எனக்கு அருமையான தேவ பிள்ளையே, நம்முடைய ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன். இன்றைக்கு, "இதோ, நான் மாம்சமான யாவருக்கும் தேவனாகிய கர்த்தர்; என்னாலே செய்யக்கூடாத அதிசயமானகாரியம் ஒன்றுண்டோ?" (எரேமியா 32:27) என்ற வாக்குத்தத்தத்தை ஆண்டவர் தருகிறார். ஆம், நம்மோடு அவர் பேசுகிறார். தம்மால் கூடாத காரியம் ஒன்றுமில்லை என்று அவர் நினைவுபடுத்துகிறார். ஆனால், யாருக்கு அற்புதமான, வல்லமையான ஆண்டவரின் கரத்தை அனுபவிக்கும் சிலாக்கியம் கிடைக்கும்? "கர்த்தர்மேல் நம்பிக்கைவைத்து, கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான்." இயேசுவின்மேல் முழு நம்பிக்கை வைக்கும்போது என்ன நடக்கும்? "அவன் தண்ணீரண்டையிலே நாட்டப்பட்டதும், கால்வாய் ஓரமாகத் தன் வேர்களை விடுகிறதும், உஷ்ணம் வருகிறதைக் காணாமல் இலை பச்சையாயிருக்கிறதும், மழைத்தாழ்ச்சியான வருஷத்திலும் வருத்தமின்றித் தப்பாமல் கனிகொடுக்கிறதுமான மரத்தைப்போலிருப்பான்" (எரேமியா 17:7,8) என்று வேதம் பதில் கூறுகிறது. அது செழிப்பான, பசுமையான, அழகான இடமாக மாறும். அப்படிப்பட்ட நிலம் பார்ப்பதற்கு அருமையாக இருக்குமல்லவா? அவ்வாறே நம் வாழ்க்கையும் ஆண்டவரால் பூரணமாக ஆசீர்வதிக்கப்படும்.
வேதாகமத்தில் ஆபிரகாம், யோபு, தானியேல் என்று வியக்கத்தக்க ஆசீர்வாதங்களை பெற்ற அநேகரைக் குறித்து வாசிக்கிறோம். அவர்கள் ஏன் அப்படி ஆசீர்வதிக்கப்பட்டார்கள்? ஏனெனில் அவர்கள் கர்த்தரை உண்மையாய் தேடினார்கள். தாவீதின் வாழ்க்கையைப் பாருங்கள். அவன், "கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்" என்று அறிவிக்கிறான். காலையும் மாலையும், இரவும் பகலும் அவன் முழு உள்ளத்தோடு ஆண்டவரை தேடினான். தேவனை முழுவதும் நம்பியதால் அவன் வாழ்க்கை செழிப்பான, ஏற்ற காலத்தில் கனி தரும் மரமாக விளங்கியது. தேவனை பற்றிக்கொள்ளும்போது நீங்களும் அவ்வாறு ஆசீர்வதிக்கப்படுவீர்கள். "கர்த்தரைத் தெய்வமாகக் கொண்டிருக்கிற ஜனம் பாக்கியமுள்ளது" (சங்கீதம் 144:15) என்று வேதம் கூறுகிறது. "என் பெலனாகிய கர்த்தாவே, உம்மில் அன்புகூருவேன். கர்த்தர் என் கன்மலையும், என் கோட்டையும், என் இரட்சகரும், என் தேவனும், நான் நம்பியிருக்கிற என் துருகமும், என் கேடகமும், என் இரட்சணியக் கொம்பும், என் உயர்ந்த அடைக்கலமுமாயிருக்கிறார்" (சங்கீதம் 18:1,2) என்று தாவீது, தேவனுக்கும் தனக்கும் இடையே உள்ள நெருக்கத்தை வெளிப்படுத்துகிறான்.
தாவீது, ஆடு மேய்க்கும் தாழ்மையான சிறுவனாக இருந்தான். ஆனால், அவன் கர்த்தரை உண்மையாய் தேடினதால் அவர் அவனை ராஜாவாக உயர்த்தினார். அல்லேலூயா! அதே தேவன் இன்றும் ஜீவிக்கிறார். அவரை நோக்கிப் பாருங்கள். இறுகப் பற்றிக்கொள்ளுங்கள். முழு இருதயத்தோடும் அவரை நம்புங்கள்; அப்போது நீங்கள் ஆசீர்வதிக்கப்படுவீர்கள்.
ஜெபம்:
அன்புள்ள பரம தகப்பனே, மாம்சமான யாவருக்கும் நீர் கர்த்தர் என்பதை அறிந்து, முழு இருதயத்தோடு நம்பி உம்மண்டை வருகிறேன். உம்மால் கூடாத காரியம் ஒன்றுமில்லை. நீர் தாவீதை, ஆபிரகாமை, யோபுவை ஆசீர்வதித்ததுபோல, என் வாழ்க்கையை உம் கரத்தில் வைத்திருக்கிறீர்; அதை நீர்க்கால்களின் ஓரமாக நடப்பட்ட கனி தரும் உறுதியான மரத்தைப்போலாக்குவீர் என்று விசுவாசிக்கிறேன். தினமும் உம்மை தேடவும், உம் வழிகளில் நடக்கவும் எல்லா காலமும் உம்மை பற்றிக்கொள்ளவும் எனக்குக் கற்றுத்தாரும். என் கன்மலையாக, கோட்டையாக, என்னை இரட்சிக்கிறவராக நீரே இருந்தருளும். உம்முடைய வேளையை, உம்முடைய வல்லமையை, உம்முடைய வாக்குத்தத்தங்களை நான் நம்புகிறேன். உம்முடைய ஆசீர்வாதத்தின் நேர்த்தியினிமித்தம் என் வாழ்க்கை பிரகாசிக்கட்டும் என்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.