எனக்கு அருமையானவர்களே, நம்முடைய ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் வல்லமையான நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன். இன்று (ஆகஸ்ட் 21) என் வாழ்வில் மகத்தான நாள். அன்றுதான் ஆண்டவர் இயேசு கிறிஸ்து அருளும் இரட்சிப்பைப் பெற்று, அவருக்குள் புதுச்சிருஷ்டியானேன். அன்றிலிருந்து தேவன் என் வாழ்க்கையை பூரணமாக ஆசீர்வதித்திருக்கிறார். இன்றைக்கு, "இதற்கு நம்மை ஆயத்தப்படுத்துகிறவர் தேவனே; ஆவியென்னும் அச்சாரத்தை நமக்குத் தந்தவரும் அவரே" (2 கொரிந்தியர் 5:5) என்ற அருமையான வாக்குத்தத்தத்தை தியானிப்போம். தேவன், நமக்கு தமது ஆவியென்னும் ஈவை தந்து ஆசீர்வதிக்க விரும்புகிறார். இதே சத்தியத்தை வேதம் மீண்டும் வலியுறுத்துகிறது (2 கொரிந்தியர் 1:22). "அவருக்குச் சொந்தமானவர்கள் அவருடைய மகிமைக்குப் புகழ்ச்சியாக மீட்கப்படுவார்கள் என்பதற்கு ஆவியானவர் நம்முடைய சுதந்தரத்தின் அச்சாரமாயிருக்கிறார்" (எபேசியர் 1:14) என்றும் வேதம் கூறுகிறது.
இந்த ஆசீர்வாதத்தை நாம் பெற்றுக்கொள்வது எப்படி? வேதம், "கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்" (லூக்கா 11:9) என்று தெளிவாகக் கூறுகிறது. 13ம் வசனம் அதை உறுதிப்படுத்துகிறது. ஆகவே, நாம் நம்மை பரிசுத்த ஆவியினால் நிரப்பும்படி, மறுபடியுமாய் நிரப்பும்படி ஊக்கமாக ஜெபிக்கவேண்டும். நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும் இந்த அபிஷேகத்தை பெற்றிருந்தார். அதன் பிறகே தேவ வல்லமையினால் நிறைந்தவராய், தம் ஊழியத்தைத் தொடங்கினார் (அப்போஸ்தலர் 10:30).
அவ்வண்ணமாகவே, இன்று ஆண்டவர் தம்முடைய பரிசுத்த ஆவியின் வல்லமையினால் உங்களை ஆசீர்வதிக்க வாஞ்சிக்கிறார். இந்த விலையேறப்பெற்ற ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ள நீங்கள் ஆயத்தமா? வேதம், கொர்நேலியு என்று ஒரு மனுஷனை குறித்து கூறுகிறது. அவன் யூதனல்ல. ஆனால், தேவனை தன் முழு இருதயத்தோடும் தேடினான். அன்பானவர்களே, அதுதான் ஆவிக்குரிய வெற்றியின் இரகசியம். ஆண்டவரை பின்பற்றுவதற்கு, அனுபவிப்பதற்கு நமக்கு ஆழமான ஆவல் இருக்குமானால் அவர் கிருபையாக பரலோக தரிசனத்தை நமக்கு தருகிறார். கொர்நேலியுவும் அதை வாஞ்சித்தான். அவன் தேவன்மேல் கொண்ட தாகத்தினிமித்தம், ஆண்டவர் தம் ஊழியனாகிய பேதுருவை அவன் வீட்டுக்கு அனுப்பினார்.
பேதுரு, கொர்நேலியுவுடனும் அவன் வீட்டாருடனும், அவன் நண்பர்களுடனும் பேசியபோது ஆண்டவர் தம் ஆவியை கூடியிருந்தவர்கள்மேல் ஊற்றினார். அவர்கள் எல்லோரும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டார்கள். இன்றும் அதே வாக்குத்தத்தம் உண்மையாயிருக்கிறது. கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும். நீங்களும் இந்த மகிமையான அனுபவத்தை தனியாக மட்டுமல்ல, குடும்பமாக சேர்ந்தும் பெற முடியும். நீங்கள் விசுவாசித்தால் தேவ மகிமை உங்கள் வாழ்வில் விளங்குவதைக் காண்பீர்கள்.
ஜெபம்:
அன்பின் பரம தகப்பனே, என் ஆண்டவரும் இரட்சருமாகிய இயேசு கிறிஸ்துவின் வாயிலாக இரட்சிப்பென்னும் ஈவை கொடுத்ததற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். இப்போதும் என்னுடைய சுதந்தரத்துக்கு அச்சாரமாகிய பரிசுத்த ஆவியினால் என்னை நிரப்பும். கொர்நேலியுவின் மேலும் அவன் வீட்டாரின்மேலும் உமது ஆவியை ஊற்றியவண்ணம் என்மீதும் என் வீட்டார்மேலும் ஊற்றிடும். தயவுசெய்து ஆழமான வாஞ்சையை என்னுள் உருவாக்கும்; பரிசுத்தத்தில் நடக்கும்படி, உமக்கு உண்மையாய் ஊழியம் செய்யும்படி உம்முடைய வல்லமை என்னை பெலப்படுத்தட்டும். நான் கேட்டால் நீர் பதில்கொடுப்பீர் என்றும், உம்முடைய மகிமை என் வாழ்வில் வெளிப்படும் என்றும் விசுவாசித்து இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.