அன்பானவர்களே, இன்று உங்களை வாழ்த்துகிறதில் மகிழ்ச்சியடைகிறேன். இன்றைக்கு ஆண்டவர், "உன் வாயிலே எக்காளத்தை வை; ...கர்த்தருடைய வீட்டின்மேல் சத்துரு கழுகைப்போல் பறந்துவருகிறான்" (ஓசியா 8:1) என்ற வாக்குத்தத்தத்தை தருகிறார். இந்த வசனம் நாம் இருக்கும் தேவனுடைய வீட்டின்மேல் கழுகு பறப்பதாகக் கூறுகிறது; நம்மை நோக்கி வரும் எதிர்ப்பை அது குறிக்கிறது. ஏனென்றால் நாம் கர்த்தருக்குக் கீழ்ப்படியாமற்போனதாகவும், அவரை தேடாமற்போனதாகவும், அவரைப் பின்பற்றாமல் இருந்ததாகவும், அவரை சேவிக்காமல் இருந்ததாகவும் வசனம் கூறுகிறது. அதை கர்த்தரே நமக்குக் குறிப்பிட்டுக் காட்டுவது உள்ளத்தை உடைப்பதாக உள்ளது. அன்பானவர்களே, இன்றே நாம் தேவனுடனான உறவை சரி செய்வோம்.

ஆனால், ஆண்டவர் நம்மேல் இன்னும் நினைவாயிருக்கிறார். அவர், "எக்காளத்தை உன் வாயில் வை," என்று கூறுகிறார். எக்காளம், கர்த்தரின் அழைப்பை, வேதனையில் மத்தியில், துன்பத்தின் நடுவில் அவரை துதிப்பதற்கான அழைப்பை குறிக்கிறது. இன்று தேவனை நோக்கிக் கூப்பிட்டு, "ஆண்டவரே, என்னை மன்னித்தருளும். எங்களிடம் வந்து ஆசீர்வதித்து வழிநடத்தியருளும்," என்று கேட்போம். நிச்சயமாகவே அவர் நம் எக்காள சத்தத்தைக் கேட்பார். குழந்தை எல்லாவற்றையும் தகப்பனிடம் கூறி, உதவி கேட்பதுபோல, தம்மிடம் எல்லாவற்றையும் நாம் கேட்கவேண்டும் என்று அவர் விரும்புகிறார். தம்மையே முதலாவது கூப்பிடவேண்டும் என்றும் வாஞ்சிக்கிறார். தம்மையே தேடி தமக்குக் கீழ்ப்படிந்து தம்மிடம் முதலாவது கேட்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறார். தம்மிடம் கீழ்ப்படிதலோடு ஜெபிப்பதையே அவர் எல்லாவற்றுக்கும் மேலாக விரும்புகிறார். இதுவே தேவனுக்குச் செவிகொடுத்து கீழ்ப்படிவதாகும்.

ஆகவே, இன்று உங்கள் வாயில் எக்காளத்தை வைத்திடுங்கள். உங்களுக்கு எது வேண்டுமானாலும் அவரிடம் கேளுங்கள். அவரையே சார்ந்திருங்கள்; நாம் அவரை நோக்கி முதலாவது கூப்பிட்டால் அவர் தந்தருளுவார். அதற்காகவே நாம் எக்காள ஜெபக் குழுவை நடத்துகிறோம். இன்றைய தினம் அதன் ஆறாவது தொடக்க தினமாகும். பகலில் நாம் 1 மணி முதல் 1:30 மணி வரை எக்காள ஜெபத்தை நடத்துகிறோம். நம் எல்லா தேவைகளையும் ஆண்டவரிடம் எழுப்புகிறோம். இந்த எக்காள ஜெபக் குழுவில் நீங்களும் இணைந்துகொண்டு கர்த்தரை தேடலாம். தினமும் உங்கள் வாயில் எக்காளத்தை வைத்திடுங்கள்; கர்த்தர் எல்லா கழுகுக்கும் விரோதமாக யுத்தம் செய்யவும், எல்லா எதிர்ப்பையும் அகற்றி உங்களை ஆசீர்வதித்து வழிநடத்தவும் பிரியமாயிருக்கிறார்.

ஜெபம்:
அன்பின் தகப்பனே, முதன்முதலாய் உம்மை தேடுவதற்கு தவறியதற்காக  மன்னிப்பை நாடி, தாழ்மையுள்ள இருதயத்துடன் உம் முன்னே வருகிறேன். எல்லா சூழ்நிலையிலும் உம்மை நோக்கிக் கூப்பிட எனக்குக் கற்றுத்தாரும். உம்மை முற்றிலும் நம்புவதற்கான விசுவாசத்தை எனக்குத் தந்தருளும். நான் உம்மை நோக்கிக் கூப்பிடுவதால், எனக்கு எதிராக நிற்கும் எல்லா எதிர்ப்புகளையும் அகற்றும். என் யுத்தங்களை நீரே செய்யும்; உம் வழிகளில் என்னை நடத்தும். தினமும் ஜெபித்து உமக்குக் கீழ்ப்படிய எனக்கு உதவும். எப்போதும் உம் பிரசன்னமே என் வாழ்க்கையை நடத்துவதாக என்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.