அன்பானவர்களே, மறைந்த என் அன்பு அத்தை ஏஞ்சல் தினகரனை இன்றைக்கு நாங்கள் நினைவுகூர்கிறோம். கொடிய கார் விபத்தில் அவர்கள் உயிர் சீக்கிரமாகவே எடுக்கப்பட்டுவிட்டது. பூமியில் அவர்கள் பயணம் சீக்கிரமாகவே முடிந்துவிட்டாலும், தேவனுடைய வல்லமையான திட்டத்தின் தெய்வீக ஆரம்பமாக அது இருந்தது. காருண்யா பல்கலைக்கழகத்தின் தொடக்கமாகவும் இயேசு அழைக்கிறார் ஊழியத்தின் விரிவாகவும் அது அமைந்தது. எங்கள் துக்கம், ஆசீர்வாதத்தின் விதையாக மாறியது. இன்றைக்கு அவர்கள் வாழ்க்கையையும் ஊழியத்தையும் நினைவுகூரும் நமக்கு, தேவன், "கர்த்தரே ஆவியானவர்; கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலையுமுண்டு" (2 கொரிந்தியர் 3:17) என்ற வாக்குத்தத்தத்தை தருகிறார். பரிசுத்த ஆவியானவரால் வரும் விடுதலை, உலக பிரகாரமானதல்ல; அக்கிரமத்திலிருந்தும் வெட்கத்திலிருந்தும் பாவத்திலிருந்தும் தரப்படும் பரலோக விடுதலை. பாவம், நம் உள்ளத்தில் அடிக்கடி, "உனக்குத் தகுதியில்லை. ஒருபோதும் நீ ஆசீர்வாதம் பெற முடியாது. தேவனிடம் உன்னால் செல்ல முடியாது," என்று கூறலாம். அன்பானவர்களே, ஆனால், பரிசுத்த ஆவியானவர் வந்து அந்தக் குரலை மௌனமாக்கி, "இயேசு ஏற்கனவே உனக்காக கிரயத்தை செலுத்திவிட்டார். நீ மன்னிக்கப்பட்டாய்; நேசிக்கப்பட்டாய்; விடுதலையாக்கப்பட்டாய்," என்று நினைவுப்படுத்துகிறார். தேவ ஆவியானவர் உங்களை நிரப்பும்போது, அவர் அக்கிரமத்தைப் போக்கி, பரம தகப்பனின் ஆசீர்வாதங்களை அனுபவிக்கும் உரிமையை திரும்ப தருகிறார்.
எங்கள் குடும்பத்தினர் அடிக்கடி நினைவுகூரும் ஜிம், ஹென்றி என்ற சிறுபையன்களின் கதையை பகிர்ந்து கொள்கிறேன். கோழிக்கூண்டு ஒன்றின் அருகில் விளையாடிக்கொண்டிருந்தபோது, ஜிம் எறிந்த சிறுகல் கோழியின்மீது பட்டு அது செத்துவிட்டது. பயந்துபோன அவன் தன் அண்ணன் ஹென்றியிடம், பெற்றோரிடம் அதைக் கூறிவிடவேண்டாம் என்று கேட்டுக்கொண்டான். அதற்கு ஒத்துக்கொண்ட ஹென்றி, ஜிம்மின் பயத்தை பயன்படுத்திக்கொண்டான். எப்போதெல்லாம் பெற்றோர் ஹென்றியை வீட்டு வேலையைச் செய்ய சொல்கின்றனரோ, அப்போதெல்லாம், "ஜிம், நீ செய்துவிடு. இல்லையென்றால் நான் அந்தக் கோழியைப் பற்றி அப்பாவிடமும் அம்மாவிடமும் சொல்லிவிடுவேன்," என்று கூறுவான். நாளுக்கு நாள், பயத்தோடும் குற்றவுணர்வோடும் ஹென்றியின் பாரத்தை ஜிம் சுமந்துகொண்டே இருந்தான். அவனால் மேலும் பொறுத்துக்கொள்ள முடியாத கட்டத்தை அடைந்தான். தன் தந்தையிடம் கண்ணீரோடு நடந்த எல்லாவற்றையும் அறிக்கையிட்டான். அவன் அப்பா, "மகனே, நீ உனக்கான பாடத்தைப் படித்துக்கொண்டாய்," என்று கூறி அவனை மன்னித்துவிட்டார். அன்று மாலை ஹென்றி மறுபடியும் ஜிம்மை கட்டாயப்படுத்துவதை தந்தை கேட்டு ஹென்றியை கடிந்துகொண்டார். அன்பானவர்களே, இந்தக் கதை பாவமும் அக்கிரமமும் எவற்றையெல்லாம் செய்யக்கூடும் என்பதைக் காட்டுகிறது. பயமும் வெட்கமும் நம்மை அடிமைப்படுத்தும். ஆனால் நாம் நம் அன்பு தகப்பனிடம் சென்று அவற்றை அறிக்கைசெய்தால், அவர் எல்லா பாரத்திலிருந்தும் நம்மை விடுவிக்கிறார். இன்றைக்கு பரிசுத்த ஆவியானவரின் குரல், "இயேசுவிடம் வா. அவரிடம் எல்லாவற்றையும் கூறு. விடுதலையாகு," என்று ஒலிக்கிறது. அவருடைய மன்னிப்பை விட பெரிய பாவம் எதுவுமில்லை; அவருடைய இரக்கத்தை மிஞ்சிய தவறு எதுவுமில்லை.
ஆகவே, விசேஷித்த நினைவு தினமான இன்று, நம்முடைய இருதயங்களை கர்த்தரின் ஆவியானவருக்கு திறப்போம். இழப்புக்குப் பின் எங்கள் குடும்பத்துக்கு ஆறுதலை அளித்த அதே ஆவியானவர் உங்களை ஆறுதல்படுத்தவும் இங்கு இருக்கிறார். பயத்திலிருந்து, அக்கிரமத்திலிருந்து, பாவத்தின் சாபத்திலிருந்து அந்த ஆவியானவர் உங்களுக்கு விடுதலை அருளுவார். இயேசுவின் இரத்தம் உங்களை முற்றிலும் சுத்திகரித்து புதிதான வாழ்க்கையை உங்களுக்கு தருவார். பரிசுத்த ஆவியானவர் உங்களை நிரப்பும்போது, தகப்பனின் ஆசீர்வாதத்தை அவர் கொண்டு வருகிறார். உங்கள் துக்கங்கள் சந்தோஷமாக மாறும்; உங்கள் தோல்விகள் வெற்றியாக, உங்கள் துயரம் ஆனந்தக் களிப்பாகவும் மாறும். மீண்டும் எழும்பி ஜெயத்துடன் வாழ அந்த ஆவியானவர் உங்களுக்கு உதவுவார். அன்பானவர்களே, என் அத்தை ஏஞ்சல் தினகரனின் வாழ்க்கைக்காக தேவனை ஸ்தோத்திரிப்போம்; அவரது ஆவி மூலமாக வரும் விடுதலைக்காகவும் நன்றி செலுத்துவோம். "ஆண்டவரே, என்னை உம் ஆவியால் நிரப்பும். விடுதலை தாரும்," என்று இப்போது கேட்போம். எங்கள் குடும்பத்தின் துயரத்தை வெற்றியாக மாற்றிய ஆண்டவர், உங்கள் வாழ்க்கையில் உள்ள எல்லா வேதனைகளையும் தம் மகிமைக்கான சாட்சியாக மாற்றுவார்.
ஜெபம்:
 அன்புள்ள ஆண்டவரே, என்னை விடுவிக்கும்படியாக உம்முடைய பரிசுத்த ஆவியை அனுப்புகிறதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். எல்லா பாவங்களையும் மன்னித்து, அக்கிரமத்தையும் பயத்தையும் அகற்றிப்போடும். உம் ஆவியானவர் என் உள்ளத்தை சமாதானத்தினாலும் சந்தோஷத்தினாலும் நிரப்புவாராக. உம்முடைய விலையேறப்பெற்ற இரத்தத்தினால் என்னை சுத்திகரித்து புதிதாக்கும். என்னை கட்டி வைத்திருக்கும் எல்லா கட்டுகளையும் அறுத்திடும். நீரருளும் விடுதலை என் வீட்டிலும் குடும்பத்திலும் பாய்ந்து செல்வதாக. எல்லா துக்கத்தையும் குணமாக்கி, உடைந்து போயிருக்கும் என் உள்ளத்தை தேற்றுவீராக. இந்த மாதத்தில் உம் ஆசீர்வாதங்கள் பெருகுவதாக. என் வாழ்வில் ஏற்பட்ட எல்லா இழப்பையும் தெய்வீக நோக்கமும் மகிமையுமுள்ளதாக மாற்ற வேண்டுமென்று இயேசுவின் வல்ல நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

 தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்    
  Donate Now


