அன்பானவர்களே, "கருணைக்கண்ணன் ஆசீர்வதிக்கப்படுவான்" (நீதிமொழிகள் 22:9) என்ற இன்றைய வாக்குத்தத்த வசனத்தை தியானிப்போம். எவ்வளவு அருமையான வாக்குத்தத்தம்! கருணையுள்ளவர்களை நேசிக்கும் தேவன் உங்களை ஆசீர்வதித்திருக்கிறார். ஆகவே, தொடர்ந்து மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாய் விளங்குங்கள்.
இன்றைய உலகம் லாபத்தையும் பலனையும் எதிர்பார்த்திருக்கிறது. மக்கள், தாங்கள் எதில் முதலீடு செய்து மிகுந்த பலனை பெற்றுக்கொள்ளலாம் என்று பல காரியங்களை ஆராய்ச்சி செய்வதில் அதிக நேரத்தை செலவிடுகின்றனர். இங்கே நான் முதலீடு செய்தால், வாழ்க்கைக்கான பலன்கள் கிடைக்கும்; இங்கே நான் பணத்தை சேர்த்து வைத்தால் எதிர்கால திட்டங்களுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம் என்கின்றனர். இப்படி அந்தப் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. ஆனால், ஏழைகளுக்கு, தேவையில் உள்ளவர்களுக்கு அல்லது ஆண்டவரின் ஊழியத்திற்குக் கொடுக்கவேண்டும் என்னும்போது அதில் பலன் ஏதும் கிடைக்காது என்றும் தங்களிடமுள்ள பணம் குறைந்துபோகும் என்றும் மக்கள் தயங்குகின்றனர். ஆனால், அன்பானவர்களே, இந்தக் காலத்திலும் நீங்கள் உண்மையாய் ஆண்டவரை தேடுகிறீர்கள். அலுவலகத்திலோ, ஒரு ஸ்தாபனத்தை நடத்துவதிலோ நேரத்தை செலவிட்டதுபோக, யாருக்காவது ஆசீர்வாதமாக இருக்கும்படியும் உங்களை நேரத்தைக் கொடுக்கிறீர்கள். ஒருவேளை, நீங்கள் படித்துக்கொண்டிருக்கலாம். ஆனால், மற்றவர்களுக்கு உதவி செய்ய நேரத்தை செலவழிக்கலாம். யாருக்காவது இயேசுவைப் பற்றி பகிர்ந்துகொள்வதற்கு நேரத்தை அர்ப்பணித்திருக்கலாம். நீங்கள் உதாரகுணமுள்ளவர்களாக இருக்கலாம். இவ்வுலக மக்கள் அதை, நேரத்திற்கும் பொருளுக்கும் பிடித்த கேடு என்று கூறலாம். ஆனால், நாம் சேவிக்கும் ஆண்டவரைப் பொறுத்தமட்டில், உதாரகுணமுள்ளவர்கள், கர்த்தரிடமிருந்து ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்வார்கள். இந்த உன்னதங்களின் பலன், உலகம் அளிக்கும் எதைக் காட்டிலும் மிகவும் அதிகமாகும்.
எங்கள் குடும்பத்தில் ஆண்டவரிடமிருந்து இந்த தெய்வீக பலன்களை பெற்று அனுபவித்திருக்கிறோம். வெவ்வேறு வழியில் மக்களிடம் உதாரகுணமாயிருக்க என் குடும்ப உறுப்பினர்கள் காண்பித்திருக்கிறார்கள். அதனால் இந்தத் தலைமுறையிலும் நாங்கள் தேவனுடைய ஆசீர்வாதத்தை அனுபவிக்கிறோம். அன்பானவர்களே, உதாரகுணமுள்ள ஆத்துமா ஆசீர்வாதம் பெறும். ஆகவேதான், இயேசு, தன் ஊழியர்களுக்கு வெவ்வேறு தொகையை அளித்த எஜமானைக் குறித்த உவமையைக் கூறியுள்ளார். எஜமான் திரும்பி வந்தபோது, கொடுத்த பணத்தை பெருக்கியிருந்த ஊழியன்மேல் பிரியம் கொண்டு இரட்டிப்பான தொகையை பலனாக அளித்தான். ஆம், அந்தத் தொகையை எதுவும் செய்யாமல் வைத்திருந்த ஊழியனிடமிருந்து அதை எடுத்து, இரட்டிப்பாக்கிய ஊழியனிடம் கொடுத்து, "கொஞ்சகாரியத்தில் நீ உண்மையாயிருந்தபடியால், நான் உனக்கு மிகுதியான பலனை கொடுப்பேன்," என்றான். அப்படியே அன்பானவர்களே, உங்கள் நேரத்தை, பணத்தை, தாலந்துகளை நீங்கள் உதாரத்துவமாய் மற்றவர்களின் ஆசீர்வாதத்திற்காக கொடுப்பதை ஆண்டவர் அறிந்திருக்கிறார். ஆண்டவரின் பார்வைக்கு நன்றாயிருக்கிறவற்றை நீங்கள் செய்திருக்கிறீர்கள். இன்னும் அநேக மக்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கும்படி அவர் உங்களை உயர்த்துவார்; தலைமுறை தலைமுறையாய் தம் பரிபூரண ஆசீர்வாதங்களை அனுபவிக்கும்படி செய்வார்.
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, உதாரகுணத்துடன் இருப்பது உம் பார்வையில் எவ்வளவு விலையேறப்பெற்றதாயிருக்கிறது என்று எனக்குப் போதித்ததற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். ஆண்டவரே, நான் ஜெபிக்கும்போது, பலன் கருதாமல் மகிழ்ச்சியோடு தாராளமாய் கொடுக்கும்படியான உதாரகுணமுள்ள இருதயத்தை எனக்கு அருளிச் செய்வீராக. ஏழைகளுக்கு, தேவையில் உள்ளவர்களுக்கு, உம் ஊழியத்துக்கு உதாரகுணத்தோடு இருப்பதை இந்த உலகில் எதுவும் தடுக்காதிருக்கட்டும். பரலோகத்தையும் பூமியையும் படைத்த உம்மிடமிருந்து எனக்குப் பலன் வரும். என்னை ஆசீர்வதிக்கும்படியாய் உம் கண்களை என்மேல் வைத்ததற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். முன்பை விட இன்னும் உதாரகுணத்துடன் இருப்பதற்கு என்னை அர்ப்பணித்து, என்னையும் என் வீட்டாரையும் நாங்கள் நினைக்கிறதை விட அதிகமாய் நீர் ஆசீர்வதிப்பீர் என்று விசுவாசிக்கிறேன். ஆண்டவரே, உம் உதாரகுணத்திற்காய் உம்மை ஸ்தோத்திரித்து இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


