எனக்கு அருமையான தேவ பிள்ளையே, நம் ஆண்டவரும் இரட்சகருமான இயேசு கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன். இன்று, "எங்கள் தேவனுடைய கரம் தம்மைத் தேடுகிறவர்கள் எல்லார்மேலும் அவர்களுக்கு நன்மையாக இருக்கிறதென்றும்... சொல்லியிருந்தோம்" (எஸ்றா 8:22) என்ற வசனம் நமக்கு வாக்குத்தத்தமாக கொடுக்கப்பட்டுள்ளது. ஆம், அன்பானவர்களே, ஆண்டவரோடு நமக்கு நெருக்கமான ஐக்கியம் இருக்கவேண்டும். நாம் அவரை நோக்கிப் பார்க்கவேண்டும்; அவரைப் பற்றிக்கொள்ளவேண்டும்; அவருடன் பேச வேண்டும். இப்படி ஆண்டவருடன் நெருங்கவேண்டும். தாவீது, அப்படி தேவனுடன் சமீபித்திருந்தான். வேதம், "ஐசுவரியமும் கனமும் உம்மாலே வருகிறது; தேவரீர் எல்லாவற்றையும் ஆளுகிறவர்; உம்முடைய கரத்திலே சத்துவமும் வல்லமையும் உண்டு; எவரையும் மேன்மைப்படுத்தவும் பலப்படுத்தவும் உம்முடைய கரத்தினால் ஆகும்" (1 நாளாகமம் 29:12) என்று கூறுகிறது.
தாவீது, மேய்ப்பனான சாதாரண பையன். ஆனாலும், தேவன் அவனை வல்லமையான ராஜாவாகும்படி ஆசீர்வதித்தார். அவன் எப்படி இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொண்டான்? அவன் கர்த்தரை எப்படி தேடினான்? வேதம், "அந்திசந்தி மத்தியான வேளைகளிலும் நான் தியானம்பண்ணி முறையிடுவேன்" (சங்கீதம் 55:17) என்றும், "தேவனே...அதிகாலமே உம்மைத் தேடுகிறேன்" (சங்கீதம் 63:1) என்றும் கூறுகிறது. ஆகவேதான் அவனால், "கர்த்தாவே, உம் வலது கரம் என்னைப் பிடித்திருக்கிறது. உம் காருண்யம் என்னை பெரியவனாக்கும்," என்று திடநம்பிக்கையுடன் கூற முடிந்தது. ஆம், நீங்கள் விசுவாசித்தால் தேவனுடைய மகிமையை காண்பீர்கள். தாவீது தன் முழு இருதயத்தோடும் கர்த்தரைத் தேடினான். தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்துவும் தம் பிதாவை தேடுவதில் கவனமாயிருந்தார். அதிகாலையில் எழுந்து பிதாவை தேடினார் என்று வேதத்தில் வாசிக்கிறோம் (மாற்கு 1:35).
அன்பானவர்களே, அவனைப் போல நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும் ஆண்டவரை தேட வேண்டும். அதிகாலையில் நான்கு மணிக்கே சீக்கிரமாய் எழுந்து, அவரது பாதத்தில் அமர்ந்திடுங்கள். தேவ மகிமையைப் பாடுங்கள். தேவனுடைய வார்த்தையை வாசித்திடுங்கள். உங்கள் உள்ளத்தின் ஆழத்திலிருந்து ஆண்டவரை மகிமைப்படுத்துங்கள். தேவ வல்லமையாலும் அவரது சமுகத்தாலும் அருமையாக நிரப்பப்படுவீர்கள். உங்கள் இருதயத்திலுள்ள விருப்பங்கள் யாவற்றையும் நீங்கள் ஊற்றிவிடலாம். தேவ கரம் உங்கள்மேல் வரும். நீங்கள் பரிபூரணமான ஆசீர்வாதத்தை பெறுவீர்கள். ஆகவே, "ஆண்டவரே, நான் என் முழு உள்ளத்தோடும் உம்மை தேட விரும்புகிறேன்," என்று கூறி, உங்கள் வழிகளையெல்லாம் அவரிடம் அர்ப்பணித்து, அவரை முழுமையாக தேடக்கூடிய கிருபையை தரும்படி கேளுங்கள். நிச்சயமாகவே பாக்கியம் பெறுவீர்கள்.
ஜெபம்:
அன்புள்ள தகப்பனே, உம் கிருபையின் கரம் என் வாழ்வில் செயல்படுவதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். உம்மை முழு இருதயத்துடனும் தேடுவதற்கான கிருபையை எனக்குத் தந்தருளும். சீக்கிரமாகவே எழுந்து உம் பாதத்தில் அமருவதற்கு எனக்கு உதவி செய்யும். தயவாய் உம் வல்லமையாலும் உம் சமுகத்தாலும் என்னை நிரப்பிடும். உம் வலது கரம் எப்போதும் என்னை தாங்குவதாக. வாழ்வில் எல்லா காலங்களிலும் உம்மையே பற்றிக்கொள்ள எனக்குப் போதித்தருளும். என் வாழ்க்கை உம் மகிமைக்கு சாட்சியாக விளங்கப்பண்ணவேண்டுமென்று இயேசுவின் விலையேறப்பெற்ற நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


