அன்பானவர்களே, இன்று எல்லா சூழ்நிலையிலும் நம்மை தேற்றுவதற்காக தேவன் நம் பட்சத்தில் இருக்கிறார். நாம் அவரது இரக்கத்தையும் கரிசனையான பராமரிப்பையும் அனுபவிப்போம். "அவர் நீதிமான்களுக்கென்று மெய்ஞ்ஞானத்தை வைத்துவைத்திருக்கிறார்; உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு அவர் கேடகமாயிருக்கிறார்" (நீதிமொழிகள் 2:7) என்று வேதம் கூறுகிறது. எவ்வளவு ஆச்சரியமான வாக்குத்தத்தம்! தமக்கு முன்பாக உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு கர்த்தர் வெற்றியை வைத்துவைத்திருக்கிறார்.
யார் உத்தமர்? தேவனுடைய சித்தத்தின்படி, அவர் கூறுகிறவற்றுக்கெல்லாம் கீழ்ப்படிந்து நடக்கிறவர்களே உத்தமர்கள். அநேகவேளைகளில் இதற்கு நாம், வசதியாக பழகிய சூழலிலிருந்து வெளியே வருவது அவசியமாயிருக்கும். நமக்கு பழக்கமில்லாவற்றை, சிரமமானவற்றை செய்யும்படி நேரலாம். ஆனாலும், கர்த்தர் செய்யும்படி வழிநடத்துகிறவற்றுக்கு நாம் கீழ்ப்படிந்தே ஆக வேண்டும். பெற்றோருக்கு கீழ்ப்படியும்போது சிறுபிள்ளைகளும் தேவனை கனம்பண்ணுகிறார்கள். அப்படிப்பட்ட கீழ்ப்படிதலின்மேல் தேவன் பிரியமாயிருக்கிறார்; மிகப்பெரிய வெற்றியை அவர்களுக்குப் பலனாகக் கொடுப்பார்.
உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு அவர் கேடகமாயிருக்கிறார் என்றும் வசனம் கூறுகிறது. ஆண்டவர் அவர்கள் உண்மையில் பிரியமாயிருந்து, அவர்கள் பாதையில் இடறாதபடிக்குக் காக்கிறார். அவர் வெற்றிக்கு நேராய் நடத்தும் பாதையில் அவர்களை நடக்கப்பண்ணுகிறார். தம் சித்தத்தின்படி நடப்பதற்கு நாம் உண்மையாயிருக்கும்படி பல்வேறு அனுபவங்களின் வாயிலாகவும் தேவன் நம்மை வடிவமைக்கிறார்; வனைகிறார். ஆகவே, அவருக்குக் கீழ்ப்படியுங்கள்.
என் குட்டி மகன் ஜேடன் வயிற்றில் இருந்தபோது, என் மனைவியும் நானும், "ஆண்டவரே, இந்தப் பையன் உமக்குச் சொந்தமானவன். இந்தக் குழந்தை உம்முடையது. அவன் வாழ்க்கையை முற்றிலும் உமக்கு அர்ப்பணிக்கிறோம். எங்கள் விருப்பங்களல்ல; உம் பரிபூரண சித்தமே அவன் வாழ்வில் நிறைவேறட்டும்," என்று ஜெபித்தோம். அவன் வாழ்க்கையை முழுவதுமாக தேவனுடைய கரங்களில் ஒப்படைத்தோம். கர்ப்ப காலம் முழுவதும் பயப்படும் தருணங்களும் வந்தன. சில மருத்துவ அறிக்கைகளின்படி, மேலும் பல சோதனைகளையும், ஸ்கேன் செய்யவும் அவசியமாயின. முடிவுகளுக்காகக் காத்திருக்கும்படி மருத்துவர்கள் எங்களைக் கேட்டுக்கொண்டார்கள். உடன்தானே நாங்கள், "ஆண்டவரே, எங்கள் பிள்ளையை உம் கரங்களில் தருகிறோம். தயவாய் அவனை பொறுப்பெடுத்துக்கொள்ளும்," என்று ஜெபித்தோம். ஒவ்வொரு தருணத்திலும் நாங்கள் இணைந்து ஆண்டவரை தேடினோம்; எங்களையே அவரது சித்தத்திற்கு ஒப்புக்கொடுத்தோம். தேவன், எல்லா கவலைகளையும், பயங்களையும் அகற்றியதோடு, நல்ல மருத்துவர்களையும் அளித்து, ஒவ்வொரு சூழ்நிலையிலும் எங்களை வழிநடத்தினார். பத்திரமான பிரசவத்தின் வாயிலாக ஆரோக்கியமான ஒரு பையனை கொடுத்து எங்களை ஆசீர்வதித்தார். அவர்மேல் முழு நம்பிக்கையையும் வைக்கும்போது தேவன் எவ்வளவு ஆச்சரியமாய் நம்மை ஆசீர்வதிக்கிறார்!
அன்பானவர்களே, உங்கள் பாதையில் அவரை நம்புங்கள்; வாழ்க்கையின் எல்லா பகுதியிலும், குடும்பமாக அவரை நம்புங்கள். எதிர்காலத்திற்காக, அவர் உங்களிடம் ஒப்படைத்துள்ள எல்லாவற்றுக்காகவும் அவரை நம்புங்கள்.
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, உமக்கு முன்பாக உத்தமமாக நடக்கிறவர்களுக்கு ஜெயத்தை அளிப்பதாக வாக்குப்பண்ணுவதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறோம். தியாகம் செய்யவும், வசதியான சூழலிலிருந்து வெளியே வரவேண்டிய நிலை ஏற்பட்டாலும் உம் சத்தத்துக்குக் கீழ்ப்படியவும் எனக்கு உதவும். என் குடும்பம், வேலை, உடல்நலம், எதிர்காலம் என்று எல்லாவிதத்திலும் உம்மை நம்புவதற்கு எனக்குக் கற்றுக்கொடுத்தருளும். என் பாதையில் எந்த ஆபத்தும் நேர்ந்திடாமல் கேடகமாகி, இடறாதபடி என்னை காத்தருளும். ஜேடனை நீர் உண்மையாய் விசாரித்து, எல்லா சவாலின் வழியாகவும் அவன் பெற்றோரை நடத்துவதுபோல, உம் கரங்களில் எல்லாவற்றையும் ஒப்படைப்பதற்கு என் விசுவாசத்தை பெலப்படுத்தும். உம் பரிபூரண சித்தத்தின்படி என்னை வழிநடத்தி, என் கைகளின் பிரயாசத்தை ஆசீர்வதித்து, என் வாழ்க்கை உம் நாமத்திற்கு மகிமையைக் கொண்டு வரும்படி செய்யவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


