அன்பானவர்களே, இன்றைக்கு, "பறந்து காக்கிற பட்சிகளைப்போல, சேனைகளின் கர்த்தர் எருசலேமின்மேல் ஆதரவாக இருப்பார்; அவர் அதைக் காத்துத் தப்பப்பண்ணுவார்; அவர் கடந்துவந்து அதை விடுவிப்பார்" (ஏசாயா 31:5) என்ற அருமையான வாக்குத்தத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. இது எவ்வளவு ஆறுதலை தருகிறது! தேவன், தம் அன்பை தன் குஞ்சுகளை பாதுகாக்கும் தாய்ப்பறவையின் அன்போடு ஒப்பிடுகிறார். தாய்க் கழுகு தன் செட்டைகளை விரித்து தன் குஞ்சுகளை மூடுவதுபோல நம் ஆண்டவர் தம் தெய்வீக பாதுகாப்பினால் நம்மை மூடுகிறார். அவர் நம்மை ஆபத்துக்குள் விடமாட்டார். மாறாக எல்லா உபத்திரவங்களினின்றும் தூக்கியெடுப்பார். வேதம், கர்த்தர் நம்மை அவருக்குச் சொந்தமான ஜனங்களாக தெரிந்துகொண்டிருக்கிறார் என்று கூறுகிறது (உபாகமம் 14:2). இன்றும், நாம் அவருடைய பிள்ளைகளாக, தெரிந்துகொள்ளப்பட்டவர்களாக, அன்புகூரப்பட்டவர்களாக இருக்கிறோம். அவருடைய செட்டைகளின் கீழ் நாம் இருக்கும்போது எந்தத் தீங்கும் நம்மை தொட முடியாது.

ராஜாவாகிய தாவீது, "நான் துன்பத்தின் நடுவில் நடந்தாலும் நீர் என்னை உயிர்ப்பிப்பீர்; என் சத்துருக்களின் கோபத்துக்கு விரோதமாக உமது கையை நீட்டுவீர்; உமது வலதுகரம் என்னை இரட்சிக்கும்" (சங்கீதம் 138:7) என்று அழகாகக் கூறுகிறான். தேவனுடைய பாதுகாப்பு, ஒவ்வொருவருக்கும் எப்போதும் கிடைக்கக்கூடியது. ஒரு தாய், அழுகின்ற தன் பிள்ளையிடம் ஓடுவதுபோல, நாம் கர்த்தரை நோக்கிக் கூப்பிடும்போது அவர் ஓடி வருகிறார். கர்த்தர், "ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு; நான் உன்னை விடுவிப்பேன், நீ என்னை மகிமைப்படுத்துவாய்" (சங்கீதம் 50:15) என்று கூறுகிறார். இது அவசரத்துக்குக் கூப்பிடும் எண்ணாக இருக்கிறது - சங்கீதம் 50:15. வேதனையோ, பயமோ நம்மை சூழ்ந்துகொள்ளும்போது, நாம் இயேசுவின் நாமத்தைக் கூறி கூப்பிடலாம். அவர் பதிலளிப்பார், ஆறுதல் அளிப்பார், நம்மை விடுவிப்பார். அவரது சமுகம் அசைவாடி, நம்மைச் சூழ்ந்துகொண்டு சமாதானத்தை, பெலனை, சுகத்தை கொண்டு வரும்.

தேவனுடைய பாதுகாக்கும் அன்பை குறித்து வல்லமையான ஒரு சாட்சியை பகிர்ந்துகொள்கிறேன். சென்னை செங்குன்றத்தைச் சேர்ந்த சௌந்தரி என்ற சகோதரி, தன் சகோதரியின் ஒரு வயது பெண் குழந்தைக்கு புற்றுநோய் இருக்கிறது என்று ஜெபித்தார்கள். அந்தக் குழந்தையின் சரீரம் முழுவதும் புண்கள் நிறைந்திருந்தது. முடி உதிர்ந்துபோனது. குழந்தை தாங்கொணா வேதனையில் தவித்தது. அந்தக் குழந்தையின் தாய், உள்ளமுடைந்து, நம்பிக்கையிழந்துபோனார்கள். சகோதரி சௌந்தரி, அடையாறில் உள்ள ஜெப கோபுரத்திற்கு வந்தபோது, ஜெப வீரர்கள் கண்ணீரோடு ஜெபித்ததுடன், குழந்தையின்மேல் பூசும்படி ஜெப எண்ணெயையும் கொடுத்திருக்கிறார்கள். எண்ணெய் பூசி உண்மையாய் தொடர்ந்து ஜெபம் ஏறெடுக்கப்பட்டபோது, பெரிய அற்புதம் நடந்தது. அந்தக் குழந்தை பரிபூரண சுகம் பெற்றது. எல்லா புண்களும் மறைந்துபோயின; குழந்தையின் ஆரோக்கியம் திரும்பியது. தற்போது அவள் ஆரோக்கியமாக, சந்தோஷமாக இருக்கிறாள். உண்மையாகவே கர்த்தர் அவள்மீது தாய்ப் பறவையைப்போல அசைவாடி, முற்றிலுமாக சுகப்படுத்தியிருக்கிறார். அன்பானவர்களே, அதே ஆண்டவர் உங்கள்மேலும் அசைவாடிக்கொண்டிருக்கிறார். எந்த வியாதி அல்லது உபத்திரவம் உங்களுக்கு நேரிட்டாலும் அவர் உங்களை பாதுகாப்பார், குணமாக்குவார், விடுவிப்பார்.

ஜெபம்:
அன்பின் பரம தகப்பனே, பறவைகள் அசைவாடுவதுபோல நீர் என்னை பாதுகாப்பீர் என்ற வாக்குத்தத்தத்திற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். ஆண்டவரே, உம் வல்லமையான அன்பின் செட்டைகளால் என்னை மூடும். என்னை சுகப்படுத்தும். புற்றுநோய் போன்ற வேதனை தரும் வியாதிகளால் அவதிப்படுகிற அத்தனை பேரையும் குணமாக்கும். இயேசுவின் நாமத்தில் எல்லா கட்டிகளும் புண்களும் மறைவதாக. ஆண்டவரே, என் உடலை தொடும்; உம்முடைய சுகமளிக்கிற வல்லமை என் மூலமாக பாய்ந்து செல்லட்டும். எல்லா வேதனை, பெலவீனம், பயத்தையெல்லாம் அகற்றிப்போடும். உம்முடைய ஆறுதல் அளிக்கும் சமுகம் என்மீதும், உடைந்துபோய், களைத்துப்போய் இருக்கிற அனைவர்மேலும் தங்குவதாக. எல்லா உபத்திரவங்களினின்றும் என்னை விடுவித்து, பத்திரமாக தூக்கியெடுப்பீராக. என் வாழ்வில் நீர் செய்த அற்புதங்களுக்காக உம்மை மகிமைப்படுத்துகிறேன். என்னை உம் செட்டைகளின்கீழ் மூடி சுகமாய் காத்துக்கொள்வதற்காக உம்மை ஸ்தோத்திரித்து இயேசுவின் வல்ல நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.