அன்பானவர்களே, இன்று, "உனக்கு விரோதமாய் எழும்பும் உன் சத்துருக்களைக் கர்த்தர் உனக்கு முன்பாக முறிய அடிக்கப்படும்படி ஒப்புக்கொடுப்பார்; ஒரு வழியாய் உனக்கு எதிராகப் புறப்பட்டு வருவார்கள்; ஏழு வழியாய் உனக்கு முன்பாக ஓடிப்போவார்கள்" (உபாகமம் 28:7) என்ற வசனத்தைத் தியானிப்போம். தேவன் எவ்வளவு ஆச்சரியமான வாக்குத்தத்தத்தை அருளிச்செய்திருக்கிறார்! நம் தேவனின் வல்லமையும் பாதுகாப்பும் அப்படிப்பட்டதாகும். கர்த்தர், தாம் நம்முடன் இருப்பதால் நம் சத்துருக்களின் உள்ளங்களில் பயம் உண்டாகப் பண்ணுகிறார். உலகத்தில் இருப்பவனிலும் நமக்குள் இருப்பவர் பெரியவர். கர்த்தர், "நான் உன் சத்துருக்களுக்குச் சத்துருவாயும், உன் விரோதிகளுக்கு விரோதியாயும் இருப்பேன்" (யாத்திராகமம் 23:22) என்று கூறுகிறார். இந்த நிச்சயம் எவ்வளவு ஆறுதலாயிருக்கிறது! தேவன்தாமே நம் பட்சத்தில் நின்று நம் யுத்தங்களை நடத்துகிறார். அவரது பலத்த புயம் நம்மை பாதுகாப்பதால் அவரது அனுமதியில்லாமல் ஒருவரும் நம்மை தொட முடியாது.

யூதாவுக்கு விரோதமாக பெரிய சேனை வந்தபோது, யோசபாத் ராஜா பயந்தான். கர்த்தர், தம் ஊழியனைக் கொண்டு, "நீங்கள் அந்த ஏராளமான கூட்டத்திற்குப் பயப்படாமலும் கலங்காமலும் இருங்கள்; இந்த யுத்தம் உங்களுடையதல்ல, தேவனுடையது" (2 நாளாகமம் 20:15) என்று உரைத்தார். பலவேளைகளில் நம்மைச் சுற்றி எழும் சவால்களால் நாம் கலங்குகிறோம்; உபத்திரவப்படுகிறோம். தேவன் நம்மோடு இருப்பதை மறந்து பயந்து கவலைப்படுகிறோம். ஆனால், தேவன் நம்மோடிருக்கும்போது, யார் நமக்கு விரோதமாய் இருக்கக்கூடும்? கர்த்தர் நமக்காக யுத்தம் செய்வதால் நாம் ஒருபோதும் நம்முடைய போராட்டங்களை தனியே செய்வதில்லை.

நாக்பூரில் ஒரு கூட்டத்தில் நான் ஊழியம் செய்தது எனக்கு நினைவுக்கு வருகிறது. தேவனுடைய வார்த்தை பகிர்ந்துகொள்ளப்பட்டபோது, பிசாசுகள் வெளிவரத் தொடங்கின. அசுத்த ஆவிகளால் பிடிக்கப்பட்டிருந்த அநேக தாய்மார் சத்தமாக கத்தத் தொடங்கினார்கள். அவர்கள் படும் பாடுகளைப் பார்த்தபோது என் இருதயம் மனதுருக்கத்தால் நிறைந்தது. இயேசுவின் நாமத்தால் நான் அந்த அசுத்த ஆவிகளை கடிந்துகொண்டபோது, அவை உடனே புறப்பட்டுப் போயின. அவர்கள் விடுதலை பெற்றதைக் கண்டது மகிமையான சாட்சியாக இருந்தது! தேவன் அங்கே வந்தார்; அவரது வல்லமை அவர்களை விடுவித்தது. அன்பானவர்களே, அதே தேவன் இன்று உங்களோடிருக்கிறார். ஒன்றும் உங்களை மேற்கொள்ள முடியாது. கிறிஸ்துவின் அதிகாரத்தோடு நீங்கள் நிற்கும்போது, எல்லா அசுத்த வல்லமையும் ஓடிப்போகும்.

இன்னொரு வல்லமையான உதாரணத்தையும் வேதத்தில் வாசிக்கிறோம் (மாற்கு 5:6). இயேசு தூரத்தில் வந்தபோது, பிசாசு பிடித்திருந்த மனுஷன், ஓடிப்போய் அவருக்கு முன்னாக காலில் விழுந்தான். பிசாசுகள், "இயேசுவே, உன்னதமான தேவனுடைய குமாரனே, உமக்கு என்ன வேண்டும்?" என்று கூச்சலிட்டன. இயேசு, அந்த அசுத்த ஆவிகளை வெளியே வரும்படி கட்டளையிட்டதும், அவை உடனே கீழ்ப்படிந்தன. இந்த மனுஷன் வெகுகாலம் கல்லறைகளில் வசித்து வந்தான்; கணக்கற்ற பிசாசுகள் பிடித்திருந்த அவனை எந்தச் சங்கிலியாலும் கட்ட முடியாதிருந்தது. ஆனாலும் இயேசு கூறிய ஒரே வார்த்தை பூரண விடுதலையை அளித்தது. அதுவே நம் இரட்சகரின் அதிகாரமாகும். ஆகவே, அன்பானவர்களே, சத்துருவுக்கோ, இருளின் அதிகாரங்களுக்கோ பயப்படாதிருங்கள். வேதம், "பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள்; அவன் உங்களை விட்டு ஓடிப்போவான்," என்று கூறுகிறது. பிசாசை எதிர்ப்பதற்கு முன்னர், நாம் முதலில் தேவனுக்கு நம்மை அர்ப்பணிக்கவேண்டும். நாம் அவருடன் நெருங்கி ஜீவித்தால், அவரது வல்லமை நம் வாயிலாக கிரியை செய்யும். கர்த்தர் இப்போதும் உங்களுக்காக யுத்தம் செய்கிறார். எல்லா சத்துருவும், எல்லா ஒடுக்குதலும், இருளின் எல்லா தாக்குதலும் அவரது வல்லமையான நாமத்தின் முன்பு பணிந்துகொள்ளவேண்டும். அவரை நம்புங்கள்; விசுவாசத்தில் உறுதியாக நில்லுங்கள்; யுத்தம் கர்த்தருடையது.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, என்னை தற்காக்கிறவராகவும், என் அடைக்கலமாகவும் இருப்பதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். எனக்கு எதிராக எழும்பும் சத்துருக்கள் தோற்கடிக்கப்பட்டு, என் முன்னே ஓடுவார்கள் என்று வாக்குப்பண்ணியிருக்கிறீர். என் வாழ்க்கைக்கு, குடும்பத்துக்கு, ஆரோக்கியத்துக்கு, எதிர்காலத்துக்கு விரோதமாக எழும்பும் எல்லா போராட்டங்களிலும் என்னோடு நிற்பீராக. சத்துருவின் சகல ஒடுக்குதலில் இருந்தும், பயத்தின், கலக்கத்தின், கட்டுகளின் சங்கிகளிலிருந்தும் என்னை விடுவிப்பீராக. வேதனை, வியாதி, குழப்பம், பிரிவினையை உண்டாக்கும் எல்லா அசுத்த சக்திகளும் இயேசுவின் நாமத்தில் அகன்று போகட்டும். உம் சமாதானத்தால், சமுகத்தால், பாதுகாப்பால் என் வீட்டை நிறைத்திடும். உம்மையே முழுவதுமாக நம்பவும், யுத்தம் உம்முடையது என்பதை அறியவும் என் விசுவாசத்தை பெலப்படுத்தும். உம் மகத்தான வல்லமையால் எனக்கு வெற்றியையும் விடுதலையையும் அளிப்பதற்காக உம்மை ஸ்தோத்திரித்து இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.