எனக்கு அருமையான தேவ பிள்ளையே, நம் ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன். இன்றைக்கு, "கர்த்தராகிய ஆண்டவர் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரருக்குத் தமது இரகசியத்தை வெளிப்படுத்தாமல் ஒரு காரியத்தையும் செய்யார்" (ஆமோஸ் 3:7) என்ற வசனத்தைத் தியானிப்போம். தீர்க்கதரிசிகள்! அநேகர் இந்த வரத்தினால் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறார்கள்; இது சிறந்த வரமாகும். ஆனால், நாம் எப்படி இந்த வரத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்? ஆண்டவருடன் நெருங்கிய ஐக்கியம் கொண்டு, இயேசுவுடன் நேரத்தைச் செலவிட்டு, அவருடன் பேசி, அவருடன் நடப்பதன் மூலமாக பெற்றுக்கொள்ளலாம். என் வீட்டில் நான் இதைக் கண்டிருக்கிறேன். என் கணவர் ஆண்டவருடன் பேசுவதையும், எப்போதும் அவருடன் நடப்பதையும் கண்டிருக்கிறேன்.
கணவனும் மனைவியுமாக நாங்கள் ஒருவருக்கொருவர் உரையாடிக்கொள்ளவும், சேர்ந்து உலக காரியங்களை அனுபவிக்கவும் நேரம் செலவழிப்பதில்லை. அவர் இயேசுவுடனேயே எல்லா நேரத்தையும் செலவழிப்பார்; அலுவலகம் செல்வார்; திரும்பி வருவார்; தேவனுடன், தேவனுடன் மாத்திரமே நேரத்தைச் செலவழிப்பார். அவர் அருகே செல்லவே நான் நடுங்குவேன். ஒரு திருமணத்தின்போது அவர் பேச வேண்டியதிருந்தபோதும், அதிக நேரத்தை தேவ பிரசன்னத்தில் செலவழித்து, தேவ வார்த்தையைப் பெற்றுக்கொண்டார். அதுதான் ஆண்டவருடன் நெருங்கிய ஐக்கியம் கொண்டிருப்பதாகும். வேதாகமத்தில், இந்த வரத்தைப் பெற்றுக்கொண்ட அநேகரை காண்கிறோம். நியாயாதிபதிகள் 4ம் அதிகாரத்தில் காணப்படும் தெபொராளுக்கு குடும்பமும் இருந்தது. நீங்கள் பெண்ணாக இருந்தால், "குடும்பத்தில் எனக்கு முக்கியமான பொறுப்புகள் அநேகம் இருக்கின்றன. இந்த வரத்தை நான் பெற்றுக்கொள்ள முடியுமா?" என்று கேட்கலாம். தெபொராள், மிரியாம் இன்னும் அநேகர் பெற்றுக்கொண்டதை நீங்களும் நானும் மட்டும் ஏன் பெற்றுக்கொள்ள முடியாது? ஆண்டவருடன் நெருங்கிய ஐக்கியமே மிகவும் முக்கியமானதாகும்.
தேவனுடைய வார்த்தையை வாசிப்பதையும், அவரது வாக்குத்தத்தங்களை சுதந்தரிப்பதையும், உண்மையாயிருப்பதையுமே ஆண்டவர் பார்க்கிறார். மோசே மிகவும் உண்மையாயிருந்தான். கர்த்தர் அவனை தீர்க்கதரிசியாக பயன்படுத்தியதோடு, இஸ்ரவேல் ஜனங்களை வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட தேசத்திற்கு அழைத்து வருவதற்கான கிருபையையும் கொடுத்தார். ஆம், எனக்கு அன்பான தேவ பிள்ளையே, நாம் ஆண்டவரிடம் கேட்கவேண்டும். வேதம், "கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள் அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்" என்று கூறுகிறது (மத்தேயு 7:7). இப்போதும் நாம் ஆண்டவரிடம் கேட்போம். ஒரு நிமிட நேரத்தைக்கூட வீணாக்காமல், தேவனோடு நெருங்கிய ஐக்கியம் கொள்ளத் தீர்மானித்து, அவருடன் பேசி, நடந்து பரிசுத்தமாக வாழ்வோம். இப்போதே ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பார்; உங்களை தீர்க்கதரிசியாக / தீர்க்கதரிசனம் உரைக்கும் பெண்ணாக மாற்றுவார்; தம் மகிமைக்கென பயன்படுத்துவார்.
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, உம்மோடு நெருங்கிய ஐக்கியம் கொள்ள விரும்புகிறேன். தினமும் உம்மோடு நடக்கவும், பேசவும் எனக்குக் கற்பித்தருளும். எல்லாவற்றைவிட அதிகமாக உம் பிரசன்னத்தை நேசிப்பதற்கு எனக்கு உதவும். உம் வார்த்தையை நான் உண்மையாய் கடைப்பிடிக்கும்படியும், உம் சத்தத்திற்குக் கீழ்ப்படியும்படியும் செய்யும். பரிசுத்தமாக வாழவும், உலக இன்பங்களில் என் நேரத்தை வீணாக்காமல் இருக்கவும் உதவும். ஆண்டவரே, உம் சித்தத்தின்படி நீர் எனக்கு வாசல்களைத் திறப்பீர் என்றும், உம் மகிமைக்கென்று பயன்படுத்துவீர் என்றும் விசுவாசித்து இயேசுவின் விலையேறப்பெற்ற நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


