரே, எங்கிருந்து பணம் வரும்?" என்று திகைத்தபோது, அவர், "நானே அதற்கானதைக் கொடுக்கிறேன்," என்று கூறினார். தேசம் முழுவதிலுமிருந்து மக்கள் ஜெப கோபுரத்தை ஸ்தாபிப்பதற்காக, தேவையான தொகையை சரியாய் அளித்தனர்.

ஏற்ற சமயத்தில் அது கிடைத்தது ஆச்சரியமாகும். அற்புதவிதமாக தேவன், அந்த ஜெப கோபுரத்துக்கு வந்து ஜெபிக்கும் ஜெப வீரர்களை, வீராங்கனைகளை எழுப்பினார். தேசமெங்கும் வெவ்வேறு ஜெப கோபுரங்களிலிருந்து ஆண்டவர் அழைத்த அந்த எளிய மக்களுக்கு தேசத்துக்காக பிரார்த்தனை செய்வதில் பெருத்த தாகம் இருந்தது. அவர்கள் தேசிய ஜெப கோபுரத்துக்கு வந்து ஜெபித்தனர். ஆண்டவர் அவர்கள் வாயிலாக, தாம் தேசத்துக்குச் செய்யப்போகும் காரியங்களைக் குறித்து தீர்க்கதரிசனம் உரைப்பார். கர்த்தரே எங்களுக்காக யாவற்றையும் உறுதிப்படுத்தியது வியப்பாயிருந்தது. எங்கள் வாழ்க்கைக்கு, ஊழியங்களுக்கு, வேலைக்கு பெருத்த தயவும் சிறந்த வாசல்களும் கிடைத்தன. நம் வாழ்வில் அவற்றைப் பெற்றுக்கொள்வோம்.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, உம் பெரிய தயவு உம் பிள்ளைகள்மேல் இருக்கட்டும்; அவர்கள் கைகளின் கிரியையை உறுதிப்படுத்தியருளும். புதிய திட்டங்களை, வேலைகளை, வியாபாரங்களை, ஊழியங்களை, படிப்புகளை தொடங்குகிறவர்களுக்கு வாசல்களைத் திறந்தருளும். அவர்களுக்கு ஏற்ற இடத்தை, ஏற்ற மக்களை, பொருளாதாரத்தை, குழுவை, ஞானத்தை, திறனை, தகுதியை அருளிச்செய்யும். நீர் அற்புதவிதமாக டெல்லி ஜெப கோபுரத்தை ஸ்தாபித்து, தேசத்துக்காக ஜெபிப்பதற்கு ஜெப வீரர்களை எழுப்பியதுபோல, உம் மகிமைக்காக செய்யப்படும் எல்லாவற்றையும் உறுதிப்படுத்தும். எல்லா பயத்தையும் நிச்சயமற்ற நிலையையும் அகற்றும்; உம் அபிஷேகமே அவர்களை வெற்றிக்கு வழிநடத்தட்டும். அவர்கள் செய்யும் எல்லா காரியங்களும் உம் நாமத்திற்கு கனத்தைக் கொண்டு வரட்டும்; உம் நினைவுகளை நிறைவேற்றட்டும். உம் கிருபையை, தயையை, அருட்கொடையை அவர்களுக்கு அருளவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.