அன்பானவர்களே, இன்றைக்கும் உங்களை வாழ்த்துவதில் மகிழ்ச்சியடைகிறேன். இன்று நாம், "பரலோகத்தின் திறவுகோல்களை நான் உனக்குத் தருவேன்" (மத்தேயு 16:19) என்ற வசனத்தை தியானிக்கப் போகிறோம். பரலோகம் என்பது தேவனுக்குரிய காரியங்களை குறிக்கிறது. தேவன் நமக்கு பரலோகத்தின் திறவுகோலைத் தருவார். இந்த திறவுகோலானது நம் வாழ்வில் மூன்று காரியங்களை திறக்கிறது.

முதலாவது, அது நமக்கு  அனுமதி அளிக்கிறது. மத்தேயு 16-ஆம் அதிகாரத்தில், இயேசு தன் சீஷர்களிடம் "நீங்கள் என்னை யார் என்று நினைக்கிறீர்கள்?" என்று கேட்டபோது, "நீர் மேசியா, ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து" என்று பேதுரு கூறுகிறார். ஏனென்றால், "பரலோகத்தின் திறவுகோல்களை நான் உனக்குத் தருவேன்" என்று இயேசு கூறியிருந்ததை அவர் அறிந்திருந்தார். தேவ ராஜ்யத்தை பற்றிய காரியங்களை அறிந்துகொள்ள அனுமதியும் பெற்றார். இன்றைக்கும் இயேசுவை  ஜீவனுள்ள தேவனென்று நாம் அறியும்போது நமக்கும் பரலோகத்தின் திறவுகோல் கொடுக்கப்படுகிறது.  அதன்மூலம் ஜீவனுள்ள தேவனுடைய காரியங்களை நாம் அறிந்துகொள்ளுகிறோம். அவருடன் நாம் இணைந்துகொள்ளுகிறோம்.

இரண்டாவதாக, இந்த திறவுகோல் நமக்கு அதிகாரத்தைக் கொடுக்கிறது. எதற்கான அதிகாரம்? அதே வசனத்திலே, "பூலோகத்தில் நீ கட்டுகிறது எதுவோ, அது பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும், பூலோகத்திலே நீ கட்டவிழ்ப்பது எதுவோ அது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும்" என்று கூறப்பட்டுள்ளது. ஆகவே, நமக்கு எதிராக எழும்பும் அனைத்தையும் கட்டும்படி தேவன் நமக்கு அதிகாரம் கொடுக்கிறார். இயேசுவின் நாமத்தில் நாம் எவைகளையெல்லாம் கேட்கிறோமோ, அவைகளையெல்லாம் தருவார். பரலோகத்தின் திறவுகோலை நாம் பெற்றிருக்கும்போது நமக்கு அதிகாரம் இருக்கும். அந்த அதிகாரத்தோடு நாம் அவரிடத்தில் கேட்கும்போது, அவர் நமக்கு எல்லாவற்றையும் செய்து முடிப்பார்.

மூன்றாவதாக, பரலோகத்தின் திறவுகோல் நமக்கு வெளிப்பாட்டை தருகிறது. நமது மாமிச சிந்தையின்படி பார்த்தால், எல்லாமே நமக்கு முடியாதவை போன்றுதான் தெரியும். எதாவது ஓர் சூழ்நிலையில் நாம் சிக்கிக்கொள்ளும்போது, அடுத்து என்ன செய்யலாம் என்று தெரியாத பட்சத்தில் மனம் தளர்ந்துவிடுகிறோம். ஆனால் நாம் பரலோகத்தின் திறவுகோலை கொண்டிருக்கும்போது அல்லது தேவனோடு இணைந்திருக்கும்போது, அவர் நமக்கு தெய்வீக வெளிப்பாட்டை தருவார். பேதுரு இயேசுவை மேசியா என்று அறிந்திருந்தான். அது அவனுடைய சுயத்தினால் அல்ல, பரலோக தேவனின்  தெய்வீக வெளிப்பாட்டினால்.

எவ்வாறு நாம் இந்த திறவுகோலை பெற்றுக்கொள்ளலாம்? தேவனை நம்பி, அவரைப் பற்றிக்கொண்டு, அவருடன் இணைந்துகொள்வதாலேயே ஆகும். தேவனோடுள்ள உங்கள் ஐக்கியத்தில் உண்மையுள்ளவர்களாக இருங்கள். உங்கள் வாழ்க்கையில் பரிசுத்தத்துடனும், நீதியுடனும் நடந்துகொள்ளுங்கள். தேவனின் கட்டளைகளை கைக்கொள்ளுங்கள். அப்போது அவர் உங்களுக்கு பரலோகத்தின் திறவுகோலைத் தருவார். உங்கள் வாழ்வில் என்ன நடக்கப்போகிறது என்று அறிந்துகொள்ள நீங்கள் ஆர்வமாயிருக்கிறீர்களா? அப்படியென்றால், உங்களுக்கு இந்த திறவுகோல் நிச்சயம் தேவை. நீங்கள் அதை பெற்றிருக்கும்போது, தேவன் உங்களுக்கு எல்லாவற்றையும் வெளிப்படுத்துவார். உங்கள் வாழ்க்கையைப்பற்றி மட்டுமல்ல, பரலோக இராஜ்ஜியத்தைக் குறித்து அறிந்துகொள்ளும் அனுமதியும், அதிகாரமும், வெளிப்பாடும் உங்களுக்கு கிடைக்கும். நீங்கள் பிறருக்கு சுவிசேஷத்தை அறிவிப்பதன் மூலம் பரலோகத்தின் கதவுகளைத் திறக்கும் அதிகாரத்தையும் தேவன் உங்களுக்கு கொடுப்பார். என்ன ஒரு வல்லமையான வெகுமதி!

ஜெபம்:
அன்பின் தேவனே, பரலோக திருவுகோலின் வாக்குத்தத்தத்திற்காக உமக்கு நன்றி. இயேசுவே மேசியா, ஜீவனுள்ள தேவனின் குமாரன் என்று நான் விசுவசிக்கிறேன். உமது பரிசுத்த பாதைக்குள்ளும், உம்முடைய பிரசன்னதிற்குள்ளும் என்னை அனுமதியும். தீயதை கட்டவும், உம் சித்தத்தை கட்டவிழ்க்கவும் எனக்கு அதிகாரம் தாரும். நான் ஜெபிக்கும் ஒவ்வொரு வார்த்தையும் தெய்வீக வல்லமையுள்ளதாக இருக்கட்டும். உமது ஆவியின்படி நான் மேலானவைகளை அறிந்துகொள்ள எனக்கு உதவி செய்யும். எனக்கு தெய்வீக வெளிப்பாட்டை தந்தருளும். பரலோகத்தை பிறருக்காக நான் திறந்து கொடுக்கவும், உமது நீதிக்குள் பலரை கொண்டு வரவும் எனக்கு உதவி செய்யும். உண்மையோடும், பரிசுத்தத்தோடும், விசுவாசத்தோடும் உம்மோடு இணைந்துகொள்ள எனக்கு உதவி செய்யும். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.