அன்பானவர்களே, இன்றைக்கு தேவன் உங்கள் இருதயங்களை பரிபூரண சந்தோஷத்தால் நிரப்புகிறார். நாம் தேவனிடமிருந்து, "கர்த்தர்மேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார்" (சங்கீதம் 55:22) என்ற வாக்குத்தத்தத்தை பெறுகிறோம். எல்லா கவலைகளையும் அவர்மேல் வைத்த பிறகு எவ்வளவு சந்தோஷம் கிடைக்கிறது! ஒரு கிராமத்தில் பெண்மணியொருவர் பெரிய வைக்கோல் கட்டு ஒன்றை தலையில் சுமந்தபடி வெகுதூரம் நடந்துசென்றாள். தண்ணீரை கடக்கவேண்டிய நேரம் வந்தது. அப்போது படகு ஓட்டி வந்த ஒரு மனிதர், தண்ணீரைச் சுற்றிக்கொண்டு அந்தப்பெண் செல்லவேண்டும் என்பதை அறிந்து, "என் படகில் ஏறிக்கொள். நான் மறுகரைக்குக் கொண்டு விடுகிறேன்," என்று கூறினார். அவள் படகில் ஏறியபோதும், வைக்கோல் கட்டைக் கீழே வைக்காமல் தலையிலேயே சுமந்துகொண்டிருந்ததைக் கண்டார்.
நம்மில் அநேகர் இப்படியே இருக்கிறோம். நாம் ஆண்டவரிடம் வந்துவிட்டாலும், எல்லா பாரங்களையும் நம் தலையின்மேலேயே வைத்துக்கொண்டிருக்கிறோம். அவற்றை கீழே வைத்துவிட விரும்புவதில்லை. அவற்றை ஆண்டவர்மேல் வைக்கவும் விரும்புவதில்லை. அவற்றை எண்ணியே கவலைப்பட்டுக்கொண்டிருக்கிறோம். அநேக பெற்றோர் இப்படியே தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல பள்ளியில் இடம் கிடைக்குமா? கட்டணம் செலுத்த போதுமான பணம் இருக்குமா? பிள்ளை பாதுகாப்பாக இருக்குமா? அவர்கள் நன்றாக படிப்பார்களா என்று பிள்ளைகளைக் குறித்துக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதேபோன்று திருமணத்தின்போது, அவர்கள் ஏற்ற வரனை திருமணம் செய்வார்களா? அது நல்ல குடும்பமாக இருக்குமா? பிறகு, பிள்ளை பிறக்குமா? இதெல்லாம் எப்போது நடக்கும்? என்று கவலைப்படுவார்கள். தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பிய பிறகும், நாள் முழுவதும் ஏதாவது கெட்டது நடந்துவிடும் என்று பயந்துகொண்டே இருப்பார்கள். இருதயத்தை ஏகப்பட்ட பாரம் நிரப்புகிறது.
ஆனால் ஆண்டவர், "உன் கவலைகள், பாரங்கள் எல்லாவற்றையும் என்மேல் வைத்துவிடு; நான் உன்னை ஆதரிப்பேன்," என்கிறார். காலையில் ஜெபித்து, உங்கள் பாரங்களையெல்லாம் ஆண்டவர்மேல் வைத்து விடுங்கள். தேவன், அந்தப் பாரங்களையெல்லாம் எடுத்துப்போட்டு சந்தோஷத்தையும் சமாதானத்தையும் தரட்டும். தாம் உங்களை ஆதரிப்பேன் என்று அவர் வாக்குக்கொடுக்கிறார். அவர் உங்களைப் பொறுப்பெடுத்துக்கொள்வார்; உங்கள் பிள்ளைகளின் வாழ்வை பொறுப்பெடுத்துக்கொள்வார். நாம் அவரது ஆவியின் சந்தோஷத்தினால் நிரப்பப்படும்போது, தேவன், கவலைகளை எப்படி பொறுப்பெடுத்துக்கொள்வது என்று தம் ஞானத்தினால் நம்மை வழிநடத்துவார். நீங்கள் செய்யவேண்டிய ஒவ்வொன்றை குறித்தும் உங்களுக்குச் சொல்லி, அவற்றுக்கான பாதையையும் திறப்பார். எல்லாமும் இலகுவாகவும் ஆசீர்வாதமாகவும் மாறும். நம் பாரங்களையெல்லாம் ஆண்டவர்மேல் வைக்கும்படி, இந்த இருதயத்தை இப்போது பெற்றுக்கொள்வோமா?
ஜெபம்:
பரம தகப்பனே, என் உள்ளத்தில் பல பாரங்களைச் சுமந்தபடி, நான் இருக்கிறவண்ணமே இன்று உம்மிடம் வருகிறேன். என் இருதயத்துக்குள் இருக்கிற எல்லா கவலைகளையும், நான் உரக்கக் கூறாதவற்றையும் நீர் பார்க்கிறீர். என் பாரங்களை இறக்கிவைத்துவிட்டு உம்மை முற்றிலுமாய் நம்புவதற்கு எனக்குக் கற்பித்தருளும். இப்போது என் கவலைகள், என் பயங்கள், என் பிள்ளைகளின் வாழ்க்கையை உம் அன்பின் கரங்களில் ஒப்படைக்கிறேன். என்னை ஆதரிப்பதாய் நீர் வாக்குக்கொடுத்திருக்கிறீர்; உம் வார்த்தையை நான் நம்புகிறேன். உம் ஆவியினால் வரும் சந்தோஷத்தினாலும் சமாதானத்தினாலும் என் உள்ளத்தை நிறைத்திடும். நான் பண்ணுகிற எல்லா தீர்மானத்தையும் உம் ஞானத்தினால் வழிநடத்தும். எனக்கும் என் குடும்பத்தினருக்கும் ஏற்ற பாதைகளைத் திறந்து, எங்களுக்கான யாவற்றையும் செய்து முடிப்பீராக. எல்லாவற்றையும் நீர் கவனித்துக்கொள்வீர் என்று நம்பி இன்று உமக்குள் இளைப்பாறுதல் அடைந்து இயேசுவின் அருமையான நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


