எனக்கு அருமையான தேவ பிள்ளையே, நம்முடைய ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் வல்ல நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன். இன்றைய வாக்குத்தத்தம், "உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுப்பேன் என்று ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களாகிய உன் பிதாக்களுக்கு ஆணையிட்டுக் கொடுத்த தேசத்தில் உன்னைப் பிரவேசிக்கப்பண்ணும்போதும், நீ கட்டாத வசதியான பெரிய பட்டணங்களையும், நீ நிரப்பாத சகல நல்ல வஸ்துக்களாலும் நிரம்பிய வீடுகளையும், நீ வெட்டாமல் வெட்டப்பட்டிருக்கிற துரவுகளையும், நீ நடாத திராட்சத்தோட்டங்களையும் ஒலிவத்தோப்புகளையும், அவர் உனக்குக் கொடுப்பதினால், நீ சாப்பிட்டுத் திருப்தியாகும்போதும், நீ அடிமைப்பட்டிருந்த வீடாகிய எகிப்துதேசத்திலிருந்து உன்னைப் புறப்படப்பண்ணின கர்த்தரை மறவாதபடிக்கு எச்சரிக்கையாயிரு," (உபாகமம் 6:10-12). எல்லா ஆசீர்வாதத்தையும் நாம் கர்த்தரிடமிருந்தே பெற்றுக்கொள்கிறோம் என்பதை இந்த வேதப் பகுதி நினைவுப்படுத்துகிறது. வீடு, வேலை, குடும்பம் அல்லது வேண்டியவை அனைத்தையும் தேவனே கிருபையான ஈவாகக் கொடுக்கிறார். ஆனாலும், அவரது ஆசீர்வாதத்தை பெற்றுக்கொண்டபின்னர் அவரை மறந்துபோகக்கூடாது என்று எச்சரிக்கிறார். அனுதினமும் நம் முழு உள்ளத்தோடு ஆண்டவரைத் தேடுவதற்குக் கற்றுக்கொள்ளவேண்டும் என்பதே பெரிய பாடமாகும்.
வேதம், "நீங்கள் மனம்பொருந்திச் செவிகொடுத்தால், தேசத்தின் நன்மையைப் புசிப்பீர்கள்" (ஏசாயா 1:19) என்று கூறுகிறது. தம் பிள்ளைகளை ஆசீர்வதிப்பதில் தேவன் பிரியமாயிருக்கிறார். ஆனாலும் அநேகர் ஏற்ற வாழ்க்கைத் துணையைக் கண்டுபிடிக்கவும், நல்ல வேலையில் சேரவும், தங்கள் வாழ்வில் தேவ கிருபையை அனுபவிக்கவும் தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கிறார்கள். நம் உள்ளத்தை ஆராய்ந்து பார்ப்பதற்கு தேவன் நம்மை அழைக்கிறார். வேதம், "என்னை நம்பியிருக்கிறவனோ தேசத்தைச் சுதந்தரித்து, என் பரிசுத்த பர்வதத்திலே காணியாட்சிக்காரனாயிருப்பான்" (ஏசாயா 57:13) என்று கூறுகிறது.
நான் கர்த்தர்மேல் எவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறேன்? அவரது சமுகத்தில் எவ்வளவு நேரம் செலவழிக்கிறேன்? அவரை முழு இருதயத்துடனும் தேடுகிறேனா? தினமும் அவரது வார்த்தையை வாசித்து தியானிக்கிறேனா? அவரது சத்தத்துக்குக் கீழ்ப்படிய மனதாயிருக்கிறேனா? என்றெல்லாம் உங்களையே கேளுங்கள்.
நாம் அவரை கிட்டிச்சேரும்போது, நம் வாழ்க்கை மறுரூபமாகும்; அவரது ஆசீர்வாதம் புரண்டு வரத் தொடங்கும். கர்த்தர், "எல்லா ஜாதிகளும் உங்களைப் பாக்கியவான்கள் என்பார்கள்; தேசம் விரும்பப்படத்தக்கதாயிருக்கும்" (மல்கியா 3:12) என்றும் வாக்குக்கொடுக்கிறார். உங்களை பரிபூரணமாக ஆசீர்வதிக்க தேவன் ஆயத்தமாயிருக்கிறார். நீங்கள் அவரில் அன்புகூரும்போது, அவரை நம்பும்போது, கீழ்ப்படிந்து நடக்கும்போது, வாழ்வின் எப்பக்கமும் அவருடைய நன்மையைக் காண தொடங்குவீர்கள். உண்மையில் அவரது ஆசீர்வாதங்களை ஒவ்வொன்றாய் எண்ணிப் பார்த்து, கர்த்தர் உங்களுக்குச் செய்தவை குறித்து ஆச்சரியப்படுவீர்கள். இன்று, முழு மனதோடும் அவரைத் தேடி, அர்ப்பணிப்பை புதுப்பித்துக்கொள்ளுவோம்.
ஜெபம்:
அன்பின் பரம தகப்பனே, உம் கிருபைக்காகவும் பரிபூரண ஆசீர்வாதங்களுக்காகவும் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். உம்மை என் முழு இருதயத்தோடும் தேடுவதற்கும், முழுவதுமாய் நம்பவும், உம் வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து நடக்கவும் உதவும். என்னை உம்மை நெருங்கியிருக்கப்பண்ணி, என் வாழ்க்கை உம் நாமத்திற்கு மகிமை கொண்டு வரப்பண்ணும். என் குடும்பத்தை ஆசீர்வதித்தருளும்; என் கையின் பிரயாசங்களை நிலைவரப்படுத்தும்; உம் மகிமையின் ஐசுவரியத்தின்படி என் தேவைகளைச் சந்தித்தருள வேண்டுமென்று இயேசுவின் விலையேறப்பெற்ற நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


