அன்பானவர்களே, கர்த்தர், "என் ஆவியை உங்களுக்குள் வைப்பேன்; நீங்கள் உயிரடைவீர்கள்" (எசேக்கியேல் 37:14) என்று கூறுகிறார். எசேக்கியேல் தீர்க்கதரிசி, உலர்ந்த எலும்புகள் கிடந்த பள்ளத்தாக்குக்குள் நடத்தப்பட்டான். அந்நிய தேசத்தில் இருந்த இஸ்ரவேலரின் நம்பிக்கையற்ற நிலையை அந்த தரிசனம் வெளிப்படுத்தியது. அவர்கள், "எங்கள் எலும்புகள் உலர்ந்துபோயிற்று; எங்கள் நம்பிக்கை அற்றுப்போயிற்று; நாங்கள் அறுப்புண்டுபோகிறோம்" (எசேக்கியேல் 37:11) என்று முறையிட்டார்கள். நீங்களும் உங்கள் வாழ்க்கையை வெறுமை சூழ்ந்திருப்பதாக, பெலனற்றுப் போய்விட்டதாக, எதிர்காலம் நிச்சயமில்லாததாக உணரலாம். ஒருவேளை, "என் வாழ்க்கையில் எல்லாமே செத்துப்போய் விட்டது. என்னால் முன்னேறிச்செல்ல இயலவில்லை. எப்போது வெளிச்சத்தைக் காண்பேன்?" என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், இஸ்ரவேலுக்கு ஜீவனையும் சீர்ப்படுத்தலையும் வாக்குப்பண்ணுகிற கர்த்தர் இன்று உங்களோடு பேசுகிறார். அவரால் மாத்திரமே ஜீவனற்ற இடங்களில், தம் ஜீவனை ஊதி சரீர பிரகாரமாகவும் ஆவிக்குரிய பிரகாரமாகவும் மறுபடியும் ஜீவன் பெறும்படி செய்ய முடியும்.
பெங்களூருவை சேர்ந்த அமுதா என்ற அன்பு சகோதரி, ஏழு ஆண்டுகள் கடும் இரத்தப்போக்கு காரணமாக மிகுந்த வேதனைப்பட்டார்கள். மருத்துவர்கள், இறுதியாக கர்ப்பப்பையை அகற்றவேண்டும் என்று கூறினார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக அவர்கள் கணவர் அவர்களைவிட்டு சென்றுவிட்டார்; பொருளாதார பிரச்னைகளையும் சரீரத்தில் பெலவீனத்தையும் அவர்கள் எதிர்கொண்டார்கள். நம்பிக்கையை முற்றிலும் இழந்தார்கள். ஒருநாள், இயேசு அழைக்கிறார் ஜெபக் கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டார்கள். அவர்கள் உபவாசித்து ஜெபித்தபோது, பிரகாசமான ஒளியை கண்டார்கள்; "நீ வியாதியாயிருக்கும்போது, நான் உன்னை குணமாக்கமாட்டேனா?" என்று கர்த்தர் பேசுவதும் கேட்டது. உடன்தானே அனைத்து வியாதியும் சரீரத்தில் இருந்த அடைப்புகளும் மறைந்தன. அறுவை சிகிச்சையில்லாமல் தேவன் அவர்களுக்கு பூரண சுகம் கொடுத்தார். விரைவிலேயே அவர்கள் கணவர் திரும்ப வந்தார். இன்றைக்கு மகிழ்ச்சியான, ஆசீர்வாதமான குடும்பமாக வாழ்ந்து வருகிறார்கள். உலர்ந்த எலும்புகளுக்குள் ஜீவனை ஊதிய அதே தேவன், "என் ஆவியை உங்களுக்குள் வைப்பேன்; நீங்கள் உயிரடைவீர்கள்" என்ற வேதவாக்கியத்திற்கேற்ப அவர்களுக்குள்ளும் ஜீவனை ஊதினார்.
பிரியமானவர்களே, உங்களுக்கும் இதையே செய்யமாட்டாரா? உங்கள் உடல்நலம், குடும்பம், பொருளாதாரம், ஆத்துமா ஆகியவை செத்துப்போன எந்தச் சூழ்நிலையிலும் தம் ஆவியை ஊதுவதற்கு தேவன் ஆயத்தமாயிருக்கிறார். கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே ஜீவனும் விடுதலையும் உண்டு. நாம் தோற்றுப்போகாமல், நமக்கு பரிபூரண ஜீவனை தருவதற்காகவே இயேசு வந்தார். உங்கள் வாழ்க்கையில் ஜீவனற்று காணப்படும் எல்லா பகுதியையும் அவர் தம் வல்லமையால் உயிர்ப்பிப்பார் என்று விசுவாசியுங்கள். அவரால் உங்கள் சரீரத்தை குணப்படுத்தவும், உடைந்த உறவுகளைச் சீர்ப்படுத்தவும், உங்கள் உள்ளத்தில் சமாதானத்தை தரவும், பயத்திலிருந்து உங்களை தூக்கியெடுக்கவும் முடியும். மனந்தளராதிருங்கள். ஆண்டவர், இரட்டிப்பாய் உங்களைச் சீர்ப்படுத்த ஆயத்தமாக, உங்கள் பக்கத்தில் நிற்கிறார்.
ஜெபம்:
அன்பின் தகப்பனே, நீர் அருளியுள்ள வாக்குத்தத்தத்திற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். ஆண்டவரே, ஜீவன் தரும் உம்முடைய ஆவியை இன்று எனக்குள் ஊதும். என் வாழ்வில் காணப்படும் செத்துப்போன சூழ்நிலைகள் எல்லாவற்றையும் உயிர்ப்பியும். என் உடலை, சிந்தையை, ஆவியை உம்முடைய வல்லமையால் குணமாக்கும். நான் இழந்த நம்பிக்கையை, சமாதானத்தை, சந்தோஷத்தை, பெலனை திரும்ப தாரும். ஆண்டவர் இயேசுவே, என் குடும்பத்தில், உறவுகளில் ஜீவனை அளிப்பீராக. எல்லா வியாதியும், கட்டுகளும் உம்முடைய நாமத்தில் அழிக்கப்படுவதாக. பரிசுத்த ஆவியானவரே உம்முடைய பிரசன்னத்தால் என்னை நிரப்பி, விடுவிப்பீராக. ஆண்டவரே, உயிர்த்தெழுதலின் வல்லமை எனக்குள் கிரியை செய்வதற்காக உம்மை ஸ்தோத்திரித்து இயேசுவின் வல்லமையான நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.