அன்பானவர்களே, இன்றைக்கு, "தாகமுள்ளவன்மேல் தண்ணீரையும், வறண்ட நிலத்தின்மேல் ஆறுகளையும் ஊற்றுவேன்; உன் சந்ததியின்மேல் என் ஆவியையும், உன் சந்தானத்தின்மேல் என் ஆசீர்வாதத்தையும் ஊற்றுவேன்" (ஏசாயா 44:3) என்ற வசனத்தைத் தியானிப்போம். சந்ததி சந்ததியாக தேவனை நமக்குள்ளே பெற்றிருப்பது எவ்வளவு ஆசீர்வாதம்! வேதம், "நீ விசுவாசித்தால், நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்," என்று கூறுகிறது. ஆண்டவர் சந்ததியை முழுமையாக ஆசீர்வதிக்க மனமுள்ளவராயிருக்கிறார். அவர் பரிசுத்த ஆவியை நம்மேல் வைக்கிறார்; நம் சந்ததிமேல் ஆசீர்வாதத்தை வைக்கிறார். அதற்காக நாம் தேவன்பேரில் தாகமாயிருக்கவேண்டும். ஆகவேதான் தாவீது, "மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல, தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது," (சங்கீதம் 42:1) என்று தேவன்பேரிலான தன் தாகத்தைக் கூறுகிறான். வனாந்தரத்தில் மான் தண்ணீரைத் தேடி இங்குமங்கும் ஓடும். அதேபோன்று, நாமும் தேவனை தேடி,"ஆண்டவரே, எனக்கு நீர் வேண்டும்," என்று கூறுவோம். அவ்விதமான தாகம் நமக்கு இருக்கவேண்டும். அதைத்தான் வேதம், "நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் திருப்தியடைவார்கள்," என்று கூறுகிறது.
வேதத்தில் இயேசு, "நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாகமுண்டாகாது," என்று கூறியிருக்கிறார் (யோவான் 4:14). ஆண்டவர் நமக்கு பரிபூரணத்தைத் தர மனமுள்ளவராயிருக்கிறார். தேவன், ஆபிரகாமை ஆசீர்வதித்தபோது, அவனிடம், "நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்," என்று கூறினார். நாம் ஆசீர்வாதமாயிருக்கும்படி, ஆண்டவர் நம்மை தம் ஆவியினால் நிரப்புவதற்கு விரும்புகிறார். ஆகவேதான் அவர், "நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன், உன்மேல் மட்டுமல்ல, உன் குமாரர், குமாரத்திகள், உன் வேலைக்காரர்கள் என்று ஆண், பெண் எல்லோர்மேலும் ஊற்றுவேன்," என்று கூறுகிறார். ஜீவ நீரோடைகள் உங்கள் சந்ததிமேல் பிரவாகித்து பாயும். துளித்துளியாக அல்ல; ஜீவத்தண்ணீர் ஓடையாக பாயும். அது பாய்ந்துகொண்டே இருக்கும்; ஆண்டவர் உங்களை நீர்ப்பாய்ச்சலான தோட்டமாக உருவாக்குவார்.
முதலாவது, ஆண்டவர் என் கணவரின் பெற்றோரை நிரப்பினார். அதன்பிறகு என் கணவர் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொண்டார். அவர்களைப் பார்த்து, என் இருதயத்தில் வாஞ்சை கொண்டு, நான் பரிசுத்த ஆவியைக் கேட்டேன். என் ஜெபத்திற்குப் பதிலளிக்கும்வண்ணம், ஆண்டவர் என்னையும் பரிசுத்த ஆவியினால் நிரப்பினார். எனக்குப் பிறகு, என் பிள்ளைகள் சாம், ஷேரன், ஸ்வீட்டி ஆகியோர் தேவனின் ஆசீர்வாதத்தை கேட்டனர். இன்றைக்கு அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளனர்; அது தொடர்கிறது. ஆண்டவர் எங்கள் மூன்று குட்டிப் பேரப்பிள்ளைகளையும் ஆசீர்வதித்திருக்கிறார். இப்போது அவர்கள்மேல் அதிகமான கிருபையை காண்கிறேன். பெற்றோராகிய நாங்கள், தேவன்பேரில் வாஞ்சையாயிருந்ததால், எங்களோடு கூட எங்கள் பிள்ளைகளையும், பிள்ளைகளின் பிள்ளைகளையும் ஆண்டவர் ஆசீர்வதித்திருக்கிறார்; நாங்கள் மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக விளங்குகிறோம். ஸ்வீட்டி, தொலைக்காட்சியில் கதைகளைச் சொல்லிக்கொண்டிருந்தபோதே வயதான ஒரு பெண்மணி, "குட்டி மகள் வந்தாலே எனக்கு அதிக சந்தோஷம்," என்று கூறினார்கள். எங்கள் பிள்ளைகள் அவ்வளவு ஆசீர்வாதமாக இருக்கிறார்கள். ஆம், கர்த்தர் வறண்ட நிலத்தின்மேல் தண்ணீரை ஊற்றுவார்; நம் பிள்ளைகள்மேலும் தம் ஆவியை ஊற்றுவார்; நம் சந்ததியின்மேல் ஆசீர்வாதத்தை பொழிந்தருளுவார். எவ்வளவு ஆசீர்வாதம்! இன்று அந்த கிருபை உங்கள் பிள்ளைகள்மேலும் உங்கள் சந்ததிமேலும் வருவதாக.
ஜெபம்:
பரம தகப்பனே, ஒருபோதும் தீராத ஆழமான தாகத்தை உம் பேரில் எனக்குள் உண்டாக்கும். மான்கள் நீரோடையை வாஞ்சிப்பதுபோல என் ஆத்துமா உம்மேல் தாகமாயிருக்கட்டும். உம் பிரசன்னத்தால் நான் நிரம்பி வழியுமட்டும் என்னை உம் பரிசுத்த ஆவியால் நிரப்பிடும். என் வாழ்வில் உலர்ந்துபோயிருக்கும் ஒவ்வொரு பகுதியிலும் உம் ஜீவத்தண்ணீரை ஊற்றுவீராக. உம் ஆசீர்வாதம் என் வழியாக என் பிள்ளைகளுக்கும் சந்ததிக்கும் பாய்ந்து செல்லட்டும். என் வாழ்க்கையை உம் மகிமையைக் காட்டும் நீர்ப்பாய்ச்சலான தோட்டமாக மாற்றும். உம் பரிபூரணமும் கிருபையும் என் வீட்டார்மேல் தங்கியிருக்கவேண்டுமென்று இயேசுவின் வல்ல நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


