எனக்கு அருமையான தேவ பிள்ளையே, நம்முடைய ஆண்டவரும் இரட்சகருமான இயேசு கிறிஸ்துவின் வல்லமையான நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன். இன்றைக்கு, நாம், "நெருக்கத்திலிருந்து கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன், கர்த்தர் என்னைக் கேட்டருளி விசாலத்திலே வைத்தார்" (சங்கீதம் 118:5) என்ற அருமையான வசனத்தை தியானிப்போம். அன்பானவர்களே, வேதம் மீண்டும் மீண்டும் இந்த சத்தியத்தைக் கூறுகிறது (சங்கீதம் 18:6; 2 சாமுவேல் 22:4-7). விசேஷமாக, 18ம் சங்கீதத்தின் மூன்றாம் வசனம், "துதிக்குப் பாத்திரராகிய கர்த்தரை நோக்கிக் கூப்பிடுவேன்; அதனால் என் சத்துருக்களுக்கு நீங்கலாகி இரட்சிக்கப்படுவேன்" என்று கூறுகிறது. "எனக்கு உண்டான நெருக்கத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு, என் தேவனை நோக்கி அபயமிட்டேன்; தமது ஆலயத்திலிருந்து என் சத்தத்தைக் கேட்டார், என் கூப்பிடுதல் அவர் சந்நிதியில் போய், அவர் செவிகளில் ஏறிற்று" (சங்கீதம் 18:6).
அன்பானவர்களே, இதுதான் ஜெபம்! உங்கள் இருதயத்தை திறந்து, இருதயத்தின் வேதனைகள், தேவைகள் எல்லாவற்றையும் அவர் சமுகத்தில் ஊற்றிவிடுவதுபோல் ஆண்டவரிடம் கூறுவதே ஜெபமாகும். தன்னால் சகிக்கக்கூடாத மிகப்பெரிய சேதங்களைக் கடந்து சென்ற தேவ ஊழியனாகிய யோனாவும், "என் நெருக்கத்தில் நான் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன்; அவர் எனக்கு உத்தரவு அருளினார்; நான் பாதாளத்தின் வயிற்றிலிருந்து கூக்குரலிட்டேன், நீர் என் சத்தத்தைக் கேட்டீர்" (யோனா 2:2) என்று கூறுகிறான். யோனாவின் வாழ்க்கை உங்களுக்குத் தெரியும். அவன் எப்படி காப்பாற்றப்பட்டான்? தேவன் அவனை எப்படி மறுபடியும் அபிஷேகித்து, தம் மகிமைக்கென்று பயன்படுத்தினார் என்பதை அறிந்திருக்கிறீர்கள். அவ்வண்ணமாகவே, நாம் உபத்திரவங்கள், சோதனைகள், எல்லாவகையான பிரச்னைகள் வழியாகவும் கடந்துசெல்லும்போது, ஆண்டவரை நோக்கிப் பார்க்கவேண்டும். "கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்" என்று வாக்குத்தத்தம் சொல்லுகிறது. உங்கள் வாயை திறந்து அவரிடம் பேசுங்கள். உங்கள் தேவைகள், உங்கள் இருதயத்தின் வேதனை எல்லாவற்றையும் அவரிடம் ஊற்றுங்கள்; அதுவே ஜெபமாயிருக்கிறது. "அந்தப்படி நான் பலவீனமாயிருக்கும்போதே பலமுள்ளவனாயிருக்கிறேன்; ஆகையால் கிறிஸ்துவினிமித்தம் எனக்குவரும் பலவீனங்களிலும், நிந்தைகளிலும், நெருக்கங்களிலும், துன்பங்களிலும், இடுக்கண்களிலும் நான் பிரியப்படுகிறேன்" (2 கொரிந்தியர் 12:10).
"நான் பலவீனமாயிருக்கும்போதே பலமுள்ளவனாயிருக்கிறேன்" என்று பவுல் எழுதுகிறான். நாம் எல்லாவற்றையும் தேவனுடைய கரங்களில் அர்ப்பணிக்கும்போது, நாம், விசேஷமாக தேவ ஊழியர்கள் இந்த உலகில் அநேக உபத்திரவங்கள், சோதனைகள் வழியாக கடந்து செல்ல நேரிடும்போது, அவருடைய நாமத்திற்காக அவற்றை சகிக்கிறோம். ஆனாலும் சந்தோஷமாயிருக்கவும், எல்லாவற்றையும் அவர் கரங்களில் ஒப்படைத்து, எல்லா சூழ்நிலைகளிலும் அவரை நம்பவும் அழைக்கப்பட்டிருக்கிறோம். நம்முடைய பலவீனங்களில் அவரது பலன் பூரணமாக விளங்கும்; நம்முடைய உபத்திரவங்களில் அவரது மகிமை வெளிப்படும்.
ஜெபம்:
அன்புள்ள பரம தகப்பனே, அருமையான வாக்குத்தத்தத்திற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். நான் நெருக்கப்படும்போது, உம்மை நோக்கிக் கூப்பிட்டால் நீர் செவிகொடுப்பீர் என்பதை அறிந்து நன்றி செலுத்துகிறேன். ஆழங்களிலிருந்து கூப்பிட்ட யோனாவுக்கு பதில் கொடுத்ததுபோல, தாவீதை தூக்கி விசாலமான இடத்தில் வைத்ததுபோல, எல்லா பாரங்கள், எல்லா துக்கங்கள், எல்லா பயங்களிலிருந்தும் என்னை தூக்கியெடுப்பீராக. உம்முடைய தயையை நம்பி, என் இருதயத்தை ஜெபத்தில் உம்மிடம் ஊற்றவும், என்னுடைய பலவீனத்திலே உம்மில் பலத்தை கண்டடையவும் எனக்குக் கற்பியும். ஆண்டவரே, எல்லா உபத்திரவத்தையும் சோதனையையும் உம் கரங்களில் ஒப்படைக்கிறேன். என் சகாயரும் கீதமுமான நீர் உம்முடைய பூரண சமாதானத்தால், உமது தைரியத்தால், உம்முடைய சந்தோஷத்தால் என்னை நிறைக்கவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.