எனக்கு அருமையான தேவ பிள்ளையே, நம்முடைய ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் விலையேறப் பெற்ற நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன். இன்று நாம், "அவருக்குள் நீங்கள் பரிபூரணமுள்ளவர்களாயிருக்கிறீர்கள்" (கொலோசெயர் 2:10) என்ற வசனத்தைத் தியானிப்போம். ஆண்டவருக்குள் பரிபூரணமான வாழ்வைப் பெற்றிருப்பது எவ்வளவு பாக்கியம்!

வேதத்தை வாசித்தீர்களானால், "உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவான்" என்று கூறுகிறது (நீதிமொழிகள் 28:20). ஆம், அன்பு பிள்ளையே, நாம் ஆண்டவரை உண்மையாக பின்பற்றுகிறவர்களாக, தேவனுடைய வார்த்தையை வாசிக்கிறவர்களாக, நம் முழு இருதயத்துடனே அவரை தேடுகிறவர்களாக இருக்கவேண்டும். இவை யாவற்றிலும் அவரை பின்பற்ற நாம் கருத்தாய் இருக்கவேண்டும். அப்போது, வாழ்வின் பரிபூரணத்தை அனுபவிப்போம்.

இதை வேதம், "நீங்கள் அவருடைய ஆவியினாலே உள்ளான மனுஷனில் வல்லமையாய்ப் பலப்படவும், விசுவாசத்தினாலே கிறிஸ்து உங்கள் இருதயங்களில் வாசமாயிருக்கவும், நீங்கள் அன்பிலே வேரூன்றி, நிலைபெற்றவர்களாகி, சகல பரிசுத்தவான்களோடுங்கூடக் கிறிஸ்துவினுடைய அன்பின் அகலமும், நீளமும், ஆழமும், உயரமும் இன்னதென்று உணர்ந்து; அறிவுக்கெட்டாத அந்த அன்பை அறிந்துகொள்ள வல்லவர்களாகவும், தேவனுடைய சகல பரிபூரணத்தாலும் நிறையப்படவும், அவர் தமது மகிமையினுடைய ஐசுவரியத்தின்படியே, உங்களுக்கு அநுக்கிரகம் செய்யவேண்டும்" என்று கூறுகிறது (எபேசியர் 3:16-19).

முதலாவதாக, நாம் உள்ளான மனுஷனில் அவரது ஆவியால் பெலப்படுத்தப்படவேண்டும். பரிசுத்த ஆவியின் மூலமாக நீங்கள் தேவ வல்லமையால் நிரப்பப்படும்போது, வாழ்வில் பாக்கியமடைவீர்கள். இரண்டாவதாக, ஆண்டவருடன் அன்பில் வேரூன்றியிருக்கவேண்டும். மூன்றாவதாக, மற்ற பரிசுத்தவான்களோடு, தேவனுடைய மகத்துவமான அன்பை கண்டுகொள்ள முடியும். நிறைவாக, தேவனுடைய பரிபூரணத்தினாலே நீங்கள் நிரப்பப்பட்டிருக்கவேண்டும்.

தேவனுடைய அருமையான பரிசுத்தவான்களே, ஆண்டவருக்குள் பூரணமான வாழ்க்கை என்பதற்கு இதுவே அர்த்தமாகும். இந்த வாக்குத்தத்தங்களை நாம் சுதந்தரித்துக்கொண்டு, இவை எல்லாவற்றையும் நம் வாழ்வில் நிறைவேற்றும்படி ஆண்டவரிடம் கேட்போம்.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, வாக்குப்பண்ணின எல்லா ஆசீர்வாதங்களையும் உம் நாமத்தினாலே பெற்றுக்கொள்கிறேன். என்னை தயவுசெய்து தேவ வல்லமையினாலும், பரிசுத்த ஆவியினாலும் அளவின்றி நிரப்புவீராக. பரிசுத்த ஆவியின் வல்லமையினால் என் வாழ்வில் எல்லா காரியங்களும் செய்துமுடிக்கப்படுவதாக. உம் ஆசீர்வாதத்திற்காக நான் காத்திருக்கும்போது என்னை தொட்டருளும். ஆண்டவரே, என் வாழ்க்கை புதுப்பிக்கப்படுவதாக. பரிசுத்த ஆவியின் பூரணத்தையும், தேவனுடைய நிறைவான ஆசீர்வாதத்தையும் நான் பெற்றுக்கொள்ளவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.