அன்பானவர்களே, இன்றைக்கு உங்களை வாழ்த்துகிறதில் மகிழ்ச்சியடைகிறேன். "இரட்சிக்கப்படுகிறவர்களுக்குள்ளேயும், கெட்டுப்போகிறவர்களுக்குள்ளேயும், நாங்கள் தேவனுக்குக் கிறிஸ்துவின் நற்கந்தமாயிருக்கிறோம்" (2 கொரிந்தியர் 2:15)என்று பவுல் எழுதுகிறார். இதற்கு முந்தைய வசனத்தில், "கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் எங்களை வெற்றிசிறக்கப்பண்ணி, எல்லா இடங்களிலேயும் எங்களைக்கொண்டு அவரை அறிகிற அறிவின் வாசனையை வெளிப்படுத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம்" என்று கூறுகிறார். ஆண்டவர்தாமே நமக்காக இதைச் செய்கிறார். அவர் நம் கரங்களைப் பற்றி வெற்றிப் பவனியாக அழைத்துச் செல்கிறார். தேவன், உங்களை கிறிஸ்துவின் சுகந்த வாசனை என்று அழைக்கிறார். பழைய காலத்தில் பட்டணங்களை வெற்றிக் கொண்ட பிறகு, ராஜாக்கள் பெரிய ஊர்வலம் நடத்துவார்கள்; அப்போது தூபவர்க்கம் எரிக்கப்படும்; போரினால் ஏற்பட்ட அழிவுகள் காண்பிக்கப்படும்; கூட்டத்தினர் ஆரவாரிப்பார்கள். ஆனால், பவுல், நீங்களே தூபவர்க்கமாய், தேவனுக்கு முன்பாக எழும்பும் சுகந்தவாசனையாய் இருக்கிறீர்கள் என்கிறார்.
நீதியான வாழ்க்கை நடத்துவதின் மூலம், கிறிஸ்துவின் நற்கந்த வாசனையை பரப்பும் வாய்ப்பு நமக்கு இருக்கிறது. நீதியான வாழ்க்கை நடத்துவது தெரிவல்ல; மாறாக, நமக்குள் தேவன் இருப்பதால் அத்தியாவசியமானதாகும். பழைய ஏற்பாட்டு காலத்தில் ஆரோனும் ஆசாரியர்களும் பரிசுத்த தைலத்தினால் அபிஷேகிக்கப்பட்டார்கள். அந்த தைலம் அவர்கள் தலைகளில், தாடிகளில், அங்கிகளில் வழிந்தோடி சுகந்த வாசனையை கொடுத்தது. ஆகவேதான் கர்த்தர், "சுகந்த வாசனையினிமித்தம் நான் உங்கள்பேரில் பிரியமாயிருப்பேன்" (எசேக்கியேல் 20:41)என்று கூறுகிறார். கர்த்தருக்குப் பயப்படும் பயம் சுகந்தவாசனையாய் இருக்கிறது என்றும் வேதம் கூறுகிறது (ஏசாயா 11:3). நாம் பயபக்தியாய் வாழ்ந்து, தேவனுக்கு பயப்படும்போது அவருக்கு பிரியமான வாசனையாக மாறுகிறோம்.
இயேசுவின் சுபாவத்தை காட்டும்படி வாழ்வதற்கு நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம். கிறிஸ்துவைப் போல வாழும்போது, இந்த உலகம் முழுவதற்கும் நாம் நற்கந்தமாக மாறுகிறோம். "பரிமளதைலமும் சுகந்ததூபமும் இருதயத்தைக் களிப்பாக்குவதுபோல..." (நீதிமொழிகள் 27:9)என்று வேதம் அழகாக கூறுகிறது. ஆம், ஆண்டவர் சுற்றிலுமிருக்கிறவர்களுக்கு உங்களை சந்தோஷத்தை, ஆறுதலை, சமாதானத்தை தரும் நற்கந்தமாக பயன்படுத்துவாராக. அவரது பிரசன்னத்தால் உங்களை நிரப்புவாராக; தேவன் அறிகிற அறிவினால் உங்களை நிரப்பி, தம்மைப்போல மாற்றுவாராக.
ஜெபம்:
அன்புள்ள பரம தகப்பனே, கிறிஸ்துவின் நற்கந்தமாக இருப்பதற்கு என்னை அழைத்திருப்பதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். என் வாழ்க்கை, உம்முடைய அழகை, கிருபையை, நீதியை காட்டுவதாக அமையட்டும். ஆண்டவரே, தயவாய் உம்முடைய பிரசன்னத்தால் என்னை நிறைத்து சத்தியத்தின் பாதையில் நடத்தும். நான் பேசுகிற ஒவ்வொரு வார்த்தையும் என்னுடைய ஒவ்வொரு செயலும் கிறிஸ்துவின் நற்கந்தத்தை வெளிப்படுத்துவதாக. உமக்குப் பயப்படும் பயத்தோடு நான் வாழவும், என்னை சுற்றிலுமிருக்கிறவர்களுக்கு மகிழ்ச்சியை தரவும், உம்முடைய நாமத்திற்கு மகிமையை கொண்டுவரவும் உதவி செய்யும். உமக்குப் பிரியமான, உலகத்திற்கு ஆசீர்வாதமான தூபவர்க்கமாக என்னை வாழச்செய்யவேண்டுமென்று இயேசுவின் நாமத்தினால் ஜெபிக்கிறேன், ஆமென்.