அன்பானவர்களே, அற்புதங்களைச் செய்யும்படி ஆண்டவர் இன்று நம்மோடு இருக்கிறார். ஆகவே, வருத்தப்படாதிருங்கள். "கர்த்தரின் நாமம் பலத்த துருகம்; நீதிமான் அதற்குள் ஓடிச் சுகமாயிருப்பான்" (நீதிமொழிகள் 18:10) என்று வேதம் கூறுகிறது. நம்முடன் தேவனுடைய நாமம் பலத்த துருகமாயிருக்கிறது; அரணிப்பான கோட்டையாக இருக்கிறது. அது யாரும் நுழைய முடியாத அளவு மிகவும் பாதுகாப்பானது என்பது அதன் அர்த்தம். நீதிமான் அவரது நாமத்தின் கீழ் பாதுகாப்பாயிருப்பான். பேஸ்பால் அல்லது கிரிக்கெட் விளையாட்டில் பேட் செய்பவர் தன் கோட்டை அடைந்துவிட்டால் பாதுகாப்பாக இருப்பார். அதேபோல, நாமும் ஆண்டவரிடம் ஓடுவோம்.

தேவனுடைய வல்லமையான ஊழியர் ஒருவர் கூட்டம் நடத்தினார். ஆனால், கூட்டம் ஆரம்பமானதும் பலத்த மழை பெய்தது. அது நிற்கவே இல்லை. ஆனால், மக்கள் அனைவரும் கலையாமல் இருப்பதைக் கண்ட அந்த ஊழியர் ஆச்சரியப்பட்டார். பந்தலின் ஓர் ஓரமாக நின்று அவர்கள் கவனித்துக்கொண்டிருந்தனர். சிலர், அங்கிருந்த விளம்பர பதாகைகளை தங்கள்மேல் விரித்துக்கொண்டு கவனித்தனர். பலத்த மழையின் மத்தியிலும் மக்கள் தேவனுடைய வார்த்தையை பெற்றுக்கொண்டது ஆச்சரியமாயிருந்தது. அப்படி நாம் தினமும் தேவ வார்த்தையில் திளைக்கவேண்டும். அதுவே நமக்கு அரணான கோட்டையாக இருக்கிறது.

நீதிமான் தேவனுடைய வார்த்தையினிடத்திற்கு ஓடுகிறான்; அந்த வார்த்தை நம் வாழ்வில் வல்லமையாக செயல்படுகிறது. தேவன் அற்புதங்களைச் செய்கிறார்; அவர் நம் ஜீவனை பாதுகாக்கிறார்; நம்மை தீமையிலிருந்து மீட்டுக்கொள்கிறார். ஆகவே, தினமும் தேவ வார்த்தையினிடத்திற்கு ஓடுவோம். ஒவ்வொரு நாளும் வெவ்வேறு உபத்திரவங்கள் வரலாம்; ஆனால், தேவனுடைய வார்த்தையின் வாயிலாக அந்த நாளுக்குரிய புதிய இரக்கங்கள் நம்மேல் வரும்; நம் ஜீவனை பாதுகாக்கும். நீங்களே தேவனுடைய ஆவியின் நிறைவை உணர்வீர்கள். அன்பானவர்களே, அந்த கிருபையை தேவன் உங்களுக்குத் தருகிறார்.

ஜெபம்:
அன்பின் தகப்பனே, என் பலத்த துருகமாகிய உம்மிடம் நான் ஓடி வருகிறேன். நான் பயப்படுகிற, உபத்திரவமான சூழ்நிலையில் என் மீட்பராகவும் என்னை பாதுகாக்கிறவருமாகவும் இருப்பீராக. அனுதினமும் உம் வார்த்தையை தேடுவதற்கு எனக்கு உதவி செய்யும். உம் தெய்வீக சமுகத்தாலும் உம் சமாதானத்தாலும் என்னை நிரப்பிடும். ஆண்டவரே, எல்லா தீங்கிலிருந்தும் ஆபத்திலிருந்தும் என்னை பாதுகாப்பீராக. உம் நாமமே என்னை மூடுவதாக; எனக்கு பெலனாக இருப்பதாக. உம்மை முற்றிலுமாக நம்புவதற்கு எனக்குப் போதித்தருளும். உம் பலத்த கரத்தின் கீழ் என்னை பாதுகாத்தருள வேண்டுமென இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.