அன்பானவர்களே, இன்றைய வாக்குத்தத்தம், "அழிக்கும் வாதை உங்களுக்குள்ளே வராதிருக்கும்" (யாத்திராகமம் 12:13) என்று கூறுகிறது. கர்த்தர், அவர்கள் வீடுகளின் நிலைக்கால்களில் இரத்தத்தைக் கண்டால், தாம் அந்த வீடுகளைக் கடந்துபோய்விடுவதாகவும், எந்த வாதையும் அவர்களுக்கு நேராது என்றும் வாக்குப்பண்ணினார். இது, நமக்கு எவ்வளவு அருமையான வாக்குத்தத்தமாயிருக்கிறது!

இஸ்ரவேல் மக்கள், தங்கள் வீட்டின் நிலைக்கால்களில் இரத்தத்தைத் தெளித்ததால் பாதுகாக்கப்பட்டார்கள். ஆட்டுக்குட்டியின் இரத்தம், இயேசு சிலுவையில் சிந்திய இரத்தத்தைக் குறிக்கிறது. நம்முடைய சொந்த நீதியினால் அல்ல; இயேசுவின் இரத்தத்தால் நாம் இரட்சிக்கப்பட்டுள்ளோம். வேதம், "ஆத்துமாவிற்காகப் பாவநிவிர்த்தி செய்கிறது இரத்தமே," என்றும், "இது பாவமன்னிப்புண்டாகும்படி அநேகருக்காகச் சிந்தப்படுகிற புது உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தமாயிருக்கிறது," என்றும் கூறுகிறது (லேவியராகமம் 17:11; மத்தேயு 26:28). அவருடைய இரத்தத்தினால் நாம் மன்னிக்கப்படுகிறோம்; கிரயங்கொள்ளப்படுகிறோம்; மீட்கப்படுகிறோம். இயேசுவின் இரத்தத்தினால் நாம் குணமும் பெறுகிறோம். எப்பொழுதெல்லாம் ஆண்டவர் சிந்தப்பட்ட இரத்தத்தை நினைக்கிறாரோ அப்போது நம்மையும் நினைவுகூர்கிறார்.

என் தம்பி ஆனந்த் சிறுவனாயிருந்தபோது, ஒருமுறை பாலை சூடாகக் குடித்ததால் நாக்கில் கொப்புளங்கள் உண்டாயின. வலியை தாங்க முடியாமல் நாள் முழுவதும் அழுதுகொண்டே இருந்தான். அவனால் எதையும் குடிக்கவோ, சாப்பிடவோ இயலவில்லை. மிகுந்த வேதனையில் அவன் என் அம்மாவை அழைத்து, "அம்மா, என் நாக்கில் கொஞ்சம் ஜெப எண்ணெய் போடுங்கள்," என்றான். இயேசுவின் இரத்தத்தை அவன் விசுவாசித்து, "என் நாக்கில் நீங்கள் ஜெப எண்ணையை தடவினீர்களானால் நாளை காலையிலேயே நான் சுகமாகிவிடுவேன்," என்று கூறினான். இயேசு, பலியானதில் அவன் பெரிய விசுவாசம் வைத்திருந்தான். அற்புதவிதமாக அவன் விசுவாசத்தின்படியே, மறுநாள் காலையில் ஆண்டவர் அவனைத் தொட்டு பரிபூரணமாக சுகப்படுத்தினார்.
இரத்தம், நம் ஆசீர்வாதங்களுக்கான அடையாளமாயிருக்கிறது. அதேபோன்று அநேக தாய்மார்கள், ஆண்டவர் அற்புதங்களைச் செய்வார் என்று விசுவாசித்து நம் ஜெப கோபுரங்களில் ஜெப எண்ணெயைப் பெற்றுக்கொள்வதைப் பார்க்கிறேன். அதை அவர்கள் வீட்டு நிலைக்கால்களிலும், தங்கள் பிள்ளைகள்மேலும், குடிப்பழக்கம் உள்ள கணவர்மேலும் போராடி தடவுகிறார்கள். சிலர், தங்கள் விலங்குகள்மேலும் ஆண்டவர் அவற்றைக் குணப்படுத்துவார் என்று விசுவாசித்து தடவுகிறார்கள். இன்னும் சிலர் ஆண்டவர் தங்கள் உணவை ஆசீர்வதிப்பார் என்று விசுவாசித்து தாங்கள் சமைக்கும் பானைகளில் எண்ணெயை போடுகிறார்கள். ஆம், இயேசுவின் இரத்தத்தின் வாயிலாக நாம் பாதுகாக்கப்படுகிறோம்; சுகம் அடைகிறோம். இன்று, ஆண்டவரின் கரம் உங்கள்மேல் வருவதாக. ஆணி கடாவப்பட்ட ஆண்டவரின் கரம் உங்கள்மேல் அமர்ந்து குணப்படுத்துவதாக.

ஜெபம்:
அன்பான பரம தகப்பனே, எங்களுக்காக சிலுவையில் உம் விலையேறப்பெற்ற இரத்தத்தை சிந்தியதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். உம் இரத்தத்தின் வல்லமை உம் பிள்ளைகளுக்கு மன்னிப்பை, பாதுகாப்பை, சுகத்தை, ஜீவனை அளிக்கட்டும். வியாதியாயிருப்போரை தொட்டு எல்லா நோயையும், நோய்த்தொற்றையும், புற்றுநோயையும், கட்டியையும், இரத்தத்தில் உள்ள கோளாறையும், பெலவீனத்தையும் சுகமாக்கும். எல்லா உறுப்புகளும் இயல்பாக செயல்படுவதாக. புதியவற்றை படைக்கும் அற்புதங்கள் நிகழ்வதாக. வளைந்த விரல்களை, சரியாக உருப்பெறாத எலும்புகளை, பாதிப்புற்ற நரம்புகளை, மூளையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை, ஆட்டிசத்தை, நாக்கு மற்றும் தொண்டை நோய்களை குணமாக்குவீராக. தேவையில்லாத பெலவீனம் அத்தனையும் அகன்றுபோகட்டும். ஆண்டவரே, உம் தியாகத்தை நினைவுகூரும்; பாடனுபவிக்கிற யாவரையும் சீர்ப்படுத்துவீராக. யாரும் நம்பிக்கையிழக்காமல் இருக்கட்டும்; உம் சுகமளிக்கும் வல்லமையை அவர்கள் இன்றே அனுபவிக்கவேண்டும் என்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.