அன்பானவர்களே, இன்றும், "கர்த்தரோ உண்மையுள்ளவர், அவர் உங்களை ஸ்திரப்படுத்தி, தீமையினின்று விலக்கிக் காத்துக்கொள்ளுவார்" (2 தெசலோனிக்கேயர் 3:3) என்ற வசனத்தைத் தியானிக்கப் போகிறோம். பவுல், துர்க்குணராகிய பொல்லாத மனுஷரிடத்திலிருந்து தன்னை தேவன் விடுவிக்குமாறு ஜெபிக்கும்படி மக்களிடம் வேண்டுகிறான். ஆமாம், அன்பானவர்களே, தேவனுடைய வேலையைச் செய்யும்போது பொல்லாதவர்கள் காரணமின்றி அவனுக்கு இடைஞ்சல் பண்ணினார்கள். பவுல் எங்கெல்லாம் சென்றானோ அங்கெல்லாம் துன்புறுத்தப்பட்டான். ஆகவேதான், அவன், " கர்த்தர் உங்கள் இருதயங்களை தேவனைப்பற்றும் அன்புக்கும் கிறிஸ்துவின் பொறுமைக்கும் நேராய் நடத்துவாராக," என்று கூறினான் (2 தெசலோனிக்கேயர் 3:5). தெசலோனிக்கேயர், சிரமங்களை சகிக்கும்படி கிறிஸ்துவின் பொறுமையை தேவன் அவர்களுக்கு அளிக்கும்படி பவுல் வேண்டிக்கொண்டான்.
போராடுவதற்கு அவர்கள் தேவனிடம் அன்புள்ளவர்களாயிருக்கவேண்டும். பிசாசு எப்போதும் நம்மை அழிப்பதற்கு, கொல்லுவதற்கு, நம் ஆசீர்வாதங்களை திருடுவதற்கு முயற்சிக்கிறான்; இவ்வுலகின் பொல்லாத மக்களும் சதி திட்டங்களைத் தீட்டுகிறார்கள். இயேசு, பேதுருவிடம் அதையே கூறினார். பேதுரு, சீமோன் என்று அழைக்கப்பட்டான். இயேசு, "சீமோனே, சீமோனே, இதோ, கோதுமையைச் சுளகினால் புடைக்கிறதுபோலச் சாத்தான் உங்களைப் புடைக்கிறதற்கு உத்தரவு கேட்டுக்கொண்டான்," என்று கூறினார்.பிசாசும் இவ்வுலகிலுள்ள பொல்லாதவர்களும் நமக்கு விரோதமாக தீமையான காரியங்களைச் செய்வதற்கு முயற்சிக்கலாம். ஆனால், தேவனின் அனுமதியில்லாமல் சாத்தானின் சதியாலோசனைகள் எல்லாம் நமக்குத் தீங்கு செய்ய முடியாது.
அப்போதும், அடுத்த வசனத்தில், இயேசு, "உன் விசுவாசம் ஒழிந்துபோகாதபடிக்கு உனக்காக வேண்டிக்கொண்டேன்," என்று கூறினார். உபத்திரவங்களின் வழியாக கடந்து செல்லும்போது, பலவேளைகளில் நாம் விசுவாசத்தை இழந்துபோவதுபோல் உணரக்கூடும்; அதற்காகவே இயேசு வேண்டுகிறார். வேதம், இயேசு எப்போதும் நமக்காக வேண்டுதல் செய்கிறார் என்று கூறுகிறது (எபிரெயர் 7:25). இயேசு மரித்தார்; உயிர்த்தெழுந்தார். நமக்காக, நாம் பிழைக்கும்படி மூன்றாம் நாளில் உயிரோடு எழுந்தார். அவர், "நான் பிழைக்கிறபடியினால் நீங்களும் பிழைப்பீர்கள்," என்று கூறுகிறார். இயேசு எப்போதும் உங்கள் பட்சத்தில் இருக்கிறார். ஆண்டவர் தம் சீஷருக்காக ஜெபித்தார் (யோவான் 17ம் அதிகாரம்); அவர் உங்களுக்காகவும் வேண்டுதல் செய்கிறார். உங்களுக்காக வேண்டுதல் செய்வதுமன்றி, உங்களுக்கும் தேவனுக்கும் இடையே மத்தியஸ்தராகவும் இருக்கிறார். யுத்தத்தை நீங்கள் மாத்திரம் செய்வதல்லாமல், தேவனும் உங்கள் பக்கத்தில் இருக்கிறார். திருப்பிப் போராடுவதற்கான பெலத்தை அவர் அருளுவார். கர்த்தர் எப்போதும் உண்மையுள்ளவராயிருக்கிறார். சத்துருவிடமிருந்து அவர் உங்களைப் பாதுகாத்துக்கொள்வார்.
ஜெபம்:
பரம தகப்பனே, நீர் ஒருபோதும் தவறாத உண்மையுள்ள தேவனாயிருக்கிறபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். ஆண்டவரே, பொல்லாத மக்களை, காரணமில்லாமல் நான் வாழ்க்கையில் எதிர்கொள்ள நேரிடும்போது என்னை பெலப்படுத்தும். சத்துருவின் பொல்லாங்கான எல்லா திட்டத்திற்கும் என்னை நீங்கலாக்கி தயவாய் பாதுகாத்துக்கொள்ளும். என் இருதயத்தை உம் அன்பினாலும் கிறிஸ்துவின் பொறுமையினால் நிரப்பியருளும்.இயேசுவே, என் பெலவீன வேளையிலும் இக்கட்டான நேரங்களிலும் என் விசுவாசம் ஒழிந்துபோகாதபடிக்கு எனக்காக வேண்டிக்கொள்ளுகிறபடியினால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்.உம்மை நான் முழுவதுமாய் நம்பி இயேசுவின் வல்ல நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.
போராட உனக்குப் பெலன் உண்டு


தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now

