அன்பான சகோதரரே / சகோதரியே, இன்றைக்கு, "அவர் தமது வசனத்தை அனுப்பி அவர்களைக் குணமாக்கி, அவர்களை அழிவுக்குத் தப்புவிக்கிறார்" (சங்கீதம் 107:20) என்ற அருமையான வசனத்தைத் தியானிக்கப்போகிறோம். ஆரம்பத்தில், தேவன் இந்த உலகை சிருஷ்டித்தபோது, "வெளிச்சம் உண்டாகக்கடவது" என்று கூறினார். அவரே மனுஷர்களையும், மிருகங்களையும், இந்த உலகத்தில் உள்ளவை எல்லாவற்றையும் உண்டாக்கினார். அவரது வார்த்தை, எல்லாவற்றையும் உண்டாக்கும் வல்லமை கொண்டது.
வேதம், "அந்த வார்த்தை தேவனாயிருந்தது" (யோவான் 1:1) என்று கூறுகிறது. வார்த்தையே இயேசுவாக இருக்கிறது. நாம் அவரது வார்த்தையை விசுவாசிக்கும்போது சுகம் பெறுகிறோம். இயேசு நடந்துகொண்டிருந்தபோது, நூற்றுக்கு அதிபதி ஒருவன் அவரிடம் வந்து, "என் வேலைக்காரன் வியாதிப்பட்டிருக்கிறான். தயவுசெய்து அவனை சுகமாக்குவீரா?" என்று கேட்டான். இயேசு, "நான் உன் வீட்டுக்கு வருகிறேன்," என்று கூறினார். ஆனால், அந்த நூற்றுக்கு அதிபதி, "ஆண்டவரே, நீர் என் வீட்டுக்கு வருவதற்கு நான் பாத்திரன் அல்ல. ஒரே ஒரு வார்த்தை மாத்திரம் சொல்லும். என் வேலைக்காரன் சுகமாவான்," என்று கூறினான். ஆண்டவரின் வார்த்தைக்கு அவ்வளவு வல்லமை உண்டு. ஆண்டவர், "இந்நேரமே உன் வேலைக்காரன் சுகமாவானாக," என்று கூறினார்; அதே தருணத்திலேயே அவன் சுகம் பெற்றான். "மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்." கடுங்காற்று வீசியபோது, இயேசு, "இரையாதே, அமைதலாயிரு" என்று கூறினார். புயல் அமர்ந்தது.
லாசரு மரித்தபோது, ஆண்டவர், "லாசருவே, வெளியே வா" என்று கூப்பிட்டார். இறந்தவன் உயிரோடு வந்தான். இரத்தப்போக்கினால் 12 வருடங்கள் அவதிப்பட்ட ஒரு பெண்மணி இயேசுவிடம் வந்தாள். இயேசு, "மகளே, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது" என்று கூறினார். அந்தப் பெண்மணி அதே தருணத்தில் குணமானாள். அவருடைய வார்த்தைக்கு அதிக வல்லமையுண்டு. இன்றும், உங்களைக் குணமாக்கும்படி அவரது வார்த்தை உங்கள்மேல் வருகிறது. ஒவ்வொரு செய்தியிலும் நாங்கள் ஒரு வார்த்தையைக் கொடுக்கிறோம். அது அற்புதங்களை நடப்பிக்கிறது.
ஒரு சகோதரர், "நீங்கள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையையும் என் டயரியில் எழுதி வைத்துக்கொள்கிறேன்," என்று கூறினார். ஒவ்வொரு முறை தேவனுடைய வார்த்தையை வாசிக்கும்போதும், ஆண்டவர் எனக்கு புதுப்பெலனை தருகிறார். தேவனுடைய வார்த்தை நமக்கு ஜீவனை அளிக்கிறது. இயேசு, "நான் உங்களுக்குச் சொல்லுகிற வசனங்கள் ஆவியாயும் ஜீவனாயும் இருக்கிறது" (யோவான் 6:63) என்று கூறுகிறார். தேவனுடைய வார்த்தை பாவ மரணத்திலிருந்து உங்களை உயிர்ப்பிப்பதாக. தேவனுடைய வார்த்தை வியாதியிலிருந்து உங்களை சுகப்படுத்தட்டும்; மறுபடியும் வாழ வைக்கட்டும். தேவன், இன்று தம் வார்த்தையினால் உங்களைப் பெலப்படுத்துவாராக.
ஜெபம்:
அன்புள்ள பரம தகப்பனே, ஜீவ வார்த்தை இன்று உம் பிள்ளைகள்மேல் வருவதாக. எல்லா வியாதியையும் குணமாக்கும்; எல்லா பெலவீனருக்கும் பெலனையும், தத்தளித்துக்கொண்டிருக்கிற அனைவருக்கும் ஜீவனையும் அளித்திடும். பாவத்தில் செத்துக்கொண்டிருக்கும் அனைவரையும் உம் வார்த்தை உயிர்ப்பிப்பதாக; இழந்த அனைத்தையும் திரும்ப அளித்திடுவதாக. உம் வல்ல நாமத்தினால் எல்லா வேதனையும் பெலவீனமும் நரம்பு பிரச்னையும் இரத்தத்தில் காணப்படும் குறைபாடும் புற்றுநோயும் சுகமாவதாக. உம் வார்த்தையினால் அவர்களை விசுவாசத்தை பெலப்படுத்தி, அவர்களை புது ஜீவனாலும் நம்பிக்கையாலும் தைரியத்தாலும் நிரப்புவீராக. அவர்கள் வாழ்வில் உம் வார்த்தை அற்புதங்களை கொண்டு வரட்டும்; உம் மகிமை வெளிப்படுவதாக. உம் வார்த்தையை அனுப்பி எங்களை குணப்படுத்துவதற்காகவும், சீர்ப்படுத்துவதற்காகவும் உம்மை ஸ்தோத்திரித்து இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


