அன்பானவர்களே, "நீதிமானுடைய கொம்புகளோ உயர்த்தப்படும்" (சங்கீதம் 75:10) என்பதே இன்றைய வாக்குத்தத்த வசனம். வாழ்க்கையில் மிகுந்த போராட்டங்கள், வேதனை இவற்றின் நடுவிலும் நீதிமானின் பெலனும் கனமும் உயர்த்தப்படும் என்று கர்த்தர் கூறுகிறார். நமக்கு வேதனை இருந்தாலும், நீதியாயிருப்போம்; நீதியான வழிகளில் நடப்போம். உங்களை உபத்திரவப்படுத்துகிறார்கள் என்பதற்காக ஒருபோதும் அவர்களிடம் கத்தாதீர்கள். உங்களுக்கு அநியாயம் செய்யப்பட்டால் ஒருபோதும் ஆக்ரோஷமடையாதீர்கள். அவர்களோடு சண்டையிடவேண்டும் அல்லது நீதிமன்றத்திற்கு செல்லவேண்டும் என்று எண்ணாதீர்கள். "நீ சகித்துக்கொண்ட எல்லாவற்றிற்காகவும் என் ஆசீர்வாதம் உன்மேல் வரும்," என்று கர்த்தர் கூறுகிறார். இந்த நியாயத்தையே தேவ ஜனமான நீங்கள் பெற்றுக்கொள்வீர்கள்.
சாத்தான், உபத்திரவங்களால் உங்களுக்குக் கோபத்தை மூட்டி, ஆக்ரோஷமாய் நடக்கும்படி தூண்டுவதற்கு முயற்சிப்பான். ஆனால், நீங்கள், "தேவன் எனக்கு நியாயஞ்செய்வார்," என்று கூறி, நீதியுடன் உங்கள் இருதயத்தை சமாதானத்தில் காத்துக்கொள்ளும்போது, நீதிமானின் கொம்பு உயர்த்தப்படும். இப்படியான சந்தர்ப்பங்களில் நீதியின் ஆவியை அருளும்படி கர்த்தரிடம் கேட்போம்.
பள்ளிக்குச் செல்லும் முன் என் குட்டி மகள் கேட்டி தினமும் இயேசுவிடம் ஜெபிக்கிறாள். பள்ளியில் ஒரு குட்டிப் பையன் அவளுக்கு மிகவும் உபத்திரவம் கொடுத்துக் கொண்டிருந்தான்; அவளைக் கொடுமைப்படுத்துவதுபோல் சின்ன சின்ன விஷயங்களைச் செய்தான். அவளுக்கு அது மிகவும் வேதனையாய் இருந்தது. இன்னொரு குழந்தையின் தாய், என் மனைவியை அழைத்து, தன் மகள், கேட்டிக்கு நடப்பவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டிருப்பதாக கூறியுள்ளார்கள். ஆனாலும், கேட்டி ஒருபோதும் அந்தப் பையன் செய்கிறவற்றுக்கு மோசமாக பதில் செய்யவே இல்லை. மாறாக, அவனிடம், "இப்படிச் செய்யாதே. நல்ல பையனாக இரு," என்று கூறுகிறாள்.
அவள் தொடர்ந்து நல்லவளாக இருந்ததோடு, அந்தப் பையனுக்கு உதவியும் செய்தாள். இப்படி ஒரு குழந்தையை நான் பார்த்தேயில்லை. தேவனுடைய பிள்ளைகளாக நாம் இப்படியே இருக்கவேண்டும்; அதுவே நற்சாட்சியாகும். மக்கள், "இவர்கள் நீதிமான்கள். தங்களைப் புண்படுத்துகிறவர்களுக்குக்கூட தீமை செய்யமாட்டார்கள்," என்று கூறுவார்கள். நாம் நீதியிலும் சமாதானத்திலும் நடக்கும்போது, கர்த்தர் நம்மை உயர்த்துவார்; தம் நியாயம், நம் வாழ்வில் விளங்கும்படி செய்து ஆசீர்வதிப்பார்.
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, பல்வேறு மக்களாலும் சூழ்நிலைகளாலும் எழும் போராட்டத்தின் வழியாகக் கடந்து சென்று, உபத்திரவங்களை எதிர்கொண்டாலும் நீதியான ஆவியை எங்களுக்கு அருளிச்செய்திடும். கடுங்காற்றின்போது நீர் கட்டளையிட்ட சமாதானம் எங்கள் உள்ளங்களை நிரப்புவதாக. எங்கள் உள்ளங்களிலிருந்து எல்லா கவலையும் கோபமும் மறைந்துபோகட்டும். வார்த்தைகளில், எண்ணங்களில், செயல்களில் பரிசுத்தமாக இருக்கும்படி எங்களைக் காத்தருளும். எப்போதும் உமக்கு உண்மையுள்ளவர்களாய் நீதியைப் பற்றிக்கொண்டிருக்க எங்களுக்கு உதவும். நீதியாய் வாழ்வதாக அர்ப்பணிக்கும் ஒவ்வொருவர்மேலும் உம் ஆசீர்வாதமும் உயர்வும் வருவதாக. அவர்களுக்கு சிறந்த சாட்சியைக் கொடுத்து, இவ்வுலகில் அவர்களைப் பெருகப்பண்ணும். நீதிமானுக்குக் கிடைக்கும் என்று உம் வார்த்தை வாக்குப்பண்ணும் எல்லா பலன்களும் அவர்களுக்குக் கிடைப்பதாக என்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


