வேதம், "ஜீவஊற்று உம்மிடத்தில் இருக்கிறது; உம்முடைய வெளிச்சத்திலே வெளிச்சம் காண்கிறோம்" (சங்கீதம் 36:9) என்று கூறுகிறது. தேவன்தாமே சகல ஆசீர்வாதங்களின் உறைவிடமாக, ஜீவனை அருளுகிறவராக இருக்கிறார். அவராலன்றி, உண்மையான சந்தோஷமோ, சமாதானமோ கிடைக்காது. இயேசு, "நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்" (யோவான் 10:10) என்று இதை உறுதிப்படுத்துகிறார். அவர், சரீர பிரகாரமான வாழ்க்கையை மாத்திரமல்ல, ஐசுவரியத்தையும் திருப்தியையும் தேவ சமுகத்திலிருந்து புரண்டு வரும் நித்திய ஜீவனையும் தருகிறார். அவர் ஜீவ அப்பமாவார்; வழியும் சத்தியமும் ஜீவனுமாவார் (யோவான் 6:35; 14:6). நம் ஆத்துமாவில் அவரை வைத்திருக்கும்போது, மெய்யான ஜீவனை அனுபவிப்போம். உலகம் முழுவதையும் ஒரு மனுஷன் ஆதாயம் பண்ணினாலும், அவரில்லாவிட்டால் தன் ஆத்துமாவை அவன் இழந்துபோவான் (மாற்கு 8:36). அன்பானவர்களே, இயேசுவால் மாத்திரமே உங்கள் இருதயத்தின் தாகத்தை தம் ஜீவத்தண்ணீரால் தீர்க்க முடியும்.
ஆகவேதான் இயேசு, "நான் அவனுக்குக் கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்தியஜீவகாலமாய் ஊறுகிற நீரூற்றாயிருக்கும்" (யோவான் 4:14) என்று கூறினார். ஊற்று நீரானது பீறிட்டு தொடர்ந்து பாய்வதுபோல, நமக்குள் இருக்கும் கிறிஸ்துவின் ஜீவன், நிரம்பி வழியும் சந்தோஷத்தையும் சமாதானத்தையும் நமக்குக் கொடுக்கும். இயேசுவல்லாமல், மக்கள் பாவத்தின் பாரத்தினால் நசுக்கப்படுகிறார்கள்; நாம் ஆவியினாலே மறுபடியும் பிறக்கும்போது, தேவனுடைய ராஜ்யத்திற்குள் பிரவேசிக்கிறோம் (யோவான் 3:3,8). பரிசுத்த ஆவி நம்மை தேவ சமுகத்தால் நிரப்புகிறது; அவரது அன்பினால் நிரம்பி வழியும்படி செய்கிறது. அன்பானவர்களே, நீங்கள் கேட்டுகொண்டால் மட்டும் இன்றைக்கு தம் ஆவியினால் உங்களை நிரப்புவதற்கு ஆண்டவர் ஆயத்தமாயிருக்கிறார். தங்கள் தீவட்டிகளில் எண்ணெய் நிரப்பி ஆயத்தமாக இருந்த புத்தியுள்ள ஐந்து கன்னிகைகளைக் குறித்து நமக்கு நினைவுறுத்துகிறது. எண்ணெய், பரிசுத்த ஆவியைக் குறிக்கிறது. பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டவர்கள் மாத்திரமே மணவாளனை எதிர்கொள்ள முடியும். அதேபோல, நீங்களும் நானும், இயேசு மறுபடியும் வரும்போது அவரை சந்திக்க ஆவியினால் நிரப்பப்பட்டிருக்கவேண்டும்.
ஆகவே, நீங்கள் இருக்கும்வண்ணமாகவே வாருங்கள்.
நீங்கள் தகுதியற்றவராக உங்களை உணரலாம்; பாவத்தோடு போராடிக்கொண்டிருக்கலாம்; ஆனால், இயேசு உங்களுக்காக காத்திருக்கிறார். கடைசி நாட்களில் அவர், "நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன்" (யோவேல் 2:28) என்று வாக்குப்பண்ணுகிறார். அவர் மனுஷரைப் பார்க்கிறவர் அல்ல; அவரை நோக்கிக் கூப்பிடும் யாரானாலும் அவரது ஆவியைப் பெற்றுக்கொள்ளலாம். இன்றே இரட்சணிய நாள். தாமதிக்காதீர்கள். "ஆண்டவரே, என்னை உம் ஆவியினால் நிரப்பும். உம் வருகைக்கு என்னை ஆயத்தமாக்கும்," என்று கூப்பிடுங்கள். அவர் ஜீவனின் ஊற்று, ஜீவ அப்பம். அவரே ஜீவனுமாயிருக்கிறார். உங்கள் இருதயத்தை நீங்கள் திறக்கும்போது, அவர் உள்ளே பிரவேசித்து, இவ்வுலகில் மட்டுமல்ல, நித்தியமாகவும் உங்கள் வாழ்க்கையில் ஜீவன் நிரம்பி வழியும்படி செய்வார். அன்பானவர்களே, நீங்கள் சந்தோஷம் பொங்கும்படி, முழுவதுமாக நிரப்பப்பட்டு, மணவாளன் வரும்போது அவரை சந்திக்க ஆயத்தமாகலாம்.
ஜெபம்:
பரம தகப்பனே, ஜீவ ஊற்றாக இருப்பதால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். ஆண்டவரே, இன்றைக்கு என் ஆத்துமாவை போஷிக்கும் ஜீவ அப்பமாக நீர் இருக்கிறீர். என்னை உம் பரிசுத்த ஆவியினால் நிரப்பி, புது மனுஷனாக்குவீராக / மனுஷியாக்குவீராக. என் பாவங்களை கழுவி, சுத்த இருதயத்தை எனக்குத் தாரும். நீர் மறுபடியும் வரும்போது ஆயத்தமாக இருக்க எனக்கு உதவி செய்யும். என் வாழ்க்கையிலிருந்து பாவ பாரத்தை அகற்றிப்போடும். உம் பிரசன்னத்தின் சந்தோஷத்தாலும் சமாதானத்தாலும் நான் நிரம்பி வழியட்டும். என் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் உம் ஆவியை தந்து ஆசீர்வதித்தருளும். உம்மை முகமுகமாய் பார்க்கும்வரைக்கும் உண்மையுள்ளவனா(ளா)க இருக்கும்படி என்னை காத்தருளவேண்டுமென்று இயேசுவின் வல்ல நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.