அன்பானவர்களே, இன்றைக்கு நாம், "நீங்கள் அமர்ந்திருந்து, நானே தேவனென்று அறிந்துகொள்ளுங்கள்" (சங்கீதம் 46:10) என்ற வசனத்தை தியானிப்போம். ஆம், அவர் நம் தேவன். அவரே எல்லாவற்றையும் ஆளுகை செய்கிறார்; நம் வாழ்வைக் குறித்து அனைத்தையும் அறிந்திருக்கிறார். ஆகவேதான் அவர், "என் பிள்ளையே, அமர்ந்திரு," என்று கூறுகிறார். தேசங்கள் கொந்தளிக்கலாம்; ராஜ்யங்கள் விழலாம். ஆனால், அவர் தம் சத்தத்தைத் தொனிக்கப்பண்ணும்போது பூமி உருகும். நம்மைச் சுற்றி பல காரியங்கள் நடக்கின்றன. நம் வாழ்வில் கொந்தளிப்புகள் இருக்கலாம்; பல யுத்தங்கள் நடக்கலாம். ஆனால், ஆண்டவர் என்ன செய்கிறார்? அவர் தம் சத்தத்தைத் தொனிக்கப்பண்ணுகிறார். "அவர் பூமியின் கடைமுனைமட்டும் யுத்தங்களை ஓயப்பண்ணுகிறார்; வில்லை ஒடித்து, ஈட்டியை முறிக்கிறார்; இரதங்களை நெருப்பினால் சுட்டெரிக்கிறார்". நம் கர்த்தர் பயங்கரமான பலசாலி. அவர் நமக்காக யுத்தம் செய்கிறார். நெருப்பை அனுப்புகிறார். கெர்ச்சிக்கிறார். பெருமூச்சோடு வேண்டுதல் செய்கிறார். நமக்காக யுத்தங்களை நடத்துகிறார். நீங்கள் அமர்ந்திருங்கள்; அமைதியாய் இருங்கள். உங்கள் வாயிலிருந்து கோபமான வார்த்தைகள் வர அனுமதிக்காதிருங்கள்.

இன்று என் பேத்தி வேதத்தை வாசித்துக்கொண்டிருந்தாள். நான் அவளுக்கு சிறுவர் வேதாகமம் ஒன்றை கொடுத்திருக்கிறேன். அதில் ஒவ்வொரு பக்கத்திலும், "தேவன் உன் உதடுகளை நேசிக்கிறார். ஆகவே, கோபமாக உன் வாயைத் திறக்காதே. புண்படுத்தும் வார்த்தைகளைப் பேசாதே," என்பது போன்ற ஒரு சிந்தனை இருக்கும். நீங்கள் உங்கள் வாயின்மேல் அன்பாயிருக்கலாம்; உங்கள் உதடுகளுக்கு வண்ணம் பூசலாம். ஆனால், தேவன் கோபத்தில் பேசுவதற்குப் பதிலாக அமைதி காக்கும் உங்கள் வாயையே தேவன் நேசிக்கிறார். நீங்களாகவே சுயமாக காரியங்களைச் செய்வதை, குரலை உயர்த்துவதை நிறுத்துங்கள். அமைதியாய் அமர்ந்திருந்து தேவனை அறிந்துகொள்ளுங்கள்.

"தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அநுகூலமான துணையுமானவர்". ஆம், தேவன் நம் நடுவில் இருக்கிறார். நமக்கு உதவி செய்வதற்காக அவர் இருக்கிறார். பர்வதங்கள் அசையலாம்; எல்லாமும் காணாமற்போகலாம். ஜனங்கள் திடீரென நம் வாழ்விலிருந்து மறைந்துபோகலாம். அவர்கள், "எனக்கு உன்னை தெரியாது," என்றோ "நீ எனக்கு தேவையில்லை" என்றோ கூறலாம். ஆனால், தேவன் ஆபத்துக்காலத்தில் அநுகூலமான துணையாக இருக்கிறார். அவர் நமக்கு அடைக்கலமும் பெலனுமாயிருக்கிறார். அவர் நமக்காக குரல் உயர்த்தி, யுத்தங்களை நடத்துவார். ஆகவே, பழிவாங்காதிருங்கள். உங்களோடு சண்டையிடுகிறவர்களுக்கு பதில் செய்யாதீர்கள். அமர்ந்திருங்கள். தேவன் உங்களை நேசிக்கிறார். தேவன் உங்கள் வாயின்மேல் அன்பாயிருக்கிறார்; சாந்தமும் சமாதானமுமான வார்த்தைகளில் அவர் பிரியமாயிருக்கிறார். என் பேத்தி அந்தச் சிந்தனையை வாசித்தபோது, அவள், தேவன் எப்படி நம் வாய்கள் நேர்த்தியாயிருக்கின்றன? என்று சொல்கிறார் என்று கேட்டாள். தாவீதைப்போல நாம் தினமும் தேவனை நோக்கிக் கூப்பிடவேண்டும். தாவீது, "வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து, நித்திய வழியிலே என்னை நடத்தும்," என்று ஜெபித்தான் (சங்கீதம் 139:24). பிறரை தாக்கும் எந்தச் சொல்லும் நம் வாய்களிலிருந்து வரக்கூடாது. இப்படி நாம் தினமும் ஜெபிக்கவேண்டும் என்று விளக்கினேன்.

ஜெபம்:
அன்பு பரம தகப்பனே, அனுதினமும் அமைதியாய் அமர்ந்திருக்க எனக்கு உதவும். உம்மை நம்பவும் எனக்காக யுத்தங்களை நடத்துவீர் என்று விசுவாசிக்கவும் கற்றுத்தாரும். கோபத்தில் பேசிவிடாமலும், பழிவாங்காமலும், மற்றவர்களோடு சண்டையிடாமலும் என்னை காத்தருளும். என் இருதயத்தில், வீட்டில், வேலைசெய்யுமிடத்தில் உம் சமாதானம் ஆளுகை செய்யட்டும். எல்லா எதிர்ப்பையும் நொறுக்கி எனக்கு ஜெயத்தை தந்திடும். எனக்கு அடைக்கலமாகவும், பெலனாகவும் இருந்திடும். உம்மையல்லாமல் வேறு யாரையும் நான் சார்ந்திராமல் காத்தருளும். என் இருதயத்தில் இருந்து எல்லா கலக்கத்தையும் பயத்தையும் அகற்றிப்போடும். நான் செல்லுமிடமெங்கும் ஸ்திரத்தை, சமாதானத்தை, சந்தோஷத்தை அருளிச் செய்யும். அமைதலாய் இருக்கவும் உம்மை நம்பவும் எனக்கு உதவ வேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.