அன்பானவர்களே, இன்றைக்குக் கீழ்ப்படிதலைக் குறித்துப் பார்ப்போம். ஆம், சிலவேளைகளில் கீழ்ப்படிவது நமக்குக் கடினமாக தோன்றும். சிறுபிள்ளைகளாயிருந்து பெரியவர்களாகும்வரைக்கும் பெற்றோருக்கு, சட்டத்துக்குக் கீழ்ப்படியவும், கட்டளைகளின்படி நடக்கவும் அடிக்கடி தடுமாறுவோம். ஆனால், வேதம், தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிவது எவ்வளவு முக்கியம் என்று நமக்குத் தெளிவாகப் போதிக்கிறது. கீழ்ப்படிதலைக் குறித்து யோசிக்கும்போதெல்லாம், ஈசாக்கின் வாழ்க்கை எப்போதும் என் நினைவுக்கு வரும். பலியிடுவதற்காக மலைக்குச் செல்லும்போது ஆபிரகாம், ஈசாக்கை விறகைக் கொண்டு வரும்படி கூறினான். ஈசாக்கு, பலியிடுவதற்கான மிருகம் பற்றி தன் தகப்பனிடம் கேட்டிருக்கலாம் அல்லது அவனுக்குள்ளாவது அந்த எண்ணம் எழுந்திருக்கலாம். அவன் உள்ளத்தில் பல சந்தேகங்கள் இருந்திருக்கலாம். ஆனால், அவன் கீழ்ப்படிந்தான். "என் தந்தைக்கு நான் கீழ்ப்படியவேண்டும்; தேவனுக்குக் கீழ்ப்படியவேண்டும்," என்று மட்டுமே அவன் அறிந்திருந்தான். தேவன் திட்டம் பண்ணியிருக்கிறவற்றை முழுவதுமாக அறிந்திடாத நிலையில், ஈசாக்கு தன் தந்தையை உத்தமமாய் பின்பற்றி மலையுச்சிக்குச் சென்றான். கேள்வி கேட்காமல் கீழ்ப்படிந்ததினால் கர்த்தர் ஆபிரகாம், ஈசாக்கு இருவரையும் ஆசீர்வதித்தார். தேவனுடைய வார்த்தைக்கு சந்தேகமின்றி, பயமின்றி கீழ்ப்படியும்போது நிச்சயமாய் அவரது ஆசீர்வாதங்கள் கிடைக்கும் என்பதை அவர்கள் வாழ்க்கை வாயிலாக அறிகிறோம்.

இதையே, "...நியாயப்பிரமாணத்தின்படியெல்லாம் செய்யக் கவனமாயிருக்கமாத்திரம் மிகவும் பலங்கொண்டு திடமனதாயிரு; நீ போகும் இடமெல்லாம் புத்திமானாய் நடந்துகொள்ளும்படிக்கு, அதை விட்டு வலது இடதுபுறம் விலகாதிருப்பாயாக" (யோசுவா 1:7) என்று தெளிவாக வேதம் கூறுகிறது. தேவன், தம் எளிதான கட்டளைகளுக்கு மாத்திரம் கீழ்ப்படியும்படி கூறவில்லை. தம்முடைய எல்லா கட்டளைகளுக்கும் கீழ்ப்படியும்படி அழைக்கிறார். நாம் கீழ்ப்படிந்து நடக்கும்போது, தம் பரிபூரண சித்தத்தின்படி நம்மை ஆசீர்வதிப்பதாகவும், வெற்றியை அளிப்பதாகவும் வாக்குப்பண்ணுகிறார். இன்று இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொள்வீர்களானால், ஆண்டவர் உங்களை ஏதாவது செய்யும்படி கூறினால், அவருக்குக் கீழ்ப்படியுங்கள். இந்தத் தருணத்தில் அது ஏனென்று தெரியாமல் இருக்கலாம். உங்கள் எண்ணங்களுக்கு முற்றிலும் எதிரானதாகக்கூட இருக்கலாம். ஆனால், நீங்கள் தேவனின் சத்தத்தைக் கேட்கும்போது, அவர் நிச்சயமாகவே உங்களை ஆசீர்வதிப்பார்; தம் உச்சிதங்களுக்குள் நடத்துவார்.

நாங்கள் காருண்யாவில் வசித்தபோது, பெதஸ்தாவில் இருக்கும் தரிசன மையமே எனக்கு மிகவும் பிரியமான இடம். தரிசன மையம் எப்படி உருவானது என்ற சம்பவம் உண்மையிலே ஊக்கம் தருவதாகும். பெதஸ்தாவை பாதுகாத்துக்கொண்டிருந்த ஒரு காவலாளி அதே இடத்தில் இயேசுவின் தரிசனத்தைப் பெற்றார். பயத்தாலும் ஆச்சரியத்தாலும் நிறைந்தவராய், தான் கண்டதை தன் குடும்பத்தினருடன் பகிர்ந்துகொண்டார். அந்த தரிசனத்தால் அங்கே தரிசன மையத்தை கட்டவேண்டும் என்று என் தாத்தா நிச்சயித்தார்கள். இன்று பெதஸ்தா கணக்கற்ற மக்களுக்கு ஆசீர்வாதமாக திகழ்கிறது. தனிப்பட்ட விதத்தில் என் வாழ்விலும் அது மிகுந்த ஆசீர்வாதமாக இருக்கிறது. தேவனுடைய வெளிப்பாட்டுக்கு ஒரு மனிதன் உண்மையாய் அளித்த பதிலால், அந்த இடம் ஆயிரக்கணக்கானோர் தேவ சமுகத்தை அனுபவிக்கிறதாகவும், அவரது தொடுதலை பெறுமிடமாகவும் விளங்குகிறது. கீழ்ப்படிதல், நாம் எண்ணிப்பார்க்காத வகையில் எப்போதும் ஆசீர்வாதங்களை அளிக்கிறது.

இன்று ஆண்டவர் உங்களுக்கு அதே வாக்குத்தத்தத்தை அளிக்கிறார். அவரது வார்த்தைக்கு நீங்கள் கீழ்ப்படியும்போது, அவர் உங்களை ஆசீர்வதிப்பார்; வழிநடத்துவார்; ஜெயம் பெறச் செய்வார். கீழ்ப்படிதல் கடினமானதாக தோன்றும்போது, அவரை முழுவதும் நம்புங்கள். தேவனுடைய எண்ணங்கள் எப்போதும் நாம் புரிந்துகொள்ளக்கூடியதைக் காட்டிலும் பெரியவையாக இருக்கும்; உண்மையாய் அவருக்குக் கீழ்ப்படிகிறவர்களை அவரது ஆசீர்வாதங்கள் பின்தொடரும்.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, உம் வார்த்தைக்குக் கீழ்ப்படிகிறதின் முக்கியத்துவத்தை எனக்குப் போதிப்பதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். உம் கட்டளைகளை தயக்கமோ, சந்தேகமோ இன்றி பின்பற்றுவதற்கு எனக்கு தாழ்மையும் இசைவுமுள்ள இருதயத்தை அளித்திடும். உம் எண்ணங்களை என்னால் புரிந்துகொள்ள முடியாதபோதும், நீர் என்னை கடினமாக நடத்துவதுபோன்று தெரிந்தாலும் உம்மை நம்புவதற்கு எனக்கு உதவி செய்யும். சூழ்நிலைகள் எனக்கு விரோதமாய் இருக்கும்போது உண்மையாயிருக்கும்படி என்னை பெலப்படுத்தும்; உம் நேரத்துக்காகக் காத்திருப்பதற்குத் தேவையான  பொறுமையினால் என்னை நிரப்பும். நான் கீழ்ப்படிந்து நடப்பதால் என்னை ஆசீர்வதித்தருளும்; என் குடும்பத்தின்மேல் உம் கிருபை இருப்பதாக. ஒவ்வொரு குழந்தையும், ஒவ்வொரு வாலிப ஆண், பெண்ணும், ஒவ்வொரு பெரியவரும் உம்மேல் பயபக்தி கொண்டு, உம் உண்மைக்கு சாட்சியாக பிரகாசிப்பார்களாக. உம் பரிபூரண சித்தத்திற்குள் எங்களை நடத்தி, உம் எண்ணத்தின்படியே எங்களுக்கு வெற்றியை அருளிச்செய்து, உம் பரிசுத்த நாமத்திற்கு மகிமையாய் எங்களைப் பயன்படுத்தவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.