அன்பானவர்களே, இன்றைக்கு, "என் கட்டளைகளையும் என் நியமங்களையும் கைக்கொண்டு, என் வழிகளில் நடப்பாயாகில், உன் நாட்களையும் நீடித்திருக்கப்பண்ணுவேன்" (1 இராஜாக்கள் 3:14) என்ற அருமையான வாக்குத்தத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. ஒருவேளை அநேகர், "ஆண்டவரே, நான் இத்தனை ஆண்டுகளாய் உமக்குக் கீழ்ப்படிந்திருக்கிறேன். உம் சத்தத்திற்குச் செவிகொடுத்திருக்கிறேன்; உம் வழிகளில் நடந்திருக்கிறேன். ஆனால், ஆசீர்வாதம் வரவேயில்லை," என்று எண்ணிக்கொண்டிருக்கலாம். இன்று ஆண்டவர் உங்கள் இருதயத்தைத் திடப்படுத்த விரும்புகிறார். அவர் தம் சிறந்த ஆசீர்வாதங்களுள் ஒன்றான நீடித்த அற்புதமான வாழ்வை தருவதாக வாக்குப்பண்ணுகிறார். நாம் அதை நம்பி, விசுவாசத்தோடு அதைப் பெற்றுக்கொள்வோம்.
நீடித்த ஆயுளின் முக்கியத்துவம் என்ன? வெறுமனே பல ஆண்டுகள் உயிரோடு இருப்பதல்ல; நம்மைச் சுற்றியிருக்கும் அநேகருக்குத் தொடர்ந்து ஆசீர்வாதமாக விளங்குவதாகும். இதை எங்கள் அன்பு பாட்டி ஸ்டெல்லா தினகரன் அவர்களின் வாழ்க்கையில் காண்கிறோம். இன்றைக்கும் நாங்கள் அவர்களை எப்போது பார்க்கச் சென்றாலும் வேதாகமம் அவர்களுக்கு முன்பாக திறந்திருக்கும். அவர்கள் எழுதிக்கொண்டு, செய்திகளை ஆயத்தம் பண்ணிக்கொண்டிருப்பார்கள். மேடையில் பிரசங்கிப்பதற்கோ, கணக்கற்றோரின் வாழ்க்கைக்கு ஆசீர்வாதமாக விளங்கும்படி செய்தியை பதிவு செய்யும்படியோ தொடர்ந்து உழைத்துக்கொண்டிருப்பார்கள். தேவன், தம் ராஜ்யத்திற்கு இன்னும் கனிகொடுக்கும்படியாய் அவர்கள் வாழ்க்கையை ஆசீர்வதித்துள்ளார்.
உங்களையும் அவ்விதம் பயன்படுத்தவே ஆண்டவர் விரும்புகிறார். அநேகருக்கு ஆசீர்வாதத்தையும், தமக்கு மகிமையையும் கொண்டு வரும்படி உங்களுக்கு நீடித்த ஆயுளை அளிக்க விரும்புகிறார். நேர்கோட்டில் செல்லும் எறும்புகளை பாருங்கள். அவை, தங்கள் தலைவன் செல்லுமிடத்திற்கு உண்மையுடன் அவனை தொடர்ந்து செல்லும். தங்களைச் சுற்றி நடக்கும் எந்தக் காரியத்தாலும் அவற்றின் கவனம் சிதறுவதில்லை. அவை வலப்புறமோ, இடப்புறமோ திரும்பாமல் தொடர்ந்து கீழ்ப்படியும்.
ஆண்டவர் நம்மிடமும் அதையே எதிர்பார்க்கிறார். நாம் முழு மனதுடன் அவருக்குக் கீழ்ப்படிந்து, அவரைப் பின்பற்றுவோமானால், அவர் நீடித்த, உண்மையுள்ள வாழ்வை நமக்குத் தந்து நம்மை ஆசீர்வதிப்பார். அவர் நம்மை பாதுகாப்பார்; வழிநடத்துவார்; மற்றவர்களின் வாழ்க்கையைத் தொடுவதற்கு நம்மை பயன்படுத்துவார். என் கீழ்ப்படிதலுக்கு ஏதும் பலனுண்டா என்று நீங்கள் இன்று கவலைப்பட்டால், திடன் கொள்ளுங்கள். ஆண்டவர், "நான் உனக்கு நீடித்த ஆயுளைத் தருவேன்," என்று கூறுகிறார். அவர் எல்லா தியாகத்தையும், உண்மையான எல்லா செயல்களையும், கீழ்ப்படிந்து எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியையும் காண்கிறார். ஒன்றும் மறக்கப்படுவதில்லை.
ஜெபம்:
இந்தச் செய்தியை பார்த்துக்கொண்டிருக்கும் ஒவ்வொருவருக்காகவும் ஜெபிக்கிறேன். அநேகர் அதைரியமடைந்து, கீழ்ப்படிதலோடு இருந்த இத்தனை வருஷங்களும் வீணாகிப்போயிற்றோவென்று திகைக்கக்கூடும். ஆனால், இன்று, உம் வாக்குத்தத்தத்தினால் அவர்களுக்கு மறுபடியும் நிச்சயம் அளிக்கிறீர். உம் பிள்ளைகள்மேல் உம் ஆசீர்வாதம் வருவதாக. அவர்கள் எங்கு சென்றாலும் பாதுகாப்பீராக. அவர்கள் பயணிக்கும்போதும், வேலை செய்யும்போதும், தங்கள் அனுதின கடமைகளைச் செய்யும்போதும் உம் பாதுகாப்பின் கரம் அவர்கள் வாகனத்தின்மேலும் அவர்கள்மேலும் இருப்பதாக. மற்றவர்களுக்கு ஆசீர்வாதமானதாகவும், உம் நாமத்துக்கு மகிமையைக் கொண்டுவருவதாகவும் இருக்கும்படியாக அவர்களுக்கு நீடித்த ஆயுளை பலனாக அளித்தருளும். எங்கள் வாழ்க்கையை உம் கரங்களுக்குள் அர்ப்பணிக்கிறோம். தொடர்ந்து உமக்கு உண்மையாகவும் கீழ்ப்படிதலோடும் இருப்பதற்கு எங்களுக்கு உதவி செய்யவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


