பிரியமானவர்களே, "நீதிமானுக்கும் துன்மார்க்கனுக்கும்...இருக்கிற வித்தியாசத்தைத் திரும்பவும் காண்பீர்கள்" (மல்கியா 3:18) என்பதே இன்றைக்கான வாக்குத்தத்த வசனமாகும். நீங்கள் நீதிமானாக, நீதியுள்ள பெண்ணாக வாழ்கிறீர்களா? எவ்வளவோ சிரமங்களின் மத்தியிலும் நீதியாய் வாழ மிகவும் முயற்சி செய்கிறீர்களா? உங்களை மகா உயரங்களுக்கு உயர்த்துவதாக ஆண்டவர் வாக்குப்பண்ணுகிறார்.

வேதம், "நீதியையும் தயையையும் பின்பற்றுகிறவன் ஜீவனையும் நீதியையும் மகிமையையும் கண்டடைவான்" (நீதிமொழிகள் 21:21) என்று கூறுகிறது. ஆம், உங்கள் நீதியினிமித்தம் கர்த்தர் இன்றைக்கு உங்கள் வாழ்க்கையை செழிப்பாக்குவார். நீங்கள் செழிக்கும்போது, உங்கள் வாழ்க்கைக்கும் நீதியாய் வாழாதவர்களின் வாழ்க்கைக்கும் உள்ள வித்தியாசத்தை உங்களால் காண இயலும். உங்கள் குடும்பத்திலுள்ளவர்களே, "அந்தப் பெண்மணி நீதியாய் வாழ்ந்தபடியால் தேவன் அவர்களை ஆசீர்வதித்திருக்கிறார்," என்று ஆச்சரியப்படுவார்கள்.

வேதம், "உள்ளவன் எவனோ அவனுக்குக் கொடுக்கப்படும், பரிபூரணமும் அடைவான்," (மத்தேயு 13:12) என்று கூறுகிறது. தேவன் உங்களுக்குக் கொடுத்திருக்கும் கொஞ்ச காரியங்களில் நீங்கள் நீதியாயிருக்கும்போது, அவர் மென்மேலும் கொடுத்து உங்களை ஆசீர்வதிப்பார். அன்பானவர்களே, ஆண்டவர் இதைத்தான் வாக்குப்பண்ணுகிறார். ஆண்டவர், செழிக்கப்பண்ணுவதுடன் உங்கள் குடும்பத்தினர், நண்பர்கள் முன்னிலையில் உங்களை கனமும் பண்ணுவார். நாம் அதையே விசுவாசித்து அவரிடமிருந்து பெற்றுக்கொள்வோம். நம் காலங்கள் உபத்திரவம், கண்ணீர், கவலை நிறைந்தவையாய் இருந்தது போதும்; மக்கள் நம்மை கீழாக தள்ளி, தாழ்வாக உணரவைத்ததுபோதும். இன்று ஆண்டவர் உங்களைக் கனம்பண்ண போகிறார்.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, உமக்கு முன்பாக நீதியுள்ள வாழ்க்கை வாழ விரும்புகிறேன். சிரமங்களின் மத்தியிலும் நீதியாய் நடக்க எனக்கு உதவும். வாழ்வில் பரிபூரணமும் செழிப்பும் கனமும் தருவதாக நீர் கொடுக்கும் ஜீவவாக்குத்தத்ததை விசுவாசிக்கிறேன். நீர் எனக்குக் கொடுத்திருக்கும் கொஞ்சமானவற்றை ஆசீர்வதித்தருளும். என் வாழ்க்கை எப்போதும் உம் நன்மைக்கும் உண்மைக்கும் சாட்சியாக அமையட்டும். என் கண்ணீரை சந்தோஷமாகவும் வெட்கத்தை கனமாகவும் மாற்றும். ஆண்டவரே, மற்றவர்கள் விழும்படி தள்ளிய இடங்களில் என்னை உயர்த்திடும். விசுவாசத்தில் உம் ஆசீர்வாதத்தை பெற்றுக்கொண்டு இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.